பாலசந்தரின் திரைப்படங்களில் நிறைய கதாபாத்திரங்கள் வந்து போனாலும், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான கேரக்ட்டர் ஸ்கெட்ச், குணாதிசயம், வசன உச்சரிப்பு, ஸ்டைல் போன்றவற்றை இயக்குநர் உருவாக்கி விடுவார். சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் பாத்திரம் என்றால் கூட அதை பார்வையாளர்கள் மறக்க முடியாதபடி ஆக்கி விடுவதில் பாலசந்தருக்கு அசாதாரணமான திறமையுண்டு. பிரதான பாத்திரங்களையே மொண்ணையாக உருவாக்கும் இயக்குநர்கள் மத்தியில் பாலசந்தர் போன்ற இயக்குநர்கள் எல்லாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
பாலசந்தரின் திரைப்படங்களில் வடிவமைக்கப்பட்ட ஏராளமான துணைப்பாத்திரங்களில் பெரும்பாலும் ரசிக்கத்தக்கவை என்றாலும் அவற்றின் முக்கியமான வரிசையில் ஒன்று ‘குருமூர்த்தி’. சிந்து பைரவி திரைப்படத்தில் வரும் இந்தப் பாத்திரத்தை திறம்பட கையாண்டிருந்தவர் ‘டெல்லி கணேஷ்’. தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் ஒருவர். சிரிப்பு, சீரியஸ், சென்டிமென்ட் என்று எல்லா ஏரியாவிலும் அசத்துபவர்.
குருமூர்த்தி ஒரு மிருதங்க வித்வான். பிரபல பாடகரான தி கிரேட் ‘ஜேகேபி’ அண்ணாவிற்கு வாசிப்பவர். ஜேகேபி என்றால் அத்தனை மரியாதை. அதற்கு நிகரான மரியாதையை ஜேகேபியின் மனைவியான பைரவி மீதும் உண்டு. ‘மன்னி.. மன்னி..’ என்று உருகி விடுவார். மிருதங்கத்தை வாசிப்பதிலும் மனிதர் பின்னியெடுத்து விடுவார். ஆனால் ஆசாமிக்கு ஒரேயோரு கெட்ட பழக்கம் உண்டு. அது குடி. அதை மட்டும் அவரால் நிறுத்த முடியவில்லை.
ஒரு முறை கச்சேரிக்கே ‘லைட்டாக’ குடித்து விட்டு வந்து விடுகிறார் குருமூர்த்தி. தம்புரா வாசிக்கும் கஜபதி இந்த விஷயத்தை கச்சிதமாக ஜேகேபி அண்ணாவிடம் போட்டுக் கொடுத்து விடுகிறார். கோபமடையும் ஜேகேபி மைக்கை மூடிக் கொண்டு ‘படவா ராஸ்கல்..’ என்று திட்டி விட்டு, சபையைப் பார்த்து ‘மன்னிக்கணும்.. என்னோட மிருதங்க வித்வான் சுத்தக் குறைச்சலா சபைக்கு வந்திருக்கிறாரு. அதாவது குடிச்சுட்டு வந்திருக்கிறாரு. புனிதமான இந்த மேடையை யாரும் களங்கப்படுத்தக் கூடாது. அதுக்கு தண்டனை தந்தே ஆகணும்” என்று சொல்லி விட்டு ‘குருமூர்த்தி.. எழுந்திரு.. இந்தக் கச்சேரிக்கு நீ வாசிக்கக்கூடாது.. இனிமே எனக்கு வாசிக்க வேண்டாம். மிருதங்கம் இல்லாம இந்தக் கச்சேரி நடக்கும்’ என்று பொதுவில் அறிவித்து விடுகிறார். மனம் உடைந்து போகும் குருமூர்த்தி வாயில் துண்டைப் பொத்திய படி தள்ளாடி நடந்து செல்கிறார்.
இந்த ஆரம்பக் காட்சியிலேயே குருமூர்த்தியின் நடிப்பு ராஜாங்கம் துவங்கி விடுகிறது. கச்சேரி ஆரம்பிப்பதற்கு முன்பாக வாத்தியக்காரர்கள் செய்வது போல மிருதங்கத்தை தட்டி ஸ்ருதி சோதிப்பது, சக வாத்தியக்காரர்களை உற்சாகத்துடன் பார்த்து சிரிப்பது, அண்ணா கோபத்தில் திட்டும் போது குழந்தை போல உதட்டை சுழித்துக் கொண்டு விழிப்பது என்று விதம் விதமான முகபாவங்களில் அசத்துவார்.
