“அமைப்பாய் திரள்வோம்” Vs “ரவுடிசம் பண்ணுவோம்”–வேலுநாயக்கர் முதல் காலா வரை.. அரசியல் இல்லா கதைக்களம்!

மக்களுக்கான அரசியலைப் பேசவரும் ஒரு கதை, ஏன் எப்போதும் ஒரு டான் பற்றிய கதையாக மாறுகிறது? வீரத்தினால் மட்டும் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்துவிட முடியாது. மக்களைச் சிந்தனை வயப்படுத்தி அரசியல் அதிகாரத்தை நோக்கி அழைத்து வர வேண்டும்.
வேலுநாயக்கர் முதல் காலா வரை.. அரசியல் இல்லா கதைக்களம்!
வேலுநாயக்கர் முதல் காலா வரை.. அரசியல் இல்லா கதைக்களம்!புதிய தலைமுறை
Published on

கபாலி மையத்தில் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றிலும் இருக்கும் மாணவர்கள், இளைஞர்கள் அவரிடம் தங்கள் பிரச்னைகளைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பள்ளிப்படிப்பை முடித்தபின் மேற்படிப்பு சேர்வதில் இருக்கும் சிக்கல்களையும் தங்களது வறுமை சூழ்ந்த அவலநிலையையும் எடுத்துச் சொல்வார்கள்.

அதற்கு “இதெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறீர்கள்?” என்று கபாலி சொல்ல..

“உங்களாலதான் எங்க பிரச்னையை தீர்க்க முடியும்னு நம்புறோம்” என்கின்றனர் இளைஞர்கள்.

பின்னர் பேசும் கபாலி, “நான் ஒரு ரவுடி.. அப்புடினு சொல்றாங்க.. சரி ரவுடிதான்.. ஆனா, கொஞ்சம் படிச்சு இருக்கேன்.. நான் என்ன செய்யணும் சொல்லுங்க” என்று கேட்பார்.

படம் அப்படியே ஓபன் எண்ட் ஆக முடிந்துவிடும்.

ஆம், ‘கபாலி’ படத்தின் இறுதிக்காட்சி இப்படித்தான் முடியும்...

கபாலி இறுதிக்காட்சி
கபாலி இறுதிக்காட்சி

அதாவது, ரவுடி.. கேங்ஸ்டர் என்று சொல்லப்படும் ஒருவரிடம், தங்கள் பிரச்னைகளுக்கு அவர்தான் தீர்வு காண்பார் என்று இளைஞர்கள் நம்புவதுபோல் வருகிறது.

கிட்டத்தட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்னால் அவர் குறித்து நடந்து கொண்டிருக்கும் உரையாடல்களைக் கவனித்தால் ’கபாலி’ க்ளைமாக்ஸ் உடன் இருக்கும் தொடர்பைப் புரிந்துகொள்ளலாம்.
வேலுநாயக்கர் முதல் காலா வரை.. அரசியல் இல்லா கதைக்களம்!
பொற்கொடி To பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘திருமதி. ஆம்ஸ்ட்ராங் B.A., B.L.’

சமூகத்தால் பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட கடும் உடல் உழைப்பைச் செலுத்தும் பின்னணியைக் கொண்ட மக்களின் பிரச்னையை அங்கொன்றும் இங்கொன்றுமாய் தொட்டுக்காட்டிய படம் ‘கபாலி’. ஆம், தோட்டத் தொழிலாளர் பிரச்னை, நிலப்பிரச்னை என சில காட்சிகளில் தொட்டுக் காட்டிவிட்டு, படம் பெரும்பாலும் கேங்ஸ்டர்களுக்கு இடையிலான யுத்தம் போல்தான் (நல்ல கேங்க் கெட்டவர்களை அழிப்பதாக வந்தாலும்..” இருக்கும். ஒரேநேரத்தில் அரசியல் படமாகவும், கேங்ஸ்டர் படமாகவும் இருக்கும்.

“சீனத் தொழிலாளர்களைவிட நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். அவர்களைவிட அதிகமாக வேண்டாம்; அவர்களுக்குச் சமமாகவாவது தமிழர்களுக்குக் கூலி வேண்டும்” என கபாலி முழக்கமிட்டு உரிமைகளைப் பெற்றுத் தரும் காட்சிகள் மக்களுக்கான அரசியல் போராட்டத்திற்கான முத்தாய்ப்பான காட்சி.

