மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | திருநங்கையாக ‘சூப்பர் டீலக்ஸ்’ விஜய்சேதுபதி

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் ‘விஜய்சேதுபதி’ ஏற்று நடித்திருந்த ‘ஷில்பா ’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் புதிய தலைமுறை
Published on

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

“நடிகர்கள் ‘திருநங்கை’ பாத்திரத்தில் நடிக்கும் போது ஏன் பெண்களைப் போல் நாணிக் கோணி செயற்கையாக நடிக்கிறார்கள்?” - இப்படியொரு கேள்வியை மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்டார்.

இதுவொரு முக்கியமான கேள்வி. பெண்களின் உடல்மொழிக்கும் திருநங்கைகளின் உடல்மொழிக்கும் கணிசமான வித்தியாசமுள்ளது. ஆனால் பல நடிகர்கள் இது போன்ற பாத்திரங்களில் நடிக்கும் போது பெண்களின் உடல்மொழியை மிகையாக்கி மோசமாக நகலெடுத்து, மலினப்படுத்தி நடிப்பதுதான் வழக்கம். முரட்டுக்காளை (2012) திரைப்படத்தில் விவேக் ஏற்ற பாத்திரத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

முரட்டுக்காளை படத்தில் திருநங்கையாக விவேக்
முரட்டுக்காளை படத்தில் திருநங்கையாக விவேக்

இந்தியா முழுக்க பல முன்னணி நடிகர்கள், மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சுஷ்மிதா சென், அக்ஷய் குமார், பரேஷ் ராவல், நவாசுதீன் சித்திக் என்று இந்தி சினிமாவிலிருந்து நிறைய உதாரணம் சொல்லலாம். போலவே தென்னிந்திய சினிமாவில் பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ்,  கமல்ஹாசன், விக்ரம், சரத்குமார், ஜெயசூர்யா, சஞ்சரி விஜய் என்று பல உதாரணங்கள் உண்டு. 

இந்தப் பாத்திரங்களில் பெரும்பாலும் ஹீரோ இமேஜிற்கு சேதம் ஆகாமல் ஆண் தன்மையிலிருந்து வழுவாதவையாக இருக்கும். உதாரணத்திற்கு ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில், பெண் தன்மை உடையவராக கமல்ஹாசன் நடித்திருந்தாலும் அவர் உளவுத்துறை அதிகாரியாக அந்த வேடத்தில் பாவனை செய்பவராக மட்டுமே இருப்பார்.

சரத்குமார் - ராகவா லாரண்ஸ் - கமல்ஹாசன்
சரத்குமார் - ராகவா லாரண்ஸ் - கமல்ஹாசன்

‘காஞ்சனா’ படத்தின் ராகவா லாரன்ஸ், அடிப்படையில் ஆணாக இருந்தாலும் பேய் உள்ளே செல்லும் போது மட்டுமே பெண்ணாக மாறுவார். அதாவது ‘வித்தியாசமான’ வேடங்களை ஏற்று படத்தையும் ‘வித்தியாசமாக’ காட்டுவதற்காகவே இவர்கள் இந்தப் பாத்திரங்களை ஏற்றார்களே ஒழிய, மாற்றுப் பாலினத்தவர்களின் அசலான வலியையும் துயரத்தையும் சம்பந்தப்பட்ட உடல்மொழியில் கையாண்ட நடிகர்கள் மிகக்குறைவு.

இந்த வரிசையில் மிக முக்கியமான பாத்திரமாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதி ஏற்ற ‘ஷில்பா’ பாத்திரத்தைச் சொல்லலாம். சிறிய பாத்திரங்களில் ஓரமாக வந்து முட்டி மோதி முன்னணி நடிகராக வந்தவர் விஜய்சேதுபதி. அவர் நினைத்திருந்தால் தனது வணிக இமேஜை பத்திரமாக காப்பாற்றிக் கொண்டு வழக்கமான ஹீரோ பாத்திரங்களில் நடித்து அதிகமான பொருளை சம்பாதிக்கும் வழியைப் பார்த்திருக்கலாம்.

