மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை சென்று பார்வையிட்டனர். சென்னை காசி திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் 9 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து, நடிகர் கார்த்தியும் பார்த்தார். பின்னர் திரையரங்கிலிருந்து நடிகர் கார்த்தி வெளியே வந்தபோது, அவரை ரசிகர்கள், பத்திரிகைகள் சூழ்ந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் திரையரங்கின் முகப்பு கண்ணாடி உடைந்தது சிதறியது. கண்ணாடி உடைந்ததில் அங்கிருந்த இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டநிலையில், கார்த்தியின் பாதுகாவலர்கள் உடனடியாக அவரை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நடிகர் கார்த்தி, “ரசிகர்கள் உடன் படம் பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. காலத்துக்கும் நிலைத்து நிற்கும் படம். இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன் என்பது மிகப்பெரிய பெருமைதான். என்னால் எதுவும் பேச முடியவில்லை. படம் பார்த்து முடித்த உணர்வு இன்னும் போகவில்லை. அதனால் எதுவும் சொல்ல முடியலை. ரகுமான் சார் இசை, விக்ரம் சார் நடிப்பு, நான் நேராக மணி சாரதான் பார்க்க போகிறேன். படம் முழுவதும் ரசிக்கும் வகையில் இருக்கிறது. ஒவ்வொருத்தரின் உழைப்பும் தனித்தனியாக தெரிகிறது. இது ஒரு மிகப்பெரும் அனுபவம்” என்று தெரிவித்தார்.