தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்கள் வரிசையில் தற்பொழுது நெல்சன் திலீப்குமாரின் பெயரும் உச்சரிக்கப்படுகிறது. குறுகிய காலத்துக்குள் இது சாத்தியமானதை போல தோன்றலாம். நிச்சயம் அது உண்மை இல்லை. இதற்கு பின்னால் நெல்சனின் அயராத பல ஆண்டுகால உழைப்பு இருக்கிறது.
தனது அயராத உழைப்பினால் குறுகிய ஆண்டுகளுக்குள் உச்சத்தை தொட்ட இயக்குனர் நெல்சனின் 40வது பிறந்ததினம் இன்று... இந்நாளில், அவர் கடந்து வந்த பாதையை சற்றே ரீவெண்ட் செய்து பார்க்கலாம்!
இண்ஸ்டா, யூட்யூப் போன்ற வலைதளங்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் புதுபுது இயக்குனர்கள் ஆங்காங்கே அவதரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் மக்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக தி பெஸ்ட் என்ற ஒன்றை கொடுப்பதற்காக போட்டிபோட்டுக்கொண்டு உழைக்கின்றனர்.
அப்படி ஒன்றல்ல இரண்டல்ல... எடுத்த 4 படங்களிலும் மக்களின் பல்ஸை நன்கு தெரிந்துக்கொண்டு, அதற்கேற்றாற்போல் பெஸ்டை கொடுத்தவர் நெல்சன். இயக்குனராக அறிமுகமாகி குறுகிய காலத்திற்குள்ளாக தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் தன்னைப்பற்றியும், தான் கடந்து வந்த பாதைப்பற்றியும் சில இடங்களில் கூறியுள்ளார்.
அதன்படி நெல்சன் திரைத்துறைக்கு வந்ததே அவர் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காகதானாம். விருப்பம் இல்லாமல் விஸ்காம் எடுத்து படித்து வந்தவருக்கு, அவருடன் படித்த நண்பரின் கேமராவைக் கொண்டு புகைப்படும் எடுப்பதுதான் அன்றைய பொழுதுபோக்கு. அதில் சில புகைப்படங்கள் சின்னசின்ன விருதுகளை வாங்கவே “சரி நமக்கும் புகைப்படம் எடுக்க தெரிஞ்சு இருக்கு” என்று நினைத்துக்கொண்டு, கேமராவும் கையுமாக இருந்திருக்கிறார்.
விஸ்காம் முடித்தவருக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த நிலையில் இவரின் பார்வை விஜய் டிவியின் பக்கம் போய் இருக்கிறது. அங்கே ‘தெரிஞ்சவங்க யாராவது இருந்தா உள்ளே வரலாம்’ என்று கூறி வந்த வழியே இவரை வெளியே அனுப்பியுள்ளனர் சிலர். ‘யாரையும் தெரியாத எனக்கு தெரிஞ்சவன எங்கிருந்து கூட்டிட்டு வருவது’ என்று Dark காமெடிபோல யோசித்தவாறு எதிரில் இருந்த டீ கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்திருக்கிறார்.
அச்சமயம், விஜய் டிவி பணியாளர் ஒருவர், சில இண்டன்ஷிப் மாணவர்களை கேட்டை திறந்து உள்ளே அழைத்துச் சென்றுள்ளார். அதைக்கண்ட நெல்சன், தானும் ஒரு மாணவராய் உள்ளே சென்றுவிட்டாராம். இதுதான் அவரது எண்ட்ரி. இதற்கு அடுத்த அடுத்த வளர்ச்சி எல்லாமே இவரின் கடுமையான உழைப்பால் வந்தவை.
தொடக்கத்தில் சேனலில் சில ரியாலிட்டி ஷோக்களுக்கு பணியாற்றி இருக்கிறார். 2005ல் அழகி என்ற நிகழ்ச்சியில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதில் பெற்ற அனுபவத்தைக்கொண்டு ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர், பிக்பாஸ் தமிழ் என பல நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக இருந்து இருக்கிறார். அவை அனைத்துமே, மக்களின் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகள்.