ஆனால் முன்னணி நடிகராக இருக்கும் அதே சமயத்திலேயே, ஹீரோ என்கிற பிம்பத்தையெல்லாம் ஒரமாக வைத்து விட்டு பல்வேறு வித்தியாசமான பாத்திரங்களை கையாண்டது நடிப்பின் மீது அவருக்குள்ள ஆர்வம், அர்ப்பணிப்பு, துணிச்சல், தன்னம்பிக்கை போன்றவற்றைக் காட்டுகிறது. 

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ‘ஷில்பா’ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ‘ஷில்பா’ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி

சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் ‘ஷில்பா’ பாத்திரத்தைப் பார்த்தால் எந்தவொரு இடத்திலும் மலினமோ, ஆபாசமான சித்திரிப்போ இருக்காது. மாறாக மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் உண்மையான மனத்துயரம், சமூக நிராகரிப்பின் வேதனை, மீள்வதற்கான போராட்டம் போன்றவை அசலான தொனியில் பதிவாகியிருக்கும். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | Dancing Rose | “அதுக்காகல்லாம் ரோஸை அடிச்சுட முடியாது..”

ஷில்பா - விஜய்சேதுபதி ஏற்ற துணிச்சலான பாத்திரம்

ஏழரை வருடங்கள் கழித்து தனது தந்தையான மாணிக்கத்தைப் பார்க்கும் பரவசத்தில் இருக்கிறான், சிறுவன் ராசுக்குட்டி. திருமணமான புதிதில் தன்னை விட்டு ஓடிப் போன கணவனைப் பார்க்கும் ஆசையில் இருக்கிறாள், மாணிக்கத்தின் மனைவி ஜோதி. மாணிக்கத்தின் சுற்றத்தாரும் ஆவலாக காத்திருக்கிறார்கள். அனைவரையும் திகைக்க வைக்கும் அளவில், மும்பையிலிருந்து திரும்பும் மாணிக்கம் பெண்ணுக்கான ஒப்பனையில் இருக்கிறான். புன்சிரிப்புடன் காரில் இருந்து இறங்கும் ஷில்பாவிற்கு, தன்னை அனைவரும் திகைப்புடன் பார்க்கும் போது புன்னகை தன்னால் உறைந்து போகிறது.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ‘ஷில்பா’ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ‘ஷில்பா’ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி

தன்னை நெருங்கி நின்று உற்றுப் பார்க்கும் ராசுக்குட்டியை ஷில்பாவும் பதிலுக்கு உற்றுப் பார்க்கிறாள். திகைப்பு மறைந்து ராசுக்குட்டியிடம் புன்னகை மலர, ஷில்பாவும் அதைப் பிரதிபலிக்கிறாள். இருவரின் புன்னகையும் பெரிதாக, சட்டென்று நினைவு வந்தவளாக பரிசுப் பெட்டியை எடுத்து தருகிறாள் ஷில்பா. அதுவரை உறைந்திருந்த வீடு உயிர்பெற்று சுற்றத்தார்கள் ஷில்பாவைத் திட்டித் தீர்க்கிறார்கள். அதைப் பார்த்து கண்கலங்கியபடி அமர்ந்திருக்கிறாள் ஷில்பா. “நீ போய் குளிச்சுட்டு வந்துடுப்பா” என்று அவளுக்கு மௌன ஆதரவாக இருக்கும் அம்மா சொல்ல, மேலாடை விலக சட்டென்று அதைச் சரிசெய்தபடி கிளம்புகிறாள் ஷில்பா.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
‘சூப்பர் டீலக்ஸ்’ - திரைப்பார்வை

