அரை நூற்றாண்டுக்கு மேலான கலைப்பயணம். நூற்றுக்கணக்கான படைப்புகள். நடிப்பு மட்டுமின்றி சினிமாவின் பிரதான துறைகளில் முத்திரை பதித்த மூத்த கலைஞன் கமல்ஹாசன் சினிமாவில் அடுத்த மைல்கல்லை எட்டியிருக்கிறார்.
‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பாடலின் மூலம் கள்ளம் கபடம் அறியா பிஞ்சு முகம் கொண்ட இந்த சிறுவன்தான், அரை நூற்றாண்டுக்கு மேல் இந்திய மக்களின் இதயங்களைக் கொய்துகொண்ட கலைஞாகியிருக்கிறான். அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த களத்தூர் கண்ணம்மா திரைப்படம், 64 ஆண்டுகளுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது. அன்று தொடங்கி கமலின் வெற்றிப்பயணம் கடிகாரத்தின் நொடி முள்ளாய் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.
நடிகராக அறிமுகமான கமல்ஹாசன், அந்த வட்டத்துக்குள் தன்னை சுருக்கிக்கொள்ளாமல், தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டு தனித்துவ கலைஞாக உருவெடுத்தார். இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பாடகர், பாடலாசிரியர் என சினிமாவின் முக்கியத் துறைகளில் எல்லாம், எளிதில் மிஞ்சமுடியாத சாதனைகளைப் படைத்தவர், கமல்ஹாசன். இவர் போடாத வேடங்கள் இல்லை, ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை.
இந்த சினிமா கமலுக்கு எவ்வளவு புகழமையும், வெற்றியையும் கொடுத்திருக்கிறதோ அதே அளவுக்கு தோல்வியையும், நெருக்கடிகளையும் கொடுத்திருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் துவண்டுவிடாத இந்த தனித்துவக் கலைஞன், 68 வயதிலும் வெற்றிகளை குவித்து வருகிறார்.
மக்கள் மனத்தில் இருந்து மறைந்துவிடாமல் 60 ஆண்டுகள் சினிமாவில் இருப்பதே சவால் எனும்போது, உச்சநட்சத்திரமாக மின்னிக்கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். இந்த நட்சத்திரம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மங்காமல் ஒளிவீசும் என்பதில் சந்தேகமில்லை.