இந்தப் படத்தில் மிருதங்க வித்வானாக நடிப்பதற்கு பாலசந்தர் முதலில் உத்தேசித்தது அசலான இசைக்கலைஞரான டி.வி.கோபால கிருஷ்ணனை. ஆனால் அவர் எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாதவர். குடித்திருப்பது போல் நடிப்பதற்கு கூட அவர் ஒப்புக் கொள்ளவில்லை. படப்பிடிப்பை உடனே துவங்க வேண்டிய நெருக்கடியில் இருந்த பாலசந்தரிடம் எவரோ டெல்லி கணேஷின் பெயரை நினைவுப்படுத்த ‘சரி வரச் சொல்லுங்க’ என்றாராம்.
‘மிருதங்கம் வாசிக்கத் தெரியுமா?’ – டெல்லி கணேஷ் வந்தவுடன் பாலசந்தர் கேட்ட முதல் கேள்வியே இதுதான். பாலசந்தரின் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் ஏற்கெனவே நடித்திருக்கும் டெல்லி கணேஷ் ‘மிருதங்கமா?... பார்த்திருக்கேன்’ என்று குறும்பாக பதில் சொல்ல, பாலசந்தர் யோசனையுடன் மோவாயைத் தடவியிருக்கிறார். “ஆனா.. தாளம்லாம் நல்லாப் போடுவேன்” என்ற டெல்லி கணேஷ் “துதும்.. துதும்.. துதும்..’ என்று பக்கத்திலிருந்த மேஜையில் தட்டி, வாத்தியக்காரர்கள் செய்யும் முகசேஷ்டைகளையும் கூடவே செய்திருக்கிறார். (சிவாஜி நடித்த மிருதங்க சக்ரவர்த்தி படத்தைப் பார்த்திருப்பார் போலிருக்கிறது).
‘அடடே.. இது போதும்.. மிச்சத்தை இளையராஜா பார்த்துப்பாரு’ என்று உற்சாகமடைந்த பாலசந்தர், குருமூர்த்தி பாத்திரத்திற்கு டெல்லி கணேஷை உடனே உறுதி செய்து படப்பிடிப்பை ஆரம்பித்தார். மிருதங்க வித்வான் பாத்திரத்தில் டெல்லி கணேஷின் உடல்மொழியும் தாளமும் கச்சிதமாக அமைந்திருந்ததைப் பார்த்து பலரும் அவரைப் பாராட்ட “இந்த கிரெடிட்லாம் இளையராஜாவிற்குத்தான் போகணும். அவர்தான் நான் தட்டறதுக்கு ஏத்த மாதிரி தாளத்தை அமைச்சு காட்சியை நம்ப வெச்சார்’ என்று தன்னடக்கத்துடன் ஒரு நேர்காணலில் சொல்கிறார் டெல்லி கணேஷ்.
‘சிந்து பைரவி’ படத்தில் டெல்லி கணேஷ் அசத்திய பல காட்சிகள் உண்டு. ‘படவா.. இனிமே எனக்கு வாசிக்கக்கூடாது’ என்று ஜேகேபி துரத்திய அன்று, அவரது வீட்டின் வாசலில், நள்ளிரவு நேரத்தில் ‘துதும்.. துதும்.. துதும்..’ என்று மிருதங்க சத்தம் கேட்கும். வெளியே வந்து பார்த்தால் நல்ல போதையில் சட்டையில் வியர்வை வடிய குருமூர்த்தி ஆவேசமாக மிருதங்கம் வாசித்துக் கொண்டிருப்பார். “அண்ணா.. என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்ற வரைக்கும் நான் வாசிச்சிக்கிட்டேதான் இருப்பேன். நிறுத்த மாட்டேன்’ என்று அலப்பறை செய்வார்.