ரஜினி, ராதிகா ஆப்தே
ரஜினி, ராதிகா ஆப்தேகபாலி திரைப்படம்

அதேபோல், தமிழ்நேசன் மேடைகளில் பேசும் அரசியல் தெறிக்கும் வசனங்கள். தமிழ்நேசனாக கபாலி மாறும் சில காட்சிகள் என அரசியல் போராட்டத்திற்கான களம் நன்றாகவே அமையும். ஆனால், படமோ ஒருகட்டத்துக்கு மேல் தறிகெட்ட திசையில் எங்கெங்கோ போகும்.. அதனால் பேசவந்த அரசியல் புரியாமல் போனது.

வேலுநாயக்கர் முதல் காலா வரை.. அரசியல் இல்லா கதைக்களம்!
‘அவன் வாழ வேண்டியவன்’ நட்பின் ஒளியில் பிரகாசித்த வினோத்தை ஏன் கொன்றீர்கள் செல்வராகவன்? இது நியாயமா?
இங்கு நாம் சொல்லவரும் பிரச்னை என்னவென்றால், மக்களுக்கான அரசியலைப் பேசவரும் ஒரு கதை, எப்படி ஒரு டான் பற்றிய கதையாக மாறுகிறது என்பதை பற்றியது. கலையும் வாழ்வின் பிரதிபலிப்பது தான் என்பதால் சினிமாவை ஒரு உரையாடலை இங்கே செய்ய உள்ளோம்.

இந்த பிரச்னை சினிமா வரலாற்றில் காலம்காலமாக இருந்துவரும் ஒன்றுதான். ஹீரோ என்றால் மக்களுக்காகப் போராடும் ஒருவர் என்பது ஓகே… ஆனால், அவர் ஏன் கேங்ஸ்டராக இருக்க வேண்டும்? கமர்ஷியலுக்காக எடுக்கப்படும் ‘பாட்ஷா’ போன்ற படங்களைகூட விட்டுவிடலாம்.. ஆனால், 90களில் வெளியான ‘நாயகன்’, ‘தளபதி’ தொடங்கி சமீபத்தில் வெளியான ‘வடசென்னை’, ‘கபாலி’, ‘காலா’ வரை ஆழமான புரிதலோடு படம் எடுப்பவர்களுக்கும் ஏன் இந்த சிக்கல் வருகிறது?

‘நாயகன்’, ‘தளபதி’, ‘வடசென்னை’, ‘கபாலி’, ‘காலா’
‘நாயகன்’, ‘தளபதி’, ‘வடசென்னை’, ‘கபாலி’, ‘காலா’

மக்களுக்காக முன் நின்று போராட வேண்டும் என நினைக்கும் வேலுநாயக்கர் முதல் ’காலா’வில் வரும் வேங்கையன் வரை ஏன் எல்லோரும் கேங்ஸ்டர்களாக அறியப்படுகிறார்கள்? ஸ்மக்லிங் செய்கிறார்கள்..? கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள்..? ஆனால், அரசியல் மட்டும் ஏன் விடுபட்டுப் போகிறது..?

இந்த இடத்தில், வேங்கையன், வேலுநாயக்கர்கள் எந்தச் சூழ்நிலையில் உருவாகிறார்கள்? அவர்கள் உடனடியாக மக்கள் பிரச்னைகளில் தலையிட்டு அவர்களுக்காகக் குரல் கொடுக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், மும்பை போன்ற இடங்களில் வேலை தேடி பிழைப்பிற்குச் செல்லும் தமிழர்கள் உள்ளிட்ட பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். நெருக்கடியான சூழல்களில் அவர்களுக்கான ஒருவர் அங்கிருந்து எழவே செய்வார்.

வேலுநாயக்கர் முதல் காலா வரை.. அரசியல் இல்லா கதைக்களம்!
பகை வளர்ந்த கதை.. பல திருப்பங்களுடன் நகரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. அரசியல் கொலையா?

ஆனால், அரசியல் தெளிவுடன் பேசுகிறோம் என்று வரும் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்கள் தங்கள் படங்களில் என்ன செய்கிறார்கள்.

காலா என்பவர் யார்?
கபாலி என்பவர் யார்?
அன்பு என்பவர் யார்?

