தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர்களிடம் முன் சம்பளம் பெற்றுக் கொண்டு கால்ஷீட் வழங்காத நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் என பட்டியல் எடுத்து, அந்நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என முடிவெடுக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் 5 பேர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றதாக சொல்லப்பட்டது. அவர்கள் யார் என்று தயாரிப்பாளர்களின் பொதுக்குழு கூட்டம், செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவிக்கவில்லை. எனினும், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைக்காத நடிகர்களின் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது. ஒத்துழைப்பு வழங்காத நடிகர்களிடம், நடிகர் சங்கம் விளக்கம் கேட்டு சொல்ல வேண்டும் என்று கடிதம் எழுதம் இருப்பதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறப்பட்டது.
மேலும், நடிகர் சங்கம் கொடுக்கும் பதிலை வைத்து அடுத்தகட்ட முடிவை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருந்தது. இதன் அடுத்த கட்டமாக தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம், அவர்கள் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர், நடிகையுடன் என்ன பிரச்சனை என்பதை கடிதம் மூலம் வரும் புதன் (28.6.2023) கிழமைக்குள் சங்கத்தில் சமர்பிக்க கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கடுத்து பிரச்சினைக்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுக்க உள்ளது தயாரிப்பாளர் சங்கம். இதற்கு ஒத்துழைப்பு அளிக்காத நடிகர்களுக்கு ரெட் கார்டு போடப்பட்டு அவர்களின் படங்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது என்றுக் கூறப்படுகிறது.