கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகிலுள்ள பிரபல திரையரங்கில் வழக்கமாக பால்கனி டிக்கெட் விலை 200 ரூபாய் என்றே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது. லியோ திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கோவையின் குறிப்பிட்ட அந்த திரையரங்கில், 200 ரூபாய் டிக்கெட்டுடன் சேர்த்து டீ, காபி, தின்பண்டங்கள், குளிர்பானங்கள் என அனைத்தையும் தருவதாக கூறி, இதொரு காம்போ பேக் என்று அறிவித்துள்ளனர் உரிமையாளர்கள். இதற்காக டிக்கெட் விலையை 400 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.
மேலும் திண்பண்டங்களை தவிர்த்து டிக்கெட் மட்டும் பெற முடியாது என்றும், அதனையும் சேர்த்துதான் வாங்க முடியும் என்றும் அந்த திரையரங்கு ஊழியர் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை விதிகள் 1957 விதிகளின்படி, ‘புதிய திரைப்படம் வெளியிடும் போது, கூடுதல் டிக்கெட் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது. முறையான பார்க்கிங் வசதியுடன், சுகாதாரமான சூழ்நிலை போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்’ என்ற விதிமுறை உள்ளது.
இத்துடன்கூடிய அறிவிப்பை கோவை மாவட்ட ஆட்சியரேவும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும் திரையரங்குகள் இப்படி செய்வது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.