சரத்பாபு - ஒரு ஹீரோவிற்கு நிகரான பொலிவான தோற்றத்தைக் கொண்டவர். பார்ப்பதற்கும் ‘எலீட்’ லுக்கில் ஸ்டைலாக இருப்பார். ஆனால் பெரும்பாலும் துணைப் பாத்திரங்களில் மட்டும்தான் இவரால் நடிக்க முடிந்தது. அதிலும் பெரும்பாலும் ஹீரோவிற்கு நண்பன் வேடம். முதலில் துரோகம் செய்து கடைசியில் திருந்தும் கெட்ட நண்பனாக ரஜினி, கமல் படங்களில் நிறைய நடித்திருந்தார்.
ஆனால் ஒரு நல்ல நண்பனாக சரத்பாபு நடித்திருப்பதில் மறக்க முடியாத திரைப்படம் ஒன்றுண்டு. அது ‘சலங்கை ஒலி’.
தெலுங்கு டப்பிங் படம்தான் என்றாலும் அந்தக் குறையை உணர முடியாமல் செய்தவர்கள் கமல் மற்றும் இளையராஜா. கே.விஸ்வநாத் என்கிற சிறந்த இயக்குநரின் கைவண்ணத்தில் உருவான திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
இந்தப் படத்தில் பாலு என்கிற அதிசிறந்த நடனக்கலைஞனுக்கு கடைசி வரையிலும் ஆதரவளிக்கும் உன்னதமான நண்பனாக ‘ரகு’ என்கிற பாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்பாபு. இப்படியொரு நண்பன் நமக்கு இருக்கக்கூடாதா என்று படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஏங்க வைக்கும் அளவிற்கு இவரது நடிப்பு ஆத்மார்த்தமாகவும் உணர்ச்சிகரமாகவும் அமைந்திருந்தது.
பாலு ஒரு திறமையான நடனக்கலைஞன். அவனால் கலையில் போலித்தனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது. கடந்த கால சோகம் காரணமாக எப்போதும் குடியில் மூழ்கியிருக்கிறான். ஒரு பெண்ணின் நடனத்தை மற்ற பத்திரிகைகள் ஆதாயத்திற்காக பாராட்டி எழுதியிருக்க, பாலு மட்டும் அதை கடுமையாக விமர்சித்து எழுதி பணியை இழக்கிறான். அவனுக்கு வேலை போன விஷயத்தை, பத்திரிகையின் மேனேஜர் சொல்லும் காட்சியில் நண்பன் ரகுவின் அறிமுகம் நமக்கு கிடைக்கிறது.
பின்னணியில் இயந்திரங்கள் ஓட ரகுவும் மேனேஜரும் பேசுவது நமக்கு கேட்கவில்லை. ரகு கெஞ்ச, மேனேஜர் கோபமாக பேச காட்சி முடிகிறது. வசனம் எதுவும் இல்லாமலேயே இந்த விஷயத்தை நமக்குப் புரிய வைத்து விடுகிறார் இயக்குநர் விஸ்வநாத். பாலுவைத் தேடி கோபமாகச் செல்கிறான் ரகு.
“உன்னை யாராலயும் திருத்த முடியாது. ஒரு வேலை இருந்தா பொறுப்போட இருப்பேன்னு அவன் கால்ல.. இவன் கால்ல விழுந்து வேலை வாங்கிக் கொடுத்தா.. “ என்று ஆரம்பித்து சகட்டு மேனிக்கு திட்டுகிறான். ஆனால் அந்தக் குரலில் உண்மையான விரோதம் இல்லை. வெறும் ஆதங்கம்தான் இருக்கிறது.
பாலு இரும ஆரம்பிக்க, ரகு திட்டிக் கொண்டே அவன் அருகில் சென்று நெஞ்சில் தடவிக் கொடுக்கும் காட்சி சுவாரசியமான முரணுடன் அமைந்திருக்கிறது.
நண்பனின் உரிமையான கோபத்தையும் அடுத்த கணத்தில் வெளிப்படும் உண்மையான அன்பையும் எப்படி கலந்து ஒரு சிறிய அசைவில் பார்வையாளர்களுக்கு உணர்த்தி விட முடியும் என்பதற்கு சிறப்பான உதாரணம் இந்தக் காட்சி.
“உனக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம்.. அண்ணனா.. தம்பியா.. எனக்கு பொறுமை போயிடுச்சு. இனிமே உனக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை” என்று ரகு ஆத்திரத்தில் வெடித்து நகர முற்பட, நட்பு குறித்த ஒரு கவிதையை பாலு பாவத்துடன் பாடுகிறான். ரகு அதைக் கேட்டு உறைந்து நிற்கிறான்.
