பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழில் அஜய் ஞானமுத்துவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவராக அறியப்பட்டார். இவரின் இயக்கத்தில் சமீபத்தில் உருவான ‘கென்னடி’ படம், தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இதனை முன்னிட்டு, பிரபல யூ-ட்யூப் தளத்திற்கு பேட்டியளித்த அவர், “ ‘கென்னடி’ திரைப்படம் முதலில் நடிகர் விக்ரமை, அதாவது சீயான் விக்ரமை மனதில் வைத்தே எழுதினேன். ஏனெனில் அவரின் செல்லப்பெயர் மற்றும் நிஜப்பெயர் ‘கென்னடி’ என்பதால், படத்திற்கும் ‘கென்னடி’ என்றே பெயர் வைத்தேன். இந்தப் படத்திற்காக அவரை தொடர்புக்கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. அதன்பிறகே ராகுலை வைத்து படம் எடுத்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில், நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள அனுராக் காஷ்யப், சமூக ஊடகங்களில் உள்ள எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் நலனுக்காக ஒரு வருடத்திற்கு முந்தைய நமது உரையாடலை மீண்டும் நினைவுக் கூர்ந்து பார்க்கிறேன். இந்தப் படத்திற்காக நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தீர்கள் என்றும், நான் உங்களுக்குப் பதிலளிக்கவில்லை என்றும் நீங்கள் வருத்தப்பட்டதை வேறொரு நடிகர் மூலம் கேள்விப்பட்டபோது, நானே உடனடியாக உங்களை அழைத்து, உங்களிடமிருந்து எந்த மின்னஞ்சலும், மெசேஜும் வரவில்லை என்று விளக்கினேன். நீங்கள் என்னைத் தொடர்பு கொண்ட மெயில் ஐடி நீண்ட நாட்களாக செயலில் இல்லை என்றும், மேலும் 2 ஆண்டுகளுக்கு முன்பே எனது மொபைல் எண் மாறிவிட்டது என்றும் தெரிவித்தேன்.
அத்துடன் உங்களுடனான தொலைப்பேசி அழைப்பின் போது நான் கூறியது போல், உங்களின் ‘கென்னடி’ படத்தை பார்ப்பதற்காக நான் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன், அதுவும் அந்தப் படம் எனது பெயரில் இருப்பதால். உங்களின் நல்ல தருணங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். நிறைந்த அன்புடன் சீயான் விக்ரம் என்கிற கென்னடி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, விக்ரமின் இந்த ட்விட்டர் பதிவுக்கு, இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் பதில் அளித்துள்ளார். அதில், “முற்றிலும் சரி பாஸ் சார். மக்களின் தகவலுக்காக, வேறொரு நடிகர் மூலம் நான் அவரைத் (விக்ரம்) தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் என்று அவர் கேட்டறிந்ததும், அவர் என்னை நேரடியாக அழைத்தார். அவரிடம் வேறொரு வாட்ஸ் அப் எண் இருப்பதை அப்போது நாங்கள் உணர்ந்தோம். பின்னர், நான் அவரை அணுகுவதற்கு சரியான தகவலை அவர் கொடுத்தார், மேலும் ஸ்கிரிப்டைப் படிப்பதிலும் மிகவும் ஆர்வம் காட்டினார். ஆனால் அதற்குள் நாங்கள் ஆட்களை தேர்வுசெய்து, ஒரு மாத ஷுட்டிங்கை முடித்திருந்தோம். படத்திற்கு ‘கென்னடி’ என்ற பெயரைப் பயன்படுத்தவும் அவர் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.
நான் நேர்காணலில் கூறியது என்னவெனில், படப்பிடிப்புக்கு முன்னால் என்ன நடந்தது, எப்படி உருவானது என்பதான கதை, படம் எப்படி ‘கென்னடி’ என்று அழைக்கப்பட்டது என்பது குறித்துதான். இதற்கு எந்த ஒரு மிகையான எதிர்வினையும் தேவையில்லை. சீயானோ அல்லது நானோ ஒன்றாக சேர்ந்து படம் செய்யாமல் போகப்போவதில்லை என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன். உங்களின் தகவலுக்காக, நாம் ‘சேது’ படத்திற்கு முந்தைய காலத்திற்கு செல்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.