குருமூர்த்தியின் இந்தச் செயல் ஜேகேபிக்கு எரிச்சலையும் கோபத்தையும் வரவழைக்கும். என்றாலும் இந்தக் காட்சியில் ஒரு நுட்பமான விஷயத்தை இணைத்த இயக்குநரை பாராட்டியாக வேண்டும். அசுர சாதகத்தில் குருமூர்த்தி ஆவேசமாக மிருதங்கம் வாசிக்கும் போது, கோபத்திற்கு இடையே தன்னையும் அறியாமல் அந்தத் தாளத்திற்கு ஏற்ப தலையாட்டி ரசிப்பார் ஜேகேபி. குருமூர்த்தியின் மீது பரிதாபப்பட்டு பைரவியும் சிபாரிசு செய்வதால் மனம் இரங்கி மன்னிக்க முன்வருவார் ஜேகேபி. ‘இனிமே என் கச்சேரில குடிச்சுட்டு வரக்கூடாது” என்று கறாரான நிபந்தனை விதிக்க “அண்ணா.. மீது சத்தியம்.. இந்த நாதத்தின் மீது சத்தியம்.. மன்னி.. உங்க மேலயும் சத்தியம்.. இந்த குருமூர்த்தி இனிமே குடிக்க மாட்டான்” என்று சந்தோஷத்துடன் தனது ஆவேசக் கச்சேரியை நிறைவு செய்வார் குருமூர்த்தி.
இந்தக் காட்சியில் குருமூர்த்தியின் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். ஆவேசமாக மிருதங்கத்தை வாசிப்பது, உரிமையுடன் பிடிவாதம் பிடிப்பது, பைரவியாக நடித்த சுலக்ஷணாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது என்று ஓர் உணர்ச்சிகரமான காட்சியில் எவ்வாறு விதம் விதமாக உடல் அசைவுகளை செய்து நடிப்பது என்பதற்கு டெல்லி கணேஷ் ஒரு சிறந்த உதாரணம்.
அதுசரி, எதற்காக குருமூர்த்தியை ‘குடிகாரன்’ பாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும்? இங்குதான் இயக்குநர் பாலசந்தரின் திட்டமிடல் வெளிப்படுகிறது. குருமூர்த்தி குடித்து விட்டு வந்து இசை மேடையை களங்கப்படுத்தி விட்டார் என்று குற்றம் சாட்டிய அதே ஜேகேபி, பிறகு தானே குடித்து விட்டு நிறைய அலப்பறைகள் செய்வார். ஒரு கலைஞனாக வீழ்ச்சியை நோக்கி பயணிப்பார். இந்த முரணை உணர்த்துவதற்குத்தான் இப்படியொரு கேரக்ட்டர் ஸ்கெட்ச்.
‘குடிக்க மாட்டேன்’ என்று தனது வாத்தியத்தின் மீதும் தான் மதிக்கும் ஜேகேபி மற்றும் பைரவி மீது சத்தியம் செய்யும் குருமூர்த்தி, அதை மீறுகிற காட்சியும் வருகிறது. இசையறிவும் அதன் மீது நிறைய ஆர்வமும் கொண்ட சிந்து என்கிற பெண்ணின் மீது ஜேகேபிற்கு ஈர்ப்பு ஏற்பட்டு காதலாக மாறுகிறது. இதை அறியும் ஜேகேபியின் மனைவி பைரவி மனம் உடைந்து போகிறார். மனப்புழுக்கத்தில் அழுகிறார். இதனால் குருமூர்த்திக்கு ஜேகேபியின் மீது கோபம் வருகிறது. குடிபோதையில் அவரது காரை வழிமறித்து ‘நீயெல்லாம் ஒரு மனுஷனாய்யா.. இன்னொரு பொண்ணோட சகவாசம் உனக்கு தேவையா.. அந்தப் பொம்பளையோட பழக்கத்தை விட்டுடு’ என்று ஏகவசனத்தில் பேசுகிறார். தனது மனதில் உள்ள ஆதங்கத்தையெல்லாம் மதுபோதையில் கொட்டி தீர்த்து விடுகிறார்.
“குடிக்க மாட்டேன்னு என் மேல கூட சத்தியம் பண்ணீங்களே?’ என்று பைரவி பிறகு இதைப் பற்றி விசாரிக்கும் போது “இல்ல மன்னி.. சத்தியமா நான் குடிக்கலை. தந்த வாக்கை மீறலை. குடிச்சா மாதிரி நடிச்சேன்.. அப்பதானே அவர் முன்னாடி போய் பேச முடியும்?” என்று கண்கலங்க சொல்வதைக் கேட்டு பைரவியும் நெகிழ்ந்து விடுகிறார். குடிபோதையில் திட்டும் போதும் சரி, அப்படி நடித்ததாக சொல்லும் போது சரி, டெல்லி கணேஷின் நடிப்பு அற்புதமாக இருக்கும்.