‘காலா’ படத்தில் வரும் சில காட்சிகளில் அரசியல் தெளிவு அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.. ”நிலம் உனக்கு அதிகாரம்.. நிலம் எங்களுக்கு வாழ்க்கை” என ஹரி தாதா முன்பு காலா பேசும் அந்த ஒற்றை வசனம் அதற்கு சாட்சி.. க்ளைமேக்ஸ்-க்கு முன்பாக மக்கள் மத்தியில் காலா பேசும் வசனங்கள் தெளிவான அரசியல் நீரோட்டம் கொண்டவை. ராவண காவியத்தை கண் முன் நிறுத்தியது தனி ரகமான காட்சி அமைப்புதான். ஸ்ரினாவிடம் ஹரிதாதா யார் அவன் எப்படி நமக்கு உதவுவான் என விளக்கும் காட்சிகள் அற்புதம்தான்.

ஆனால், ஹரி தாதாவை எதிர்க்கும் காலா களத்தில் என்னவாக இருக்கிறார்? அது தெளிவுபடுத்தப்படுகிறதா? ஏன் ஸெரீனா உட்பட அனைவரும் அவரை ரவுடி என்று அழைக்கிறார்கள்? ரவுடி இல்லை என்ற தெளிவுக்கு வந்த பிறகும் அவர் யாராக இருக்கிறார்? அதாவது காலாவின் அரசியல் தன்மை தெளிவுபடுத்தப்படுகிறதா என்பதான் இங்கு மையமான கேள்வி? ஒரு அமைப்பாக அவர் இயக்குகிறார் என்பது புரிகிறது.. ஆனால் அது தெளிவுபடுத்தப்படுகிறதா?

ரஜினி, நானா படேகர்
ரஜினி, நானா படேகர்காலா திரைப்படம்

அப்படியே, ’வடசென்னை’ படத்திற்கு வந்தால், படத்தின் மையமான கரு, ஒரு சில வியாபாரிகளின் நலனுக்காக காலம்காலமாக வசித்து வரும் மக்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த நினைப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் அரசியல் சக்திகளுக்கு எதிராக களமாடும் இருவர்தான் ராஜன் மற்றும் அன்பு. ஆனால், ஒட்டுமொத்த கதைக்களமும் கடத்தல், சிறையில் போதைப்பொருள் விற்பனை போன்றவற்றின் பின்புலத்திலேயே இருக்கும். இவையெல்லாம் யதார்த்தம் என்று எடுத்துக்கொண்டாலும்... அந்த யதார்த்தத்தை மீறி வரும் அன்பு என்ற கதாநாயகன் என்னவாக இருக்கின்றான்? அன்புவின் வாழ்க்கை, அனுபவம் அவனை மக்களுக்கானவனாக மாற்றுகிறது? இது குறைவான அளவிலே வருகிறது..

வாழ்க்கை அனுபவம் ஓகே... ஆனால், அரசியல் புரிதல் என்ன?

வேலுநாயக்கர் முதல் காலா வரை.. அரசியல் இல்லா கதைக்களம்!
“திமுகவில் இருப்பதால் நீங்க மேயர் அல்ல” To “திருமா அண்ணாவை விட்டுவிட மாட்டோம்” - ரஞ்சித் பேசியதென்ன?

மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில், ராஜனைப் போலவே மக்கள் விரோத அரசியலைத் தெளிவாகப் பேசும் அன்பு... அடுத்த காட்சியில் மக்களிடம் பேசும்போது அதன் பாதை மாறுகிறது.. “நாலு பேரு நல்லதுக்காக நம்ம வாழ்ந்த இடத்த ஏன் விட்டுக் கொடுக்கணும்? போராடணும்’’ என்று அன்பு சொல்லும்போது அதற்கு அரசியலில் இருக்க வேண்டும் என்று மக்கள் சொல்கிறார்கள். ஆனால், அன்பு அதனை அப்படியே புறந்தள்ளிவிட்டுச் செல்கிறார்.. அதாவது, “அரசியலில் இல்லை என்றால் நாம் செய்வதை ரவுடிசம் என்று சொல்வார்கள்.. நம்மல காப்பாத்திக்கிறது பேரு ரவுடிசம்னா.. ரவுடிசம் பண்ணுவோம்..” என்று அன்பு சொல்கிறான்.. இந்த இடத்தில்தான் அரசியல் குறித்த புரிதல் எவ்வளவு குறைவாக என்பது தெரியவருகிறது.

