தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம், 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, கடந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் 7-வது இடத்தைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து தனுஷின் 50-வது படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது. அந்த நேரத்தில், ‘பா. பாண்டி’ படத்துக்குப் பிறகு தனுஷ் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அதில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாகவும், படத்திற்கு ‘ராயன்’ என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் பரவின.
ஆனால், இந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை விஷ்ணு விஷால் மறைமுகமாக கூறியிருந்தார். அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று மட்டும் தனது சமூகவலைத்தளத்தில் அவர் கூறியிருந்தாரே தவிர, எந்தப் படம் என்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், தனுஷ் மற்றும் சன் பிச்கர்ஸ் தரப்பிலிருந்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றுடன் படப்பிடிப்பு துவங்கியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தனுஷின் 50 ஆவது படமாக உருவாக உள்ள இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கி, நடிக்கவுள்ளார்.
‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு நீண்ட தலைமுடியை வளர்த்து வந்த நடிகர் தனுஷ், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திவிட்டு, ருத்ராட்ச மாலை அணிந்திருக்கும் வகையிலான புகைப்படங்களும் வைரலாகின. இந்நிலையில் அதே கெட்டப்பில், தற்போது சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ள போஸ்டரிலும் தனுஷ் இருப்பது போன்று உள்ளது.
ஆனால் அவர்தானா என்று தெரியாத வகையில் வைக்கப்பட்டுள்ளது. அப்படி அதேபோன்று மொட்டை தலையுடன் இருந்தால் மிகவும் மாஸ் கெட்டப் ஆக இருக்கும் என்றே தெரிகிறது. எந்த கெட்டப் கொடுத்தாலும் அதில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் தனுஷ். அந்த வகையில் இந்த வித்தியாசமான கெட்டப்பிலும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தனுஷின் இந்தப் படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் இயக்கத்தில் இரண்டாவது படமாக இப்படம் உருவாகி வருகிறது.