கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு, திரையரங்கில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை மீண்டும் பழையபடி அதிகரித்து வருகிறது. ஓடிடியை மீறி சிறு பட்ஜெட் படங்களும் திரையரங்கை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளன. குறிப்பாக, கடந்த 2022 ஆம் ஆண்டைவிட, 2023 ஆம் ஆண்டில் திரையரங்கு கிடைக்காமல் அல்லது முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாவதால், ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டு படங்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், ஜூலை மாதத்தின் கடைசி வாரமான இவ்வாரத்தின் வெள்ளிக்கிழமை தமிழ் திரையுலகில் இருந்து எட்டு படங்கள் வெளியாகவுள்ளன. ஆனால், இதில் என்ன சிறப்பான அம்சம் என்னவென்றால், வெளியாகவுள்ள 8 படங்களில் 6 படங்களின் தலைப்புகள் ஆங்கிலத்தில் உள்ளதுதான். அதன்படி, சந்தானத்தில் ‘DD Returns’, பரத்தின் ‘Love’, ஹரீஷ் கல்யாணின் ‘LGM’, அஸ்வினின் ‘Pizza-3’, உதய் கார்த்திக்கின் ‘Dinosaurs’, ‘Terror’ ஆகியப் படங்களுக்கு ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படங்களுடன், ‘யோக்கியன்’, ‘அறுமுடைத்த கொம்பு’ உள்ளிட்ட படங்களும் வெளியாகவுள்ளன.
தமிழ்நாடு தொழிலாளர்களையே படத்தின் தமிழ் படங்களின் வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வமணி கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இந்த முடிவினை பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், தமிழ் படங்களுக்கு ஆங்கில தலைப்புகள் மட்டும் வைத்திருப்பது சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.