வடசென்னை படம்
வடசென்னை படம்

அரசியல் என்பது மனிதன் கண்டுபிடித்த பொன்னன விஷயங்களில் ஒன்று.. சமுதாயத்தை நல்வழிப்படுத்தி சரியான திசையில் கொண்டு செல்வதற்காக நாம் உருவாக்கிக் கொண்ட ஒன்று.. சுதந்திரப் போராட்டக் காலத்தில் கோபம்கொண்ட சில இளைஞர்கள் சில வெள்ளையர்களை கொலை செய்திருக்கிறார்கள். அவையெல்லாம் கனநேரத்தில் ஆத்திரத்தில் நடந்து முடிபவை. நிச்சயம், அவையும் சொந்த மக்களை கொன்று குவித்தவர்களுக்கு எதிரான போற்றுதலுக்குரிய செயல்கள்தான். ஆனால், மறைந்த தேசத் தலைவர் மகாத்மா காந்தி போன்றவர்கள் முன்னெடுத்ததுதான் அரசியல் போராட்டம். இன்னும் பலர் இருக்கிறார்கள்.. உதாரணத்திற்கு காந்தியை எடுத்துக் கொள்வோம்.. காந்தி மீது விமர்சனங்கள் இருக்கலாம்.. நாம் எடுத்துக் கொள்வது அரசியல் போராட்டம் என்பதை மட்டும் தான். அவர் களத்தில் இருந்த 30 வருடங்களையும் கவனித்தால் புரியும்.

அரசியல் போராட்டம் என்பதற்கு தெளிவான சிந்தனையும் களத்தில் அதற்கு குறுகிய மற்றும் நீண்டகால செயல்திட்டங்களும் உண்டு.

அரசியல் சிந்தனைகள் பல ஆயிரம்பேரை அதன் பின்னணியில் வகுத்து வரச் செய்யும். ஒரு மடிந்து போனாலும் அடுத்தவர்கள் அதனை கையில் ஏந்திச் செய்வார்கள்.. அந்த சித்தாந்தம் இயங்கிக் கொண்டே இருக்கும். ஆனால், மேற்படி நாம் பார்த்த பல படங்களிலும் அரசியல் குறித்த தெளிவான பார்வை இல்லாமல், அந்த இடத்தில் ரவுடி, கேங்ஸ்டர், கட்டப் பஞ்சாயத்து போன்றவை வந்துவிடுகிறது.

வீரத்தினால் மட்டும் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்துவிட முடியாது. மக்களைச் சிந்தனை வயப்படுத்தி அரசியல் அதிகாரத்தை நோக்கி அழைத்து வர வேண்டும். அப்படித்தான் பல அரசியல் தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பாமர மக்களையும் அரசியல் படுத்திய பெருமை காமராஜர், அண்ணா, ஜீவானந்தம் போன்ற மாபெரும் தலைவர்களுக்கு உண்டு.

முழுமையில் இருந்தால்தான் பகுதியின் பிரச்னை புரியும் தீர்க்கமுடியும்!

’வடசென்னை’ என்ற ஒரு பகுதியின் பிரச்னை என்பது அரசியலின் மையப்பகுதியில் இருந்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை. மையமான அரசியலில் இல்லாமல் எந்தப் பகுதியான பிரச்னைகளையும் தீர்க்க முடியாது.

கபாலி, வடசென்னை அன்பு - ராஜன், காலா
கபாலி, வடசென்னை அன்பு - ராஜன், காலா

அதேபோல தாராவியின் பிரச்னை என்பது ஒட்டுமொத்த மகாராஷ்டிராவையும் தாண்டி இந்திய ஆளும் வர்க்கத்தின் பின்னணியை தீர்மானிக்கும் மும்பை என்ற வணிக நகரின் பிரச்னை. இன்று குஜராத் இருப்பதைப்போல அன்று மும்பை இருந்தது.

காலாவும், கபாலியும், அன்புவும் அரசியல் மையத்தில் இருக்க வேண்டும்.

எந்த இடத்தில் இங்கு சிக்கல் வருகிறது என்றால், ஏழைகளுக்கு நீதிமன்றமோ, காவல்துறையோ அரசாங்கமோ, அரசியல்வாதிகளோ உதவாத நிலை இருக்கும்போது. நிகழ் உலக அரசாங்கங்கள் என்ற தன்மையை உருவாக்கும் கதைக்களங்களை உருவாக்குகிறார்கள்.

வேலுநாயக்கர் முதல் காலா வரை.. அரசியல் இல்லா கதைக்களம்!
அரசு கொடுத்த பட்டா இருக்கு; ஆனா நிலம் இல்லை- தொழிலாளிகளுக்கு நடக்கும் அநீதி; மாஞ்சோலையின் மறுபக்கம்!

