செய்தியாளர்: ராஜன்
துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக பைசன் - காளமாடன் படப்பிடிப்பிற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் சென்றிருக்கிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்...
“சினிமா துறை ரொம்ப ஆரோக்கியமாக உள்ளது. நான் தற்போது இயக்கும் படம் விளையாட்டு சம்பந்தப்பட்டது. 1மாத சூட்டிங் முடிந்து இன்னும் ஒரு மாதம் சூட்டிங் நடைபெற உள்ளது. படம் முழுவதும் தென் மாவட்டங்களில்தான் ஷூட்டிங் நடைபெறுகிறது. இதன் கதை உண்மையிலிருந்து புனையப் பட்ட ஒரு கதை” என்றார்.
தொடர்ந்து, ‘தற்போது படங்கள் ஒடிடி-யில் வெளியாகிறதே’ என்பது குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அனைவர் வீட்டிலும் பூஜை அறை உள்ளது. இருந்த போதிலும் கோவிலுக்குச் சென்றுதான் சாமி கும்பிடுகிறார்கள்.. அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில்தான். அது என்றும் மாறாது”
‘தென் மாவட்டங்களில் சாதிய கொலைகள் அதிகமாக நடைபெறுகிறது இதற்கு காரணம் விழிப்புணர்வு பற்றாக்குறையா?’ என செய்தியாளர்கள் கேள் எழுப்பினர்.
அதர்கு பதிலளித்த அவர்... “தென் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக அனைவர் மனதிலும் சாதி உள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது.
எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நுணுக்கமாக கலைத்துறை, அரசியல் உள்ளிட்டவைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டியுள்ளது” என்றார்.
தொடர்ந்து அவரிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்” என்று தெரிவித்தார்.