“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு, வாரம் இருமுறை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொண்டுள்ளார் நடிகர் போண்டா மணி. மேலும் இந்த நிலையிலும் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் போண்டா மணியின் நிலையை முற்றிலும் அறிந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவரது மகள் சாய் குமாரியின் மேற்படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டு, அவருடைய வேல்ஸ் கல்லூரியில் அவருக்கு பி.சி.ஏ படிக்க சீட் கொடுத்துள்ளார்.
போண்டாமணியின் மகள் சாய்குமாரி பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் அவர் 600-க்கு 400 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.
இதற்கு நடிகர் போண்டா மணி தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போண்டாமணி கூறுகையில், ''நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு எனக்கு கிடைத்த பரிசாக என் மகள் 12 ஆம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் பிறகு கல்லூரியில் சேர்க்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும் என வேதனையாக இருந்தது. ஆனால் ஐசரி கணேஷ் சார் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது உங்கள் மகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்தால் எவ்வளவு செலவானாலும் அவரை படிக்க வைக்கிறேன் என உறுதியளித்திருந்தார்.
அவர் அன்று சொன்னதை போல என் மகளின் ரிசல்ட்டை அறிந்தவுடனேயே அவருடைய வேல்ஸ் கல்லூரியில் ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் என் மகளுக்கு பிசிஏ படிக்க சீட் கொடுத்துள்ளார். இப்படி ஒரு நல்ல மனிதர் தெய்வத்திற்கு சமம். இது என் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, நான் எப்போதும் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன் என உருக்கமாக பேசியிருக்கிறார்.