இதனை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால் ‘தளபதி’ படத்தில் அவரும் அந்தக் காட்சியை உற்றுக் கவனித்தால் சற்றே விளங்கிக் கொள்ளலாம். அதற்கு அந்த வசனத்தை இங்கே முழுமையாக பார்ப்போம். அந்தக் காட்சி இப்படித்தான் தொடங்கும். (கீழே, வசனங்கள் முழுமையாக…)

அர்ஜூன் (கலெக்டர்) : இங்க உங்களுக்குனு ஒரு தனி கோர்ட், தனி போலீஸ்.. தனி ஆட்சியே நடத்துறீங்க. நீங்க கூப்பிட்டு அனுப்பினா யாரா இருந்தாலும் உங்க முன்னாடி வந்து நிக்கணும், இல்ல அடி உததான். நீங்க பார்த்துச் சொல்றதுதான் தீர்ப்பு. கோர்ட் என்ன சொன்னாலும் நீங்க வைக்கிறதுதான் சட்டம். நிலப்பிரச்னை, புருஷன் – பொண்டாட்டி சமாசாரம், வியாபாரம், குத்தகை, லைசென்ஸ் எல்லாத்துக்கும் நீங்கதான் நீதிபதி. உங்க வீடுதான் கோர்ட்.

தேவா : உதவி கேட்டு 10 ஆளுங்க வர்றாங்க.. எங்களால முடிஞ்சத செய்யுறோம்.

போலீஸ் எஸ்.பி 1 : உதவி செய்ய கோர்ட் இருக்கு, போலீஸ் இருக்கு, பெரிய அரசாங்கமே இருக்கு.. அவங்க செய்யட்டுமே.

நாகேஷ்: உங்களால முடியாததனாலதானே சார் எங்ககிட்ட வர்றாங்க.

தளபதி படத்தில் அரவிந்த்சாமி
தளபதி படத்தில் அரவிந்த்சாமி

அர்ஜூன்: அதனாலதான் வர்றாங்களா.. இல்ல, உங்ககிட்ட இருக்க பயத்துல வர்றாங்களா..

தேவா: அவங்க எங்ககிட்ட வர்றது உங்களுக்குப் பிடிக்களல..

அர்ஜூன்: பிடிக்கிறது, பிடிக்காதது என்பத பத்தி நாம பேச.. எது சரி, எது தப்புனு பேசுறோம்..

சூர்யா: கலெக்டர் சார், நீங்க எப்பவாவது ஏழையா இருந்திருக்கீங்களா, என்னிக்காவது பட்னியா இருந்திருக்கீங்களா.. பையில நாலணா காசு இல்லாம அலஞ்சு இருக்கீங்களா.. வயிறு காலியா இருக்கும்போது கோர்ட் செலவு, வக்கீல் செலவு கொடுக்க முடியாது சார்.. 100 தடவ கோர்ட் ஏறி எறங்க முடியாது.. என்ன பண்ணுவாங்க.. அவங்களுக்கு வேண்டியது நியாயம். அது எங்க கெடக்கிதோ அங்க போவாங்க.

தளபதி படத்தில் ரஜினி
தளபதி படத்தில் ரஜினி

போலீஸ்: நடுரோட்ல போட்டு அடிக்கிறதுதான் நியாயமா?

தேவா: இல்ல, போலீஸ் ஸ்டேஷன்ல கட்டிப்போட்டு லட்டியால அடிக்கிறதுதான் நியாயமா?

அர்ஜூன்: எது நியாயம், நியாயம் இல்லைனு முடிவு செய்யறதுக்குதான் சட்டம்னு ஒண்ணு இருக்கு.. அத செயல்படுத்த நாங்கெல்லாம் இருக்கோம்.

சூர்யா: நீங்க எது செஞ்சாலும் சரி, நாங்க செஞ்சா தப்பு..

அர்ஜூன்: கோர்ட்டும், அரசாங்கமும் சட்டப்படி செய்யறத சூர்யாவும், தேவாவும் செய்யறது தப்பு. நூறு அடியாள வச்சு ஊர நடத்துறது தப்பு.

சூர்யா: நல்லா இருக்கு சார்.. உங்ககிட்ட வந்து பெட்டிசன் கொண்டு வந்தா அத நீங்க பாத்துட்டு, இதுசரி இது தப்பு இவனுக்கு பட்டா கொடு இவனுக்கு பட்டா கொடுக்காத, நீ அப்படி செய், நீ இப்படி செய், அப்படி நீங்க சொல்லலாம். அதே மத்தவங்க செஞ்சா தப்பு. கலெக்டர் உதவி செய்யலாம். மத்தவங்க செய்யக் கூடாது. ஏன்னா உங்ககிட்ட அதிகாரம் இருக்கு.. கலெக்டர்ங்கற அதிகாரம்.. போலீஸ்ங்க்ற அதிகாரம்.. எங்ககிட்ட என்ன இருக்கு தெரியுமா சார்.. நம்பிக்கை.. ஜனங்க எங்க மேல வச்சிருக்க நம்பிக்கை.. உங்களால செய்ய முடியாதத, எங்களால செய்ய முடியும் அப்டிங்கிற நம்பிக்கை..”