இன்னொரு சுவாரசியமான காட்சியும் உண்டு. சிந்துவிற்கு இசை பற்றி தெரிகிறது, தான் ஞான சூன்யமாக இருக்கிறோம். அதனால்தான் கணவர் தன்னிடமிருந்து விலகுகிறார் என்று கருதும் பைரவி, குருமூர்த்தியை அழைத்து ‘எனக்கு சங்கீதம் சொல்லித் தரீங்களா?’ என்று கேட்க ‘அதுக்கென்ன.. மன்னி.. பேஷா ஆரம்பிச்சிடலாம்” என்று உற்சாகமாகிறார் குருமூர்த்தி,
பைரவியை அமர வைத்து ஸ்வர வரிசையின் ஆரம்பத்திலிருந்து துவங்க, அதை அரையும் குறையுமாக காதில் வாங்குகிற பைரவி “மழை வராப்பல இருக்கு.. மொட்டை மாடில துணியை எடுத்துட்டு வந்துடறேன். கேஸை ஆஃப் பண்ணிணேன்னான்னு சந்தேகமா இருக்கு” என்று இடையிடையில் சொல்ல ஒரு கட்டத்தில் குருமூர்த்தி சிரிக்க ஆரம்பித்து விடுகிறார். ‘ஏன்.. சிரிக்கறீங்க.. இந்த ஜடத்திற்கு சங்கீதம் வராதுன்னா?’ என்று கேட்டு பைரவி கண்கலங்குகிறார். இந்தக் காட்சியிலும் டெல்லி கணேஷின் நடிப்பு சிறப்பாக இருக்கும். சிந்துவை சந்தித்து ‘இனி இந்த ஊரிலேயே நீ இருக்கக்கூடாது’ என்று மிரட்டும் காட்சியிலும் இவரது நடிப்பு அற்புதம்.
ஜேகேபி அண்ணா மீது குருமூர்த்திக்கு அபரிதமான மரியாதையும் விசுவாசமும் உண்டு. என்றாலும் ஏன் அவரை கடுமையாக விமர்சிக்கிறார்? இது ஜேகேபியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது சுதந்திரம் இல்லையா? ஜேகேபிக்கு நிகராக அவரது மனைவியின் மீதும் குருமூர்த்திக்கு மரியாதையுண்டு. அவரது வாழ்க்கை பாழாகிறதே என்று ஆதங்கப்படுகிறார். அந்த ஆதங்கம் ஜேகேபி மீதும் சிந்துவின் மீதும் கோபமாக மாறுகிறது. அதுவே காரணம். இப்படி நடைமுறையில் யாராவது தன்னுடைய ஆசானையே கடுமையாக விமர்சிப்பார்களா? ஓர் உதாரணம் உண்டு.
இயக்குநர் பாலுமகேந்திராவின் வாழ்க்கையில் கடந்த போன பெண்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஷோபா முதல் மௌனிகா வரை. ஆனால் பாலுமகேந்திராவின் திருமணம் தாண்டிய உறவை அவரிடம் உதவி இயக்குநராக இருந்த பாலா கடுமையாக எதிர்த்தார். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கண்டனம் தெரிவித்தார். பாலுமகேந்திராவின் இறுதிச் சடங்கின் போது கூட மௌனிகாவின் வரவை பாலா விரும்பவில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். இதற்கு காரணம் என்ன?
பாலுமகேந்திராவை தன்னுடைய குருவாக, ஆசானாக ஏன் அதற்கும் மேல் தந்தையாகவே மதித்தவர் பாலா. ‘இவன்தான் பாலா’ என்கிற அவருடைய சுயசரிதைக் கட்டுரைத் தொகுதியில் இது குறித்து நெகிழ வைக்கும் விரிவான தகவல்கள் உண்டு. என்றாலும் பாலுமகேந்திராவிற்கு நிகராக அவரது மனைவியான அகிலாவை தன்னுடைய தாயாகவே பார்த்தார், பாலா. இந்தப் பாசவுணர்வுதான், ஆசானாகவே இருந்தாலும் அவருடன் முரண்படுவதற்கு காரணமாக இருந்தது.
உண்மையான அன்பு, விசுவாசம் போன்ற காரணங்களுக்காக முதலாளிகள் தவறு செய்யும் போது அவரையே எதிர்க்கத் துணியும் குருமூர்த்திகள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியொரு பாத்திரத்தில் நடித்த டெல்லி கணேஷை மறக்கவே முடியாது.