‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து இணைந்துள்ள திரைப்படம் ‘லியோ’. விஜய்யின் 67-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடன் அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், நடிகைகள் த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.
இந்தப் படம் வருகிற அக்டோபர் 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இன்று இந்தப் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, விஜய் பாடியுள்ளார்.
அவருடன் சேர்ந்து அனிருத் மற்றும் அசால் கோலார் இணைந்து பாடியுள்ளனர். எழுத்தாளரும், பாடலாசிரியரும், ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ படங்களின் இணை இயக்குநருமான விஷ்ணு இடவன் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.
‘நா ரெடி தான் வரவா...
அண்ணன் நான் இறங்கி வரவா...
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா...
எவன் தடுத்தும் என் ரூட்டு தாண்டாதப்பா’ என்று பாடல் வரிகள் உள்ளது.
லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்த நிலையில், அதில் அவரது கழுத்தில் தேள் வடிவத்தில் டாட்டூ வரைந்திருப்பார். ‘லியோ’ என்றால் சிங்கம் (தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா). இதனால், லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில், ‘லியோ’ படமும் வருகிறதோ என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
‘விக்ரம்’ படத்தில் ‘கைதி’ படத்துடன் தொடர்புப்படுத்திய நிலையில், இந்தப் படம் ‘விக்ரம்’ படத்துடன் தொடர்புப்படுத்தி வருமோ என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். விக்ரம் படத்தில் யாரும் எதிர்பாராத வகையில் சூர்யாவின் கதாபாத்திரம் வைக்கப்பட்டதுபோல், லியோ படத்திலும் ஏதேனும் சர்ப்ரைஸ் இருக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் யூகிக்கின்றனர்.
”நான் ரெடி தான் வரவா..
அண்ணன் நான் எறங்கி வரவா..
நான் ரெடி தான் வரவா.. அண்ணன் நான் தனியா வரவா..
எவன் தடுத்தும் ஏன் ரூட்டு மாறாதப்பா..” இந்த வரிகளை மட்டும் தனியாக பார்த்தால் அரசியலுடன் தொடர்பு படுத்தும் வகையில் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நான் ரெடி பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியான ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.