வாழை | “நிஜத்தில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியவர்கள் இஸ்லாமியர்கள்”- மாரி செல்வராஜ்!

“வாழை திரைப்படத்தில் காட்டப்பட்ட விபத்தில் சிக்கியவர்களை நிஜத்தில் காப்பாற்றியவர்கள் இஸ்லாமிய நண்பர்கள்தான் என்பதை இன்று கூறுகிறேன். சாதி மத வேறுபாடின்றி எம் மக்களை அன்று காத்த தமிழ்ச்சமூகத்திற்கு என் நன்றிகள்” - இயக்குநர் மாரி செல்வராஜ்!
வாழை
வாழைமுகநூல்
Published on

செய்தியாளர்: சுகன்யா

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வாழை திரைப்படத்தின் 25 ஆம் நாள் வெற்றி விழாவானது நேற்று நடைபெற்றது.

நவ்வி ஸ்டுடியோஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இணைந்து தயாரித்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் வாழை படத்தின் 25 ஆம் நாள் வெற்றி விழாவில் வாழை படத்தில் பணிபுரிந்த அத்தனை கலைஞர்களுக்கும் நினைவு பரிசுகளை இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கினார்.

இந்த விழாவில் வாழை படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் கலையரசன், நடிகைகள் நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட அனைத்து திரைப்பட குழுவினர் கலந்து கொண்டனர்.

வாழை
வாழை: “ஆயிரம் வாழைத்தார்களை இதயத்தில் ஏற்றிவிட்டது அந்தக் காட்சி” - நெகிழ்ந்த முதலமைச்சர்!

நிகழ்ச்சியின் மேடையில் பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்,

“பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு வாழையில் மாரியுடன் இணைந்துள்ளேன். அதற்கு அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது இயக்குநர்கள் ரஞ்சித், மாரி, நலன், கார்த்திக் சுப்புராஜ் என எல்லோரும் தேர்ந்தெடுத்து நல்ல படங்களை இயக்கி வருகிறார்கள். நல்ல படங்களை எடுத்து அதன் மூலம் வருமானம் ஈட்டும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது பலருக்கும். சினிமா மிக நல்ல பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. வாழை ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. என்னுடைய சிறந்த திரைப்படங்களில் வாழை எப்போதும் முதன்மையாக இருக்கும். இந்த வெற்றி விழாவில் உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது. வாழை ஒரு வரலாற்று படம்” என தெரிவித்தார்.

நடிகர் கலையரசன் பேசுகையில்,

“வாழை திரைப்படத்தின் வெற்றி படமாகிய மக்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தின் தயாரிப்பாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மக்களோடு பணியாற்றியதில், மிகுந்த மகிழ்ச்சி.

முதல் நாளிலிருந்து போட்ட உழைப்பு பலன் கொடுத்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில், மக்களேவும் கதாபாத்திரமாக மாறி இருந்தார்கள். எந்தளவுக்கு எனக்கு பாராட்டு கிடைத்ததோ அதே அளவுக்கு ‘எல்லாத் திரைப்படத்தைப் போலவும் கலையரசன் இந்த திரைப்படத்திலும் இறந்துவிட்டார்’ என கூறி கலாய்க்கவும் செய்தார்கள்” என கலகலப்பாக தெரிவித்தார்.

நடிகை நிகிலா விமல் பேசுகையில்,

“இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதாபாத்திரத்தை எனக்கு தந்தமைக்கு அவருக்கு நன்றி. இந்த திரைப்படத்தின் மூலமாக என்னை அனைவரும் பூங்கொடி டீச்சர் என்று அழைப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அழகிய லைலா கொடுத்த புகழை விட பூங்கொடி டீச்சர் கொடுத்த பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. மொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

இறுதியாக நிகழ்ச்சியின் மேடையில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ்

”அனைவருக்கும் நன்றி,

இந்த விழா பற்றியே எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ்ச் சமூகம் அதிகமாக இந்த படத்தைப் பற்றி பேசிவிட்டார்கள். அதனால் இந்த மேடையில் பேசியவர்கள் வேகவேகமாக பேசிவிட்டார்கள்.

