லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள ’லியோ’ திரைப்படம், நாளை (அக்.19) வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பு நாள்தோறும் எகிறிக்கொண்டே உள்ளது.
இந்த நிலையில், ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதன்படி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “படத்தின் பிரஷர் என்பது கதை எழுதும் நேரத்திலோ, படம் எடுக்கும் நேரத்திலோ இருக்காது. இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்ளும் நேரத்தில் மட்டுமே பிரஷர் இருக்கும்.
‘லியோ’ திரைப்படம் நடைபெறுவதற்கு காரணமே, விஜய்தான்.
லோகேஷ் கனகராஜ்
முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கலாம் என கூறியதால் நடைபெற்ற படம் இது.
விஜய் படம் என்றாலே, சிறுசிறு பிரச்னைகள் வருகின்றன. ’மாஸ்டர்’ நேரத்திலும் பிரச்னை வந்தது. தற்போது, ‘லியோ’ ட்ரெய்லர் மூலம்கூட பிரச்னை வந்தது. அதனை, நான் சரி செய்தேன். அது இல்லையென்றாலும், ஏதோ ஒரு பிரச்னை வந்து சேரும்.
’லியோ’ ட்ரெய்லரில் அந்த கெட்டவார்த்தையைப் பேசியது விஜய் அல்ல; படத்தின் கதாபாத்திரம் மட்டுமே. தற்போது திரைப்படத்தில் அந்த வார்த்தை நீக்கப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது அவரிடம் உதயநிதி லியோ படத்தை LCU என எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அந்தப் பதிவில் அருகில் கண்ணடிப்பதுபோல ஒரு எமோஜி பயன்படுத்தி இருப்பார் அவர். எனவே, இந்த படம் LCUவில் உள்ளதா இல்லையா என்பது நாளை மட்டுமே தெரியும்” எனக்கூறினார்.