விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும், விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ‘ஏ.கே.62’ படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகவும், அதற்கு ‘விடாமுயற்சி’ என்று பெயரிட்டுள்ளதாகவும் லைகா தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் பிறந்தநாளான மே மாதம் 1-ம் தேதி அறிவிப்பை வெளியிட்டது.
இதனையடுத்து விக்னேஷ் சிவன் தனது அடுத்தப் படத்தை ‘லவ் டுடே’ இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் ஒன்று உலா வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் வருடந்தோறும் மிக கோலாகலமாக நடைபெறும் கேன்ஸ் விழாவில் பங்கேற்பதற்காக விக்னேஷ் சிவன் சென்றுள்ளார்.
அவரின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள நிலையில், அங்கிருந்து சில புகைப்படங்களை தனது சமூகவலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
நேற்று துவங்கியுள்ள கேன்ஸ் திரைப்பட விழா, வருகிற 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக முன்னாள் உலக அழகிகளும், பாலிவுட் நடிகைகளுமான மனுஷி சில்லர், ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா உடனும் சென்றுள்ளனர். மேலும், மிருணாள் தாக்கூர், சாரா அலிகான், ஈஷா குப்தா, முன்னான் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அனில் கும்ப்ளே உள்பட பல பிரபலங்கள் அங்கு சென்றுள்ளனர். மேலும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையில் பங்குபெற்றுள்ளார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.