திருநங்கை பாத்திரத்தை அற்புதமான கையாண்ட விஜய்சேதுபதி

ஷில்பா சேலையை மாற்றிக் கொள்ளும் ஒரு காட்சி வருகிறது. தமிழில் வேறு எந்தவொரு நடிகருக்கும் இப்படியொரு காட்சியில் நடிக்கும் துணிச்சல் இருக்குமா என்று தெரியவில்லை. ஷில்பா அணிந்திருந்தது பொய்யான தலைமுடி என்பது தெரிகிறது. வழுக்கைத் தலை, தொப்பை போட்டிருக்கும் வயிறு, அகலமான உடம்பு என்கிற தோற்றத்தில் ஜாக்கெட்டும் பாவாடையும் மட்டும் அணிந்து சேலையை மிக மிக நிதானமாக நளினமான அசைவுகளுடன் அணிந்து கொள்கிறாள் ஷில்பா. விஜய்சேதுபதியா இது?.. என்று நமக்கு ஆச்சரியம் தருவது அறிமுகக் காட்சியில் மட்டுமே. பிறகு அந்த பிம்பம் முற்றிலுமாக மறைந்து அதற்குப் பிறகான காட்சிகளில் ஷில்பா மட்டுமே தெரிவது, விஜய்சேதுபதியின் நடிப்புத் திறனிற்குச் சான்று. 

‘சூப்பர் டீலக்ஸ்’ விஜய் சேதுபதி - காயத்ரி
‘சூப்பர் டீலக்ஸ்’ விஜய் சேதுபதி - காயத்ரி

மாணிக்கத்தின் மனைவி ஜோதிக்கு இப்போதும் கூட தன் கணவனை வெறுக்கவோ விட்டு விலகவோ தோன்றவில்லை. மாறாக திகைப்பு மட்டுமே இருக்கிறது. புடவை மாற்றும் கணவனை திகைப்பு மாறாமல் பார்க்கும் ஜோதி “எனக்கென்ன கஷ்டம்ன்னாச்சும் புரியுதா.. இத்தனை நாள் புருஷன் இல்லாம வாழ்ந்ததா.. இனிமே இப்படியொரு புருஷனோட வாழறதா..?” என்று கண்கலங்கியபடி ஜோதி கேட்க, அதற்கு ஷில்பா சொல்லும் பதில் முக்கியமானது. “ஒரு பொண்ணா.. உன்னோட கஷ்டம் எனக்குப் புரியுது ஜோதி”. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | பூரணத்துவமான அக்கா ‘பூர்ணி’யாக... ‘அலைபாயுதே’ சொர்ணமால்யா!

தன் அப்பா பெண்ணுருவில் இருப்பது ராசுக்குட்டிக்கு எவ்வித நெருடலையும் ஏற்படுத்தவில்லை. அதை மிக இயல்பாக ஏற்றுக் கொள்கிறான். தன்னை ‘டெஸ்ட் டியூப் பேபி’ என்று கிண்டலடிக்கும் பள்ளி நண்பர்களிடம் அப்பாவைக் காண்பிப்பதற்காக அழைத்துச் செல்கிறான். “நீ ஆணா.. பொண்ணா.. உனக்கு மீசை இருந்துதா?” என்று அந்த வயதுக்கேயுரிய வெள்ளந்தித்தனத்துடன் வரிசையாக கேள்விகள் கேட்கிறான் ராசுக்குட்டி.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதி - அஸ்வந்த்
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதி - அஸ்வந்த்

“பம்பாயில.. கடைகளுக்குப் போய் கைத்தட்டுவேன். காசு கொடுப்பாங்க.. ஆசிர்வாதம் பண்ணுவேன்” என்று பிழைப்பிற்கான பின்னணி பற்றி ஷில்பா கூற, ராசுக்குட்டி அதை நம்பாமல் சிரிக்கிறான். ஒரு கடைக்குச் சென்று கொஞ்சலான உடல்மொழியில் ஷில்பா காசு கேட்பதும் கடைக்காரரை உண்மையான அன்புடன் ஆசிர்வாதம் செய்வதும் தான் வாங்கிய பணத்தை மகனிடம் பெருமையாக காட்டுவதும் போன்ற காட்சிகளில் விஜய்சேதுபதியின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது. “ஹே.. சூப்பர்ப்பா..” என்று கைத்தட்டி சிரிக்கிறான் ராசுக்குட்டி. 

“சாமி. உடம்பை மாத்திப் போட்டுடுச்சு”...

