ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த திரைப்படம் ‘லவ் டுடே’. இப்படம் ரூ.100 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. இந்தப் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது.
அஜித்-லைகா கூட்டணியில் உருவாக இருந்த ‘ஏ.கே.62’ திரைப்படம் பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு, மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதீப் ரங்கநாதனை வைத்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், அப்படத்திற்காக, மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளும், பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதில் உண்மையில்லை என்று ‘இந்தியா டுடே’ ஆங்கில செய்தி இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த ஊடகத்துக்கு கிடைத்த நம்பகமான கிடைத்த ஆதாரங்களின்படி, “ஜான்வி கபூர் நடிப்பதாக கூறப்படும் செய்தி உண்மையல்ல. இந்த திட்டத்திற்காக ஜான்வி கபூரை படக்குழு அணுகவில்லை. விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் ஸ்கிரிப்டை இன்னும் இறுதி செய்து வருகின்றனர். ஸ்கிரிப்ட் இறுதியானப் பிறகுதான், மற்ற நடிகர், நடிகைகள் குறித்து பார்க்கப்படும். மேலும் பிரதீப் ரங்கநாதன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் பாணியில் இப்படமும் ஒரு பொதுவான காதல் கதையாக இருக்கும்” என்று தெரியவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.