வாழை படம் எடுத்து முடித்துப் பிறகு இதை எப்படி மக்களிடம் கொண்டு போக போகிறோம் என யோசித்தேன். முதலில் தமிழ் திரையுலகர்களுக்கு காட்டுவோம், இயக்குநர்களிடம் நடிகர்களிடம் நண்பர்களிடம் இந்த படத்தை போட்டு காட்டுவோம்... அவர்கள் இந்த படத்தை எப்படி பார்க்கிறார்கள் என பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள் என பார்த்தேன்.

நான் அழைத்த அத்தனை பேரும் இந்த படத்தை பார்த்தார்கள். அப்படி பார்த்தது மட்டும் அல்லாமல் எப்படியாவது தமிழ்ச் சமூகத்தை இந்த படத்தை பார்க்க வைக்க வேண்டும் என நினைத்தார்கள். உண்மையாகவே எனக்கு அது பெரிய வெற்றியாக அமைந்தது. நான் நினைத்ததை விட சக இயக்குநர்களும் நடிகர்களும் படத்தை கொண்டாடினர். இது பெரிய நம்பிக்கையை எனக்கு கொடுத்தது.

வாழை படத்தின் வெற்றி மாரி செல்வராஜை தமிழ் சினிமா எவ்வளவு நம்புகிறது என காட்டுறது. எனது மதிப்பு என்ன, என் வாழ்க்கை மிச்சத்தை இந்த தமிழ்ச் சமூகம் எவ்வளவு நம்புகிறது என்பதையெல்லாம் இந்த படத்தின் மூலமாக நான் தெரிந்து கொண்டேன். அதற்காக ஒட்டுமொத்த திரை உலகிற்கும் நன்றி.

எந்தவொரு படைப்பாளிக்கும் தன்னை முழுதாக ஒருவர் நம்புவதுதான், மிகப் பெரிய பலம். அந்தவகையில் என்னை நம்பிய எனது நான்கு திரைப்படங்களின் தயாரிப்பாளுக்கு நன்றி. என் படத்தின் வெற்றியை என்னுடன் பயணிக்க கூடிய உதவி இயக்குநர்கள், என் படக்குழுவினர் எல்லோருக்கும் நன்றி தெரிவித்து அவர்களுக்கே சமர்பிக்கிறேன்.

எனது படத்திற்கு சண்டைக் காட்சிகளுக்கு நான் எப்போதுமே முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்.

வாழை
இந்திய சினிமாவையே அதிரவைத்த விஜய்.. ஒரே படத்தில் மாறும் வரலாறு.. கடைசி படமும்.. விஜய்யின் சம்பளமும்!

இந்த சிறுவர்களால் (வாழையில் நடித்த சிறுவர்களை குறிப்பிட்டு) என்ன வேண்டுமானலும் எப்படி வேண்டுமானலும் வேலை செய்ய முடியும். அது எனக்கு தெரிந்ததால்தான், நான் வாழ்ந்த வாழ்க்கையை இந்த சிறுவர்கள் மூலமாக கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். ஆனால் கலையரசன், திவ்யா, ஜானகி அம்மா இவர்கள் எல்லாம் எப்படி என் கதைக்கு ஒத்துக் கொண்டார்கள் என்ற சந்தேகம் எனக்கே இருந்தது. அனைவரும் கதையை உள்வாங்கி நடித்தார்கள்.

‘கிளைமேக்ஸ் காட்சியில் டீச்சர் வந்திருக்கலாம்’ என படம் பார்த்த எல்லோருமே கேட்டார்கள். ‘டீச்சர் எங்கே போனார்?’ என்றும் கேட்டார்கள். டீச்சரின் தேதி இல்லை... அதான் அவர் வரவில்லை. கடைசி பாடல் எடுக்கும்போது ஷூட்டிங் முடிந்த பிறகு, எடிட்டிங் நடந்தது. அதுவும் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து முழுமை அடையாமல் இருக்கிறது என நினைத்து அதன் பிறகு இந்த படத்தின் இறுதி காட்சிகளை மட்டும் தனியாக எடுத்தேன். அதனால்தான் டீச்சர் இருக்கவில்லை. என் வாழ்வில் நான் மிகவும் வருந்தும் விஷயம், டீச்சர் இருக்கும் காட்சியை நான் அங்கே வைக்கவில்லையே என்பது.

