லியோ திரைப்படத்தில் நடித்ததில் இருந்தே அதனை குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பல கருத்துகள், சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்துவருகிறது. அந்த வரிசையில் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் லியோவில் நடித்த நடிகை த்ரிஷா குறித்து அவர் பேசிய தவறான, அருவருக்கத்தக்க சில வார்த்தைகளும் சமூக வலைதளங்களில் மிகுந்த பேசு பொருளாகியுள்ளது.
தன்னை பற்றிய கருத்துக்கு நடிகை த்ரிஷா தானே முன்வந்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து த்ரிஷா, “இவரைப்போன்றவர்கள் மனிதகுலத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று தனது x பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் த்ரிஷாவின் கருத்துக்கு ஆதரவாகவும் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இயக்குநர்கள் லோகேஷ் கனராஜ், கார்த்திக் சுப்புராஜ், நடிகை மாளவிகா மோகனன், பாடகி சின்மயி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் கண்டனமாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் “நான் சக நடிகைகளுக்கு எப்போதும் மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை தவறாக கட் செய்து த்ரிஷாவிடம் காண்பித்து கோபப்பட வைத்திருக்கிறார்கள். உண்மையிலேயே த்ரிஷா குறித்து உயர்வாகத்தான் சொல்லியிருப்பேன்” என்று விளக்கமளித்திருக்கிறார் மன்சூர் அலிகான்.
இது குறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக. உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு, சிரஜ்சீவி மலையகையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டுவந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன்.
அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா, நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா? திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என் கூட நடிச்சவங்கள்ளாம் MLA.M.P. மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும், லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய FAN ணுன்னு சொன்னேன்.
இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும். 350 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும். திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது. உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு.. பொழப்ப பாருங்கப்பா...” என்று பதிவிட்டுள்ளார்.
இதன் கேப்ஷனாக, “ஒரு மனிதனாக நான் மக்களுக்கு எவ்வளவோ செய்துள்ளேன், தொடர்ந்து செய்வேன். என் ஆளுமையை கேள்வி கேட்க வேண்டியதில்லை. இவ்விவகாரம், எனக்கு எதிரான அவதூறு என்பதை தவிர வேறில்லை. மனித குலத்துக்காக நான் எந்தளவுக்கு நிற்கிறேன் என்பது என் தமிழ் மக்களுக்கு தெரியும். நான் யார், நான் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்!” என்று பதிவிட்டுள்ளார் மன்சூர் அலிகான்.