“இந்த உலகத்துலயே இப்படியொரு கவிதையை என் நண்பனாலதான் எழுத முடியும். முட்டாள். சம்பந்தம் இல்லையா.. நான் செத்துப் போயிட்டா யாரு எனக்கு கொள்ளி வைப்பா?” என்று பாலு கேட்க, ரகுவின் மொத்தக் கோபமும் இறங்கி விடுகிறது.
உயிருக்கு உயிரான நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் தற்காலிக கோபத்தை இந்தக் காட்சி சிறப்பாக சித்தரித்திருக்கிறது.
ஒரு சமையல் குழுவில் பணிபுரியும் பாலுவின் அம்மா, ஊர் ஊராக பயணிக்க வேண்டியிருக்கிறது. அம்மாவைப் பார்ப்பதற்காக ரயில் நிலையத்திற்கு விரைகிறான் பாலு. ரயில் கிளம்பும் போது ‘செலவுக்கு வெச்சுக்கப்பா’ என்று பணம் தருகிறாள் அம்மா. “டேய்.. நீ வேலை செஞ்சு உன் அம்மாவிற்கு பணம் தரணும். அவங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சத வாங்க உனக்கு வெட்கமா இல்ல” என்று ஒரு சரியான நண்பனாக தகுந்த நேரத்தில் எச்சரிக்கிறான் ரகு. பாலு உடனே ஓடிப் போய் அம்மாவிடம் பணத்தை திருப்பிக் கொடுத்து வரும் காட்சி அருமையானது.
பாலு செய்யும் தவறுக்காக ரகுவையும் பத்திரிகை அலுவலகத்திற்கு பணிநீக்கம் செய்வதைக் கேள்விப்பட்டு குடிபோதையில் பாலு செய்யும் கலாட்டா சுவாரசியமான காட்சி மட்டுமல்ல, இரு நண்பர்களுக்கும் இடையில் உள்ள ஆத்மார்த்தமான நட்பை உணர்த்தும் காட்சியும் கூட.
“இந்த மேனேஜர் ரெண்டு தப்பு பண்ணிட்டான். என் நண்பன் ரகு.. எவ்வளவு பெரிய கவிஞன் தெரியுமா?” என்று அந்த வரிகளைச் சொல்லிக் காட்டி மேனேஜரின் சட்டையைப் பிடிப்பதில் கமலின் அருமையான நடிப்பு வெளிப்பட்டிருக்கும்.
தேசிய அளவில் நிகழும் ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் ஆடும் வாய்ப்பு பாலுவிற்கு கிடைக்கும். ஆனால் அதே சமயத்தில் அவனுடைய அம்மா நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பார். பாலுவை ஊருக்கு அனுப்ப மற்றவர்கள் தயங்கும் போது “இது பெரிய வாய்ப்பு. இதுக்குத்தான் அவன் ரொம்ப ஆசைப்பட்டான். போய் ஆடிட்டு வரட்டும். பொய் சொல்லி சமாளிப்போம்” என்று ரகு முடிவு செய்வதும், “எங்க அம்மா வராம நான் ஆட மாட்டேன்” என்று பாலு அடம்பிடிப்பதால் அந்தப் பொய் உடனே உடைந்து விடுவதும் நெகிழ்வான காட்சி.
நீண்ட காலம் கழித்து பாலுவின் முன்னாள் காதலியான மாதவி, பாலுவைப் பார்க்க வருகிறாள். குடிப்பழக்கத்தால் பாதி உயிராக இருக்கும் பாலுவைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். பாலு அப்போது கோயிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான்.
அர்ச்சனைத் தட்டை தந்து விட்டு மாதவி மற்றும் அவளுடைய கணவனின் பெயரை பாலு சொல்வதைக் கேட்டு மாதவி கண்கலங்குகிறாள். “அவன் வருஷத்துல எல்லா நாளும் குடிச்சாலும் இந்த ஒரு நாள் மட்டும் குடிக்க மாட்டான். இதுக்காகத்தான் அவன் உயிரோடவே இருக்கான்” என்று ரகு அதை விளக்குகிறான். அது மாதவியின் திருமண நாள்.
