வடிவேலு மற்றும் ஃபகத் பாசிலின் மிரட்டல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மாமன்னன்’. தனது மூன்றாவது படமாக இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் இயக்கியிருந்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், லால், அழகம் பெருமாள், விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்புப் பெற்றது.
மேலும், இப்படம் வெளியான நேரத்தில் வேறு எந்த படங்களும் புதிதாக களமிறங்காததால், திரையரங்குகளில் ‘மாமன்னன்’ படத்திற்கு நல்ல கூட்டம் நிறைந்தே காணப்பட்டது. இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் வெற்றியையொட்டி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “இந்த படத்துக்கு படத்தை எடுத்த நிறுவனம் செய்த விளம்பரத்தை விட படம் வெளியாகும் முன்பே பத்திரிகை, தொலைக்காட்சிகள் ஆகியவை அதிகமாக விளம்பரம் கொடுத்தீர்கள். என்னுடைய முதல் படம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ வெற்றி பெற்றது. அதேபோல கடைசி படம் ‘மாமன்னன்’ வெற்றி பெற்றுள்ளது. ‘மாமன்னன்’ திரைப்படத்தை முதலில் 510 திரையரங்குகளில் வெளியிட்டோம். தற்போது இரண்டாவது வாரத்தில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த அளவுக்கு ‘மாமன்னன்’ படத்துக்கு பெரிய வெற்றியை கொடுத்ததற்கு நன்றி.
இந்த மேடை கடைசி சினிமா மேடை என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த படத்தின் 50-வது நாள் விழா நடக்கும். அதிலும் நான் பங்கேற்பேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன். இப்படத்தில் ஒரு முக்கிய சண்டை காட்சி 3 நாட்கள் நடத்த திட்டமிட்டு, 5 நாட்கள் வரை தொடர்ந்து எடுக்கப்பட்டது. குறிப்பாக வடிவேலின் நடிப்பை பார்த்து யாராலும் அழாமல் இருக்க முடியாது. இப்படத்தின் உண்மையான ‘மாமன்னன்’ வடிவேலு தான்.
நான் கடைசி படம் நடிக்க போறேன்னு சொல்லி தான், ஏ.ஆர்.ரஹ்மானை இந்த படத்தில் இசையமைக்க சம்மதிக்க வைத்தோம். இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு வண்டி, எனது அப்பா (முதலமைச்சர்) நிஜமாகவே பயன்படுத்திய வண்டி. மற்றொரு வண்டி நான் பயன்படுத்திய வண்டி. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களையும் சேர்த்து ‘மாமன்னன்’ படம் 9 நாட்களில் 52 கோடி வசூல் பெற்றுள்ளது. இதுதான் நான் நடித்த படத்தில் அதிக வசூல் செய்துள்ளது.
வரும் 14 ஆம் தேதி தெலுங்கில் இந்த படம் வெளியாகப்போகிறது” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 9 நாட்களில் 52 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், நேற்றுடன் சேர்த்து 10 நாட்களில் இப்படம் ரூ. 54.9 கோடி ரூபாய் வசூலித்துள்ளது; இதில் தமிழ்நாட்டில் மட்டும் 42 கோடி ரூபாய வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.