கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படப்பிடிப்பு நிறைவு - படக்குழு பகிர்ந்த சுவாரஸ்யம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்Twitter
Published on

‘ஜிகர்தண்டா’ படம் வெற்றிப்பெற்றதையடுத்து அப்படத்தின் இரண்டாவது பாகமான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்தார். கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், சென்னையில் கடந்த புதன்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்சின் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் முதன்மை வேடங்களில் நடித்துவந்த ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றனர்.

எஸ்.ஜே.சூர்யா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
எஸ்.ஜே.சூர்யா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல சுவாரசியமான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதோடு, திரைப்படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பெரும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் அப்படியொரு பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு மிக முக்கியமான காட்சிகள் சில அங்கு பதிவு செய்யப்பட்டன.

இதுகுறித்து தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறுகையில், "படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிரமாண்டமான திரைப்படம் அதிகப் பொருட்செலவில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை திரைக்கு கொண்டு வர நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படப்பிடிப்பு அமைந்திருந்தது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படம் சிறப்பாக உருவாகியுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு தற்போது நாங்கள் தயாராக உள்ளோம். பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' வழங்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மிகப்பெரிய படத்திற்கு ஆதரவளித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி" என்றார்.

ராகவா லாரன்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
ராகவா லாரன்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

'மெர்குரி' மற்றும் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' போன்ற படங்களில் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பணியாற்றிய, தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 'ஜிகர்தண்டா' உட்பட கார்த்திக் சுப்புராஜின் பல படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 'ஜிகர்தண்டா'வை எடிட்டிங் செய்து தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷனின் உதவியாளரான ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பை கையாளுகிறார்.

விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படமான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான அதிரடி நகைச்சுவை கலந்த மாபெரும் வெற்றிப் படமான 'ஜிகர்தண்டா'வைப் போலவே இந்தப் படமும் ஆக்ஷன் கேங்ஸ்டர் கதையமைப்பில் உருவாகிறது. பல திருப்பங்கள் நிறைந்த ஜிகர்தண்டாவை போல் இப்படமும் இன்னும் விறுவிறுப்புடன் கூடிய ஒரு டிரெண்ட் செட்டர் படமாக அமையும் என்று படக்குழு உறுதி செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com