உண்மையில் மாதவியின் கணவன் இறந்து விட்டிருக்கிறார். பாலு அதை அறிந்தால் தாங்க மாட்டான் என்று எண்ணி அந்தச் செய்தியை அவனிடமிருந்து மறைக்க முடிவு செய்கிறார்கள். தன் மகளுக்கு பாலுவின் மூலம் பரதநாட்டியம் கற்றுத் தரச் செய்ய மாதவி முடிவு செய்கிறாள். ரகுதான் எப்படியாவது பாலுவை சம்மதிக்கச் செய்ய வேண்டும். ஆனால் உண்மையும் தெரியக்கூடாது.
ஊருக்குப் போகும் ரயிலில் இதைக் கேள்விப்படும் பாலு “என்னது சம்பளத்துக்கு நாட்டியம் கத்துத்தரணுமா… என்ன விளையாடறியா.. அசல் கலைலாம் எப்பவோ செத்துப் போச்சு.. என்னால முடியாது” என்று சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்த முயற்சி செய்கிறான்.
“சரிப்பா.. அப்படியே செய். ஊருக்கு திரும்பிப் போயிடுவோம். அவங்க தர்ற சம்பளத்துல என் மனைவிக்கு, அதான் உன் அண்ணிக்கு வைத்தியம் பார்க்கலாம்ன்னு நெனச்சேன். அவங்களே தங்கறதுக்கு வீடும் தராங்களாம். நமக்கு எதுவும் வேணாம். நாலு வருஷத்துல சாவப் போறவ, இன்னமும் நாலே நாள்ல சாகட்டும்.. என்ன இப்ப?” என்று ரகு ஆடும் சென்டிமென்ட் சரியாக வேலை செய்கிறது. ரகுவின் மனைவியை தனது தாய்க்கு நிகராக வணங்குகிறவன் பாலு. எனவே நடனம் சொல்லித் தர சம்மதிக்கிறான்.
யாரோ ஒருவருக்கு நடனம் கற்றுத்தர வேண்டுமா என்று வேண்டாவெறுப்பாக செல்லும் பாலு, மாதவியின் மகளுக்கு என்பதை அறிந்ததும் உற்சாகமாகிறான். இதன் மூலம் குன்றிய அவனது உடல்நிலையில் பொலிவு கூடுகிறது. ஆனால் இந்த மாற்றம் சிறிது காலம்தான் இருக்கிறது. மாதவியின் கணவன் உயிரோடு இல்லை என்கிற தகவலை தற்செயலாக அறிந்ததும் உடல்நலம் பழையபடி மோசமாகி விடுகிறது.
படுத்த படுக்கையாக இருக்கும் பாலு “நான் உயிரோடு இருந்தும் யாருக்கும் பிரயோசனமில்லை” என்று கசப்புடன் சொல்ல “உனக்குத் தெரிஞ்ச கலையை மாதவியோட மகளுக்கு சொல்லித் தருவே. அதன் மூலம் அந்தக் கலை தொடர்ந்து வாழும். நீயும் சரியாடுவேன்னு மாதவி நம்பறா” என்று அந்தச் சமயத்தில் ரகு சொல்லும் வார்த்தை பாலுவிற்கு புது உற்சாகத்தைத் தருகிறது.
மாதவியின் மகள் ஷைலஜாவிற்கு, தனக்கு உடல்நலம் குன்றிய நிலையிலும் தீவிரமான பயிற்சி அளிக்கிறான் பாலு. இறுதியில் ஷைலஜாவின் நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே அந்த மகிழ்ச்சியில் பாலுவின் உயிர் பிரிகிறது.
தனது நண்பன் ரகுவின் மீது சாய்ந்து பாலுவின் உயிர் பிரிவதை நெகிழ்வான காட்சியாக வைத்திருக்கிறார் இயக்குநர் கே.விஸ்வநாத்.
‘சலங்கை ஒலி’ என்கிற ஒட்டுமொத்த திரைப்படமுமே சிறப்பான காட்சிகளைக் கொண்டது. இதில் பாலுவிற்கும் ரகுவிற்கும் இடையே இருக்கும் உன்னதமான நட்பு, படம் பூராவும் தொடர் இழையாக பயணிப்பதைக் காணும் போது நெகிழ்வாக இருக்கும்.
வயதான கமல், இளமையான கமல் என்று அவர் இரண்டு கெட்டப்களில் வருவதைப் போலவே சரத்பாபுவும் அதற்கு இணையான ஒப்பனைகளில் வந்து சிறப்பாக நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவில் உயிர் நண்பன் என்று எத்தனையோ பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் வரும் ரகுவையும் அந்தப் பாத்திரத்தை சிறப்பாகக் கையாண்ட சரத்பாபுவையும் நம்மால் என்றும் மறக்கவே முடியாது.