நாம் எல்லோருமே இசையின் ரசிகர்கள் தான். சந்தோஷம், துக்கம் என நம் எல்லா தருணங்களிலும் இசையே நம்மில் பலரைக் காப்பாற்றியிருக்கிறது. கரை சேர்த்திருக்கிறது. ஆனால், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று(10.09.2023) நடந்த ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி அந்த எண்ணத்தை குழி தோண்டிப் புதைத்துவிட்டது.
ஆகஸ்ட் மாதம் நடந்திருக்க வேண்டிய மறக்குமா நெஞ்சம் எனும் ரஹ்மானின் இசைக் கச்சேரி. மழை காரணமாக , நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு சில மணி நேரம் முன்பு ஒத்திவைக்கப்பட்டது. சென்னையில் இருப்பவர்களுக்குத் தெரியும் ஈசிஆரில் நடக்கும் நிகழ்ச்சி என்றால் எவ்வளவு மணி நேரத்துக்கு முன்பு கிளம்ப வேண்டும் என்று. பேச்சுக்கு அண்ணா நகரில் இருக்கும் ரசிகர் என வைத்துக்கொள்வோம். அவர் குறைந்த பட்சம் 3 மணிக்கு கிளம்பினால் தான் 5 மணிக்கேணும் மெட்ரோ வேலைப்பாடுகள் நடக்கும் ஓஎம்ஆர் சாலையையோ, அல்லது குறுகலான ஈசிஆர் சாலையையோ கடந்து நிகழ்ச்சி நடத்தும் இடத்துக்கு செல்ல முடியும். ஆனால், மதியம் மூன்று மணி அளவில் தான் நிகழ்ச்சி ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அண்ணா நகரில் இருந்தவர்கள் எல்லாம் அப்போதுதான் டைடல் சிக்னல் பாயிண்ட்டையோ , சென்னை ஒன் பாயிண்டையோ அடைந்திருப்பார்கள். ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம் என ரஹ்மான் அவர்களே ட்விட் செய்ததால், வேறு வழியின்றி சோக முகத்துடன் திரும்பி சென்றார்கள். ரசிகர்கள் அடுத்த செய்திக்காக காத்திருந்தார்கள்.
செப்டம்பர் 10ம் தேதி அதே இடத்தில் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்த முறை என்ன நடந்தாலும் கச்சேரி திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிப்பு வந்ததால், ' மானூத்து மந்தையிலே' என ஜாலியாக கிளம்பினார்கள் ரஹ்மான் பேன்ஸ். ஆனால், அங்கு நடந்ததோ வேறு.
முன்னரே சென்றவர்களை (இரண்டு மணிக்கு சென்றவர்கள்) உள்ளே அனுமதிக்கவில்லை. உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள் என இணையத்தில் புகைப்படங்கள் வெளிவரத் தொடங்கின. ஆனால், அடுத்தடுத்து நடந்த பிரச்னைகளுடன் ஒப்பிடுகையில் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது தான் பெருந்துயரம்.
7 மணி நிகழ்ச்சிக்கு ஐந்து மணிக்கு சென்றவர்கள்கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை என செய்திகள் வெளியாயின. காரணம் அப்போதே அரங்கம் நிரம்ப ஆரம்பித்திருந்தது. ஆகஸ்ட் மாத நிகழ்ச்சிக்கே எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்த நிலையில் ஏன் இப்படி என பலரும் குழம்பினார்கள். உண்மையில் டிக்கெட்கள் கடைசி நாள் வரை இணையத்தில் கிடைத்தது. ஆடுகளை அடைப்பது போல அடைத்துக்கொள்ளலாம் என கொள் அளவைக் கடந்து டிக்கெட் விற்கப்பட்டதாக இணையத்தில் ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். 2000, 5000 என செலவு செய்து வந்தவர்களிடம் மேலும் கார் பார்க்கிங், பைக் பார்க்கிங் திருவிழா காலங்களைப் போல கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் நான்கு முறை ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன். இந்த முறை அளவுக்கு மோசமான சம்பவங்கள் ஒரு போதும் நடந்ததில்லை என ட்விட் செய்திருக்கிறார் சதீஷ் குமார்.
கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளே நுழைந்திருந்ததால், ஏற்கெனசே அமர்ந்திருந்தவர்களுக்கு முன்னர் சிலர் நிற்கத் தொடங்கியிருக்கிறார்கள். யாருமே டிக்கெட் இல்லாமல் வந்தவர்கள் இல்லை என்பது தான் பெருங்கொடுமை. 2000 ரூபாய் கொடுத்து வந்தவர்களுக்கு உட்கார இருக்கை கூட இல்லை.