என் ஊர் மக்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காகதான் நான் படங்கள் செய்கிறேன். ‘ஏன்டா அங்கேயே படம் எடுக்கிற’ என சிலர் கேட்கின்றனர். அவர்களுக்கான பதில், எனக்கு அங்கேதான் நிறைய கதைகள் இருக்கிறது. எளிமையான உண்மையான தமிழ்ச் சமூகம் என்னை எந்த அளவுக்கு நம்புகிறது என என் படம் ஒவ்வொருமுறை வெளியான பிறகும் நான் புரிந்து கொள்கிறேன். வாழையும் அதற்கு விதிவிலக்கல்ல.

திருநெல்வேலியில் நான் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் பொழுது திரையரங்கில் இருந்த 700 பேரும் படம் முடியும் வரை இறுதிவரை சீட்டில் அமர்ந்திருந்தார்கள்.

30 வருடம் முன்பிருந்த என் பாட்டன் பற்றி நான் எதற்கு இப்போது படம் எடுக்க வேண்டும் என பலர் கேட்பதுண்டு. அதற்கு என் பதில்... என் கண்ணீரைம் என் கவலையையும் கலையாக மாற்றுவதுதான் எனது பெருமை.

முட்டி மோதி இந்த இடத்துக்கு நான் வந்திருக்கிறேன். என்னிடம் நிறைய கதைகள் இருக்கிறது. அத்தனை கதைகளும் சொல்லிவிட்டுதான் நான் இங்கிருந்து போவேன். நான் போகலாம் என முடிவு செய்யும்போது நான் நிறைய உருவாக்கி இருப்பேன்.

உண்மையில் இப்படத்துக்கு கிடைத்த வெற்றியை என்னால் கையாள முடியவில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் வாழை திரைப்படக் குழுவின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழையில் காட்டப்பட்ட விபத்து, அன்று நடந்தபோது அவர்களை காப்பாற்றியவர்கள் இஸ்லாமியர்கள்தான். அந்த உண்மை இப்போது வெளியே வந்திருக்கிறது. சாதி மதத்தை கடந்து அன்று உண்மையாக காப்பாற்றியவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை சம்பவத்தில் தப்பித்தவர்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் வெற்றி எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த ஆஸ்கார் விருது போல கருதுவோம். கலையால் சாத்தியமில்லாதது எதுவும் கிடையாது! இன்று இல்லையெனில் என்றைக்காவது அத்தனை மக்களையும் நான் வென்றே தீருவேன். வெற்றி பெறுவேன்.

என் மீதான பார்வையும் மாறும். மாரி செல்வராஜ் யார் என்று தெரிந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் வாழை. ஆனால் இதிலும் குழப்பம் இருக்கிறது என்றால், திரும்பவும் இதை எடுப்பேன். திரும்பத் திரும்ப எடுப்பேன்.

வாழை
வாழை

நிச்சயமாக வாழை 2 வரும். அதிலும் இதே சிறுவர்களை வைத்து எடுப்பேன். இதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கிறது. அது இன்னும் உங்களை புரிந்து கொள்ள வழிவகுக்கும். என்னை உருவாக்கிய இயக்குநர் ராம் அவர்களுக்கு நன்றி. அவருடைய தத்துவத்தை எனக்கு புகுத்தி ‘உனது வாழ்க்கையை படமாக்கு’ என்று எனக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறார். அவர் இல்லை என்றால் என் வாழ்க்கை என்னவாக இருக்குமோ என்று தெரியவில்லை.

வாழை
லால் சலாம்| “இழந்த காட்சிகளை மீட்டுவிட்டோம்..விரைவில் OTT வெளியீடு” - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நாங்கள் (ராமை குறிப்பிட்டு) அதிகமாக சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் எனக்கு அவர்தான்... அவருக்கு நான்தான் என்ற நம்பிக்கை இருவருக்குமே இருந்தது.

எனக்கு அதிகமாக முத்தம் கொடுத்த நடிகை என் கையை அதிகமாக பிடித்துக் கொண்ட அழுத நடிகை என்றால், அது வாழை திரைப்படத்தில் அம்மாவாக நடித்த ஜானகி என பாராட்டினார். இந்த கலைக்கு எப்போதும் நான் உண்மையாக இருப்பேன்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com