சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் அலுவலகத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒழுங்கு விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிகள் குறித்தும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் எடுத்த தீர்மானங்களை ஒழுங்குமுறைப்படுத்துவது குறித்தும் பேசினார்.
மேலும், தமிழ் திரைப்படத்துறை சீராக ஒழுக்கத்துடன் நடக்க வேண்டும் என கூறினார். அதற்காக சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், தயாரிப்பாளர் சங்கம் முறையாக தெரிவித்துவிட்டு தான் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என தெரிவித்தார். அனைத்து துறைகளையும் ஒன்றிணைக்க திரைப்பட தொழிலாளர் சங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அவர் கூறினார்.
தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், தமிழ் திரைப்படங்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதை குறித்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “கதை உரிமைகள் பிரச்சனை ஏற்பட்டால் இயக்குநர்களே பொறுப்பேற்க வேண்டும். எத்தனை நாட்கள் படப்பிடிப்பு, படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் எவ்வளவு என இயக்குநர் முறையாக திட்டமிட வேண்டும். திரைப்படத்தின் அனைத்து லொகேஷன்களையும் முடிவு செய்த பிறகு படப்பிடிப்பை தொடங்க வேண்டும். இயக்குநர் தெரிவித்த காலக்கெடுவிற்குள் மற்றும் பட்ஜெட்டில் திரைப்படத்தை முடிக்க வேண்டும்” என்று கூறினார்.
அத்துடன் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், ஔிப்பதிவாளர், கலை இயக்குநர், சண்டை பயிற்சியாளர், நடன இயக்குநர், சினிமா மேலாளர், அவுட்டோர் யூனிட் உள்ளிட்டவற்றில் உள்ள பல நிபந்தனைகளை தெரிவித்தார். ஆகஸ்ட் 15 முதல் பாதுகாப்பற்ற விதத்தில் நடைபெறும் படப்பிடிப்புகளில் தொழிலாளர் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறினார். இந்த ஆண்டு மட்டும் 6 தொழிலாளர்கள் படபிடிப்புகளில் ஏற்பட்ட விபத்துகளில் இறந்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.