“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
பாரத் இந்து முன்னணி அமைப்பில், மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வருபவர் சுரேஷ். இவர், நேற்று காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘இந்து மத கடவுள்களான ராமர், சீதா தேவி, ஆஞ்ச நேயர் போன்றோரை இழிவுப்படுத்தும் வகையில் ஒருவர் பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இந்து மதத்தினரை மன வேதனை அடையும் நோக்கில் உள்ளதாகவும், சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் நோக்கில் வீடியோ அமைந்திருப்பதாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வீடியோவில் இந்து மத கடவுள்களை பற்றி கொச்சையாக பேசிய நபரை பற்றி ஆராய்ந்தபோது, கவிஞரும், இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநருமான விடுதலை சிகப்பி என்பவர்தான் அது என்று தெரிய வந்ததாகவும், கடந்த 30 ஆம் தேதி அபிராமபுரம் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் விடுதலை சிகப்பி என்பவர் பேசியிருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் இந்து மத கடவுள்களை பற்றி இழிவுப்படுத்தும் நோக்கில் பேசியதாக கவிஞரும், இயக்குநருமான பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநருமான விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல், எந்த ஒரு பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.