“நானும் உன்னை மாதிரி ஆயிடுவனா.. நீ ஏன் இப்படி ஆயிட்டே.. மொதல்லயே ஏன் பொம்பளையா பொறக்கல?” என்று ராசுக்குட்டி கேட்க அதற்கு ஷில்பா சொல்லும் பதில் மிக அற்புதமானது. மாற்றுப்பாலினத்தவர்கள் பற்றி பொதுப்புத்திக்கு புரிய வைக்க, இத்தனை எளிமையான அதே சமயத்தில் மிக ஆழமான பதிலை வசனமாக வைத்திருந்ததற்காக இயக்குநரைப் பாராட்ட வேண்டும். “நாம அவசரத்துல செருப்பு போடும் போது காலை மாத்திப் போட்டுப்பம்ல..  அந்த மாதிரி சாமி உடம்பை மாத்தி போட்டுருச்சு”. 

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ‘ஷில்பா’ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ‘ஷில்பா’ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி

ஆண்கள் கழிப்பறைக்குச் செல்லும் ராசுக்குட்டிக்கு உதவுவதற்காக ஷில்பா பக்கத்தில் இருக்க, அங்கு வரும் கான்ஸ்டபிள் அந்தக் காட்சியை தவறாகப் புரிந்து கொண்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார். ராசுக்குட்டியின் உண்மையான தகப்பன் என்பதை விசாரணையின் மூலம் அறிந்து விடுவிக்கும் சமயத்தில் ஷில்பாவிற்கு மிகப் பெரிய சோதனை ‘பெர்லின்’ என்கிற சப்-இன்ஸ்பெக்டரின் வழியாக காத்திருக்கிறது. பெர்லின் ஒரு bisexual ஆசாமி. சைக்கோத்தனமான கேரக்டர். (பகவதி பெருமாள் இந்தப் பாத்திரத்தில் அட்டகாசம் செய்திருப்பார்). 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | ‘கார்கி’ இந்திரன்ஸ் கலியபெருமாளாக காளி வெங்கட்!

திருநங்கையான ஷில்பாவைப் பார்த்ததும் பெர்லினுக்கு வக்கிரத்தனமான ஆசை பெருகுகிறது. காவல்நிலையத்திலேயே தன்னுடைய இச்சையை தீர்க்க ஆவேசப்படுகிறார். திருநங்கைகளை பொதுச்சமூகம் எவ்வாறு பார்த்த உடனே பாலியலுடன் தொடர்புப்படுத்தி முத்திரை குத்தி விடுகிறது என்பதற்கான உதாரணக்காட்சி இது. மாற்றுப் பாலினத்தவர்கள், பொதுச்சமூகத்தினரைப் போலவே எத்தனையோ துறைகளில் தனித்திறமையும் அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் சமூகத்தின் ஒட்டுமொத்த நிராகரிப்பு காரணமாக, சிலர் வேறுவழியில்லாமல் மேற்கொள்ளும் பாலியல் தொழிலால் அனைவருக்கும் அதே முத்திரையை குத்தி விடுகிறது, பொதுப்புத்தி.

மாற்றுப்பாலினத்தவர்கள்
மாற்றுப்பாலினத்தவர்கள்

பொதுச்சமூகத்தால் அடையும் பல்வேறு அவமதிப்புகள்

சைக்கோ சப்-இன்ஸ்பெக்டரால்  ஆசை வார்த்தைகள் பேசி வலுக்கட்டாயமாக நகர்த்திச் செல்லப்படும் போது பதட்டம், அச்சம், சங்கடம், தவிப்பு என்று பல உணர்ச்சிகளின் கலவையை இயல்பான தொனியில் வெளிப்படுத்தியிருப்பார் விஜய்சேதுபதி. ராசுக்குட்டி வெளியே ஒரு சினிமாப்பாடலை உற்சாகமாக பாடிக் கொண்டிருக்க, அறையிலிருந்து கலங்கிக் கொண்டே ஷில்பா வெளியே வரும் போது அறைக்குள் நடந்திருக்கக்கூடிய வக்கிரத்தை நம்மால் பதட்டத்துடன் உணர முடிகிறது. 

