வேலையில்லா பட்டதாரி பட விவகாரம்: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீதான வழக்கு ரத்து

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது தொடர்பாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்துசெய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்File image
Published on

தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் தமிழக அரசிடம், “நடிகர் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை. ஆக்வே தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்” என புகார் அளிக்கப்பட்டது. இப்புகார், கடந்த ஜூலை 25, 2014 அன்று அளிக்கப்பட்டது.

வேலையில்லா பட்டதாரி
வேலையில்லா பட்டதாரி

இதனடிப்படையில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம்) மற்றும் நடிகர் தனுஷூக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்தப் புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், புகாரை ரத்து செய்யக் கோரியும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், சைதாப்பேட்டையில் உள்ள வழக்கின் விசாரணையின்போது இருவரும் ஆஜராக விலக்கு அளித்தும், விசாரணைக்கு தடை விதித்தும் கடந்த மார்ச் 29 ஆம் தேதி உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்,
சென்னை உயர்நீதிமன்றம்,கோப்புப் படம்

பின்னர் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், “கடந்த 2003 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரத் தடை மற்றும் வர்த்தகம் விநியோக கட்டுப்பாட்டு சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ் எங்கள் மீதான புகார் விசாரணைக்கு உகந்தது அல்ல. உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், விநியோகஸ்தர்களின் விளம்பரங்களுக்கு மட்டுமே அவை பொருந்தும். தணிக்கை வாரியம் படத்துக்கு சான்றளித்துள்ளது. புகார் கொடுப்பதற்கு முன்பு விளக்கம் தர எந்த ஒரு வாய்ப்பையும் வழங்கவில்லை என்பதால் எங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில், “எங்கள் புகாரில் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மனுக்களை ஏற்க கூடாது. மாறாக அவர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com