அதன் பிறகு சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வர முயற்சி செய்துள்ளார். அதன் முதல்முயற்சியாக 2010 சிலம்பரசன் நடிப்பில் உருவான வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். ஆனால் சில பல காரணங்களால் அப்படம் பாதியில் நின்று போனது. ஆனால் நெல்சன் துவண்டு விடவில்லை. விக்கிரமாதித்தன் வேதாளம் போன்று, மீண்டும் இயக்குனராக முயன்றுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் இவருக்கு நல்ல நண்பர், ஆகவே நண்பரின் பரிந்துரையில் லைக்கா தயாரிப்பு நிறுவனத்தை அனுகி தன் கதையை சொல்லியிருக்கிறார். அப்படித்தான் உருவானது நயன்தாரா உடனான ‘கோலமாவு கோகிலா’. படம் சூப்பர் ஹிட். அதுமட்டுமல்லாமல் இந்தபடம் ‘இயக்குனர்’ நெல்சன் என்ற பெயரையும் இவருக்கு வாங்கி தந்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படத்தினை இயக்கினார். அதுவும் சூப்பர் ஹிட். அனிருத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் அருமை. 40 கோடியில் உருவான டாக்டர் படம், 100 கோடி ரூபாய் வரை வசூலை பாக்ஸ் ஆபிஸில் பெற்றது என்ற ஒரு தகவலும் உண்டு.
அடுத்ததாக விஜயின் 65 வது படமான பீஸ்ட் படத்தினை இயக்கினார். இதிலும் அனிருத்தான் இசை. இப்படத்தின் பாடல்கள் வேறலெவலில் ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக்குத்து பாடல். ஆனால் எதிர்பார்த்த படி படம் ஓடவில்லை. கலவையான விமர்சனங்களே கிடைத்தன என்றாலும் 250 கோடி ரூபாய் வசூல் பெற்றதாக கூறப்படுகிறது.
இப்படம் பற்றி நெறியாளர் ஒருவர் இவரிடம், “சார் இப்படம் நல்லா இருக்குமா? வெளியில் வேறுமாதிரி கருத்து நிலவுகிறதே?” என்று கேள்வி எழுப்பும் போது, “என் படம் எனக்கு பிடிக்காதா? எனக்கு பிடிச்சுருக்கு. ‘உன் படம் உனக்கு பிடிக்கும், எங்களுக்கு பிடிக்கனுமேடா….’ன்னு தானே நினைக்கிறீங்க… கண்டிப்பா பிடிக்கும்” என்று நகைச்சுவையாக பேசி மக்களின் கவனத்தை கவர்ந்திருப்பார்.
இவரின் பேச்சு போலவே, இவர் எடுத்த அனைத்து படத்திலும் எதார்த்தமாக, டார்க் காமெடி கலந்து இருக்கும். அதே போல் இவரால் சொல்லப்படும் கதாபாத்திரங்களுக்குள், வெளியில் தெரியாத இன்னொரு முகமும் இருக்கும்.
கோலமாவு கோகிலாவில், கதாநாயகி ஒரு சாதாரண பயந்த சுபாவம் கொண்ட பெண்ணாக காட்டப்படுவார். ஆனால் அவருக்குள் இருக்கும் இன்னொரு முகம்தான் படத்தின் ஹைலைட்.
அதே போல டாக்டர் படத்திலும், அப்பாவியான டாக்டர் ஒருவர், மிக தைரியமாக வில்லனிடமிருந்து குழந்தைகளை காப்பாற்றும் கதாபாத்திரம். அதன்பின் வெளியான பீஸ்ட்டும் அப்படியே. கடைசியாக நெல்சன் இயக்கத்தில் வெளியாகி வசூலை வாரி குவித்த மெஹா ஹிட் வெற்றியை தந்த ஜெயிலரில் கூட, ரஜினியின் இன்னொறு முகத்தைதான் அழுத்தமான கதாபாத்திரமாக காட்டியிருப்பார்.
படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இவர் இப்படிதான். வெளியில் இவரா டைரக்டர்? என்று கண்ணத்தில் கை வைக்கும் அளவிற்கு அலட்டல் இல்லாத எளிமையான மனிதர். ஆனால் டைரக்ஷன் என்று வந்துவிட்டால், எனக்கு வேறொரு முகம் இருக்கு என்று பட்டையை கிளப்பி விடுவார்.
தனது 4வது படத்திலேயே தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரை ஒன்றாக இணைத்து படம் எடுத்தார். இது முன்னனி இயக்குனர்கள் பலரின் புருவத்தை உயர்த்த வைத்தது.
இத்தோடு நிற்காமல், கடந்த மாதம் ‘ஃபிளெமென்ட் பிக்சர்ஸ்' (Filament Pictures) என்று தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, கவின் நடிப்பில் ஃபிளடி பெக்கர் என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளராக அவதாரமும் எடுத்துள்ளார். இதிலும் நிச்சயம் அழுத்தம் பதிப்பார் என நம்பலாம்!
மேலும் மேலும் உயரத்திற்கு வர நெல்சனுக்கு நாமும் நம் வாழ்த்துகளை உரித்தாக்குவோம்... வாழ்த்துகள் நெல்சன்!