தன்னுடைய அப்பாவை பள்ளி நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவற்காக அழைத்துச் செல்கிறான் ராசுக்குட்டி. ஷில்பாவிற்கு அங்கும் அவமானங்கள் தொடர்கின்றன. பள்ளிக்கூடத்தின் உள்ளே அனுமதி மறுக்கப்படுகிறது. ‘அது.. இது..’ என்றுதான் ஷில்பாவை மற்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒரு மனிதனுக்கு தரப்பட வேண்டிய அடிப்படையான மரியாதை கூட கிடைப்பதில்லை. பள்ளி மாணவர்கள் தங்களுக்கேயுரிய அறியாமையுடன் ஷில்பாவை மலினமாக கிண்டல் செய்கிறார்கள். 

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ‘ஷில்பா’ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ‘ஷில்பா’ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி

“யோவ்.. ‘அத’ இங்கிருந்து போகச் சொல்லுய்யா” என்று ஒரு மாணவனின் தந்தை, வாட்ச்மேனை நோக்கி அதட்டி விட்டு “நீ போகப் போறியா.. இல்லையா.. இந்த ஏரியா சப்-இன்ஸ்பெக்டர்.. என் பிரெண்டுதான்” என்று அநாவசியமாக மிரட்டுகிறான்.

“உங்களுக்கு அவரு பிரெண்டா இருக்கலாம். ஆனா எனக்கு அவர் புருஷன் மாதிரி. இப்பத்தான் சாந்தி முகூர்த்தம் ஆச்சு” என்று தனது கோபத்தை அங்கத நகைச்சுவையில் ஷில்பா வெளிப்படுத்துகிறாள். தன் மீது நிகழ்ந்த பாலியல் வன்முறையை அவளே ஏற்றுக் கொள்வது போல் பேசலாமா என்று தோன்றலாம். அந்தக் கோபத்தை சமூகத்திடம் அவள் வெளிப்படுத்தும் முறை அது. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 42- இயல்பான நடிப்பில் பிரமிட் நடராஜன்- அலைபாயுதே

அவமானத்தால் வெறுப்புற்று பள்ளிக்கு வெளியே வந்து அமர்ந்திருக்கும் ஷில்பாவிடம் “அது நெஜம்மாவே உன் புள்ளயா.. அது கஷ்டப்படுமே யோசிச்சியா..?” என்று வேர்க்கடலை விற்கும் ஆயா கேட்க “அப்படி என்ன ஆயா.. நான் தப்பு பண்ணிட்டேன்.. நகம் வெட்டிக்கறதில்லையா.. முடி வெட்டிக்கறதில்லையா.. எனக்குப் பிடிச்ச மாதிரி என் உடம்பை மாத்திக்கிட்டேன்” என்று அழுங்கிய குரலில் தன்னுடைய மௌனமான கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில் விஜய்சேதுபதியின் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கும். 

“ஏன் என்னை விட்டுட்டுப் போன.. அப்பா பாவமில்லையா?”

திரும்பும் வழியில் ராசுக்குட்டியை தொலைத்து விட்டு பதட்டத்துடன் தேடி மறுபடியும் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய அவலமான நிலை ஷில்பாவிற்கு ஏற்படுகிறது. “அப்ப சரியாவே பேச முடியலை. இன்னொரு முறை நிதானமா பேசலாமா?” என்று சைக்கோ சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் தன் வக்கிரத்தைக் காட்ட முயல, மகனைக் காணாத தவிப்பில் இருக்கும் ஷில்பாவிற்கு கோபம் வந்து விடுகிறது. 

அதிகாரத்திற்கு எதிரான மெல்லிய முனகலைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத பெர்லினுக்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது. அவன் ஷில்பாவை லட்டியால் அடிக்க, இதர கான்ஸ்டபிள்கள் பலவந்தமாக இழுத்துப் பிடித்தும் பெர்லினின் மீது ஆவேசமாக பாய முயல்கிறாள் ஷில்பா. பிறகு அவனுடைய தலையில் உக்கிரமான கோபத்துடன் கையை வைக்கிறாள். இந்தக் காட்சியில் விஜய்சேபதியின் நடிப்பில் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்க முடிகிறது. 

