‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