மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ‘மணிச்சித்ரதாழ்’ திரைப்படத்தை, இயக்குநர் பி. வாசு தமிழில் ‘சந்திரமுகி’ என்றப் பெயரில் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், வினீத், விஜயகுமார், ஷீலா, கே.ஆர். விஜயா, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2005-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
இதையடுத்து சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் சீக்குவலாக சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகியுள்ளது. ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், கதாநாயகனாக ராகவா லாரன்ஸும் நடித்துள்ளனர். வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார் முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த இத்திரைப்படம் நாளை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. லைகா தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாவதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு இன்று இரவு வருகை தந்த திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ், சந்திரமுகி திரைப்படம் இரண்டாம் பாகம் வெற்றி அடைய வேண்டி சிறப்பு வழிபாடு செய்தார். மின் இழுவை ரயில் வழியாக மலைக் கோவிலுக்கு சென்று ராஜ அலங்காரத்தில் முருகனை சாமி தரிசனம் செய்தார் அவர்.
பின்னர் போகர் சமாதிக்கு சென்று வழிபட்ட அவர், மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமம் சென்று அங்கு புலிப்பாணி ஜீவசமாதியை வணங்கினார். அங்கு சிறிது நேரம் தியானம் மேற்கொண்டு விட்டு புறப்பட்டார். திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் வருகை தந்தது அறிந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.