“சாமி.. என் பிள்ளைய காணோம் சாமி.. நான் பாவம் பண்ணிட்டேன்” என்று சப்வேயில் அற்புதத்திடம் (மிஷ்கின்)  ஷில்பா கெஞ்சும் காட்சியும் உருக்கமானது. “அது வெறும் கல்லுதானே சாமி?” என்று போகிற போக்கில் ஷில்பா சொல்லி விட்டுச் சொல்லும் வாசகம், அற்புதத்தின் மனதிற்குள் சந்தேகத்தின் விதையை தூவி விட்டுச் செல்கிறது. அற்புதத்தின் அதீதமான இறை நம்பிக்கையில் சலனம் ஏற்படுகிறது. 

வீட்டுக்குத் திரும்பும் ஷில்பா, அங்கு தன் மகன் ராசுக்குட்டி இருப்பதைப் பார்த்து பாய்ந்து கட்டியணைத்து முத்தமழை பொழிகிறாள். ஆனால் அவளிடமிருந்து தன்னை பலவந்தமாக வெறுப்புடன் விலக்கிக் கொள்கிறான், ராசுக்குட்டி. “உன்னை காணாம ரொம்ப தவிச்சுப் போயிட்டேன்.. ஏன் விட்டுட்டுப் போயிட்ட.. அப்பா.. பாவமில்லையா” என்று கண்கலங்க ஷில்பா கேட்க,

“அப்படித்தாண்டா எனக்கும் இருந்திருக்கும் கம்னாட்டி.. இத்தனை வருஷம் என்னை விட்டுட்டுப் போனல்ல?!” என்று கோபத்துடன் சென்று கதவைச் சாத்திக் கொள்கிறான், ராசுக்குட்டி. அந்தக் கோபத்தில் இருக்கும் உண்மை நெருப்பு மாதிரி விழ, அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறாள் ஷில்பா. 

தொடர் அவமானங்களால் வேதனைப்படும் ஷில்பா, ஊருக்குத் திரும்ப டிக்கெட் எடுத்து வைத்திருப்பதை ராசுக்குட்டி பார்த்து விடுவதால், அவளிடமிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குச் சென்று விட்டான் என்பது ஷில்பாவிற்கு தெரிய வருகிறது. “மத்தவங்க என்ன வேணா சொல்லட்டும்.. நானோ.. அம்மாவோ.. உன்னை ஏதாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கமா?” என்று ராசுக்குட்டி கேட்பதிலிருக்கும் அன்பை உணர்ந்து பயணச்சீட்டை கிழித்துப் போட்டு ஆசை தீர மகனை அணைத்து முத்தமழை பொழிகிறாள் ஷில்பா. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 40 | ‘உன்னால் முடியும் தம்பி’ மனோரமா | அண்ணியும் அம்மாதான்!

ஏற்கெனவே குறிப்பிட்டது போல், முதற்காட்சியில் மட்டும் ‘இது விஜய்சேபதியா?’ என்கிற திகைப்பு ஏற்படும். அதற்குப் பிறகான காட்சியில் நடிகரின் பிம்பம் முற்றிலும் மறைந்து ‘ஷில்பா’ என்கிற திருநங்கையின் வாழ்க்கைப் போராட்டத்தை மட்டுமே நம்மால் உணர முடிகிறது.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ‘ஷில்பா’ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ‘ஷில்பா’ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி

இந்தப் பாத்திரத்திற்காக தனது குரலை வித்தியாசமான தொனியில் உபயோகப்படுத்தியிருந்தார் விஜய்சேதுபதி. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் பல சுவாரசியமான துணைப் பாத்திரங்கள் இருந்தாலும் தனது அபாரமான நடிப்பால் அனைவரையும் முந்திக் கொண்டு முன்னால் நிற்கிறாள் ‘ஷில்பா’. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 39 | ‘இப்படியொரு நண்பன் நமக்கு கிடைக்க மாட்டானா?’- சேது ஸ்ரீமன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com