ஏற்கெனவே விற்கப்பட்ட டிக்கெட்களுக்கு மேலும் எப்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் விற்க முடிந்தது என்பது தான் எல்லோருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. நிகழ்ச்சி நடக்கும் நாள் வரை டிக்கெட்டை இணையத்தில் விற்றுக்கொண்டு இருந்தார்கள். பழைய டிக்கெட்டுக்கு ரீஃபண்ட் இல்லை என அறிவித்திருந்ததையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அப்படியெனில் தெரிந்தே அதிக டிக்கெட்டுகள் விற்கப்பட்டனவா என்கிற சந்தேகம் எழத்தானே செய்யும்.
X தளத்தில் @beef_parotttaa என்பவர் பதிவு செய்ததிருந்தது, உண்மையில் வேதனையை வரவழைத்தது. " எனக்குள் இருக்கும் ரசிகர் மொத்தமாய் ஒழிந்துபோன தினம். இதற்கு 100% ரஹ்மான் தான் பொறுப்பேற்க வேண்டும். நான் ஆறு சில்வர் டிக்கெட் வாங்கியிருந்தேன். ஆனால், ஆறு பாடல்கள் முடிவதற்குள்ளாகவே அங்கிருந்து கிளம்பும் சூழலுக்கு தள்ளப்பட்டேன். அந்த இடமே ஒரு அசாதரண சூழலை உருவாக்கியிருந்தது. நிகழ்ச்சி நடத்துபவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. டிக்கெட் விலை போதாது என்பது போல், வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதற்கும் அந்த இடம் மழையால் ஈரமாக இருந்தது. பார்க்கிங் செய்வதற்கான பாதுகாப்பு வசதிகள் கூட அந்த இடத்தில் இல்லை.
2 மணியிலிருந்து உள்ளே அனுமதிப்படுவார்கள் என சொல்லப்பட்டபோதும் 5 மணி வரை எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வெயில் தாளாமல் கீழே சரிவதைக் கண்டேன். அதன் பிறகு ஒரே கேட் வழியாக அனைவரும் அனுமதிக்கப்பட்டார்கள். முதலில் வலது பக்கம் இருக்கும் எந்த ஸ்பீக்கரும் வேலை செய்யவில்லை.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் வெளியே வந்துவிட்டோம். பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு கூட்ட நெரிசலின் போது ஆளாக்கப்பட்டதாக அறிகிறேன். ' எல்லா புகழும் இறைவனுக்கே' என்று சொன்னால் மட்டும் போதாது. நெடுஞ்சாலையில் தான் கச்சேரியை நடத்தவேண்டுமா ரஹ்மான். அதுவும் வார இறுதிநாளில். நீங்கள் இருக்கும் நிலைக்கு இது அழகா ரஹ்மான்..! :" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கூட்டம் எல்லை மீறவே வந்த ரசிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். டிக்கெட்கள் வைத்திருப்பவர்களை ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள் என யாரிடம் கேட்டாலும் பதில் இல்லையாம். 5000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் கூட வேறு வழியின்றி திரும்பி வர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வார இறுதி என்றால் சும்மாவே கிழக்கு கடற்கரை சாலையில் கூட்டம் அலைமோதும். இதில் இவர்களும் இணைந்துகொள்ள ECR, OMR சாலைகள் ஸ்தம்பித்தன.
தங்க டிக்கெட், வைர டிக்கெட் என்றெல்லாம் கலர் கலரா விற்கப்பட்ட டிக்கெட்களை வைத்து உள்ளே கூட யாராலும் நுழைய முடியவில்லை. திரும்பியும் செல்ல முடியவில்லை. காரணம் எல்லா பாதைகளும் அப்படியே நின்றுவிட்டன.
பல்வேறு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தியெல்லாம் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். அந்த பாதையெல்லாம் பார்க்கவே அபாயகரமானதாக இருக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறைந்தபட்ச விளக்கமோ, மன்னிப்போ கேட்கவேண்டும் என்பது தான் பலரின் எண்ணமாக இருக்கிறது. அதுதான் அறமும் கூட.
நிகழ்ச்சி கிட்டத்தட்ட 11 மணி அளவில் முடிந்திருந்தாலும் பலர் 2 மணி வரையிலும் கூட தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்.
ரஹ்மான் ரசிகர்களுக்கு இது நிச்சயம் ' மறக்குமா நெஞ்சம் ' தான்.