அதாவது, மக்கள் தங்களுக்கான பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள அவர்களை தயார்படுத்தாமல், இது வேறு திசையில் பயணிக்கிறது.

’ஏழை சொல் அம்பலம் ஏறாது’ என்பதுபோல், மக்களுக்கு நீதி கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். மக்களுக்கு நீதி கிடைக்காதபோது அதனை பெறுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். இது களிவர்தனுக்கும் தேவாவுக்குமான யுத்தம் அல்ல... டான் லீக்கும் கபாலிக்குமான யுத்தம் அல்ல...

கபாலியும், தமிழ்நேசனும் அரசியல் தலைவர்கள். அவர்களுக்கு கேங்ஸ்டர்களுடன் என்ன வேலை? அரசியலையும் ரவுடிசத்தையும் ஏன் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டும்? ‘மெட்ராஸ்’ அன்புக்கும், ’விடுதலை’ வாத்தியாருக்கும் இருக்கும் அரசியல் புரிதல்கூட மேற்சொன்ன மற்ற கதாபாத்திரங்களில் இல்லை. ’மெட்ராஸ்’ அன்பு களத்தில் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒருவன்.. அதேபோல்தான், ’விடுதலை’யில் வரும் வாத்தியாரும்.. இருவரும் அரசியல் களத்தில் பயணிப்பவர்கள்..

வேலுநாயக்கர் முதல் காலா வரை.. அரசியல் இல்லா கதைக்களம்!
‘சிறகடித்து வானில் பறந்த..’ அன்பு... உணர்ச்சிகரமாக உயிர்கொடுத்த கலையரசன்!
விடுதலை வாத்தியார் (விஜய் சேதுபதி), மெட்ராஸ் அன்பு (கலையரசன்)
விடுதலை வாத்தியார் (விஜய் சேதுபதி), மெட்ராஸ் அன்பு (கலையரசன்)

பொதுவாகவே அரசியல் குறித்த ஒவ்வாமை தமிழ்சினிமா இயக்குநர்கள் பலருக்கும் இருக்கிறது. நிறைய படங்களில் அரசியல் கட்சிகள் யாரும் உள்ளே விடக்கூடாது என்ற வசனத்தை தொடர்ச்சியாக பல இடங்களில் பார்க்கக் கூடும்.

தவறான அரசியலும் அரசியல் தலைவர்களும் இருக்கவே செய்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், பிரச்னைகளுக்கு நல்ல அரசியல் மட்டுமே தீர்வு கொடுக்கும். அதனால், அரசியல் புரிதல் உள்ள இயக்குநர்கள் தெளிவாக அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கும் ஹீரோக்களை வடிவமைக்க வேண்டும்.

தமிழ்நேசன் ஆர்ப்பரிக்கும் வசனங்கள்போல் ஏராளமான வசனங்கள் இடம்பெற வேண்டும். அதைவிடுத்து, அரசியலையும் கேங்ஸ்டர் கலாசாரத்தையும் ஒன்றுபடுத்தி குழப்பிக்கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலில் என்று அவரும் போதும் அதிலும் சில நேரங்களில் அரசியல் சார் கொலைகளும், யுத்தங்களும் நடக்கவே செய்யும்.. அது அரசியல் போராட்டங்களுக்கு நடுவே நடப்பதை.. தான் முன்னெடுக்கும் மக்கள் சார்ந்த போராட்டங்களுக்கு கொடுக்கும் விலை.. அதெல்லாம் ஒரு நல்ல அனுபவமாக மாறும்.. ஆனால், மேற்படி நாம் சொன்ன குழப்பங்கள் அரசியல் பாதைக்கு அழைத்து செல்வது சிரமம் தான்.. பல மொழிகளில் முழுக்க அரசியல் சார்ந்த படங்கள் வரவே செய்கிறது.. அதனை நாம் மறந்துவிட வேண்டாம்..

அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால்; அரசியல் உங்கள் வாழ்க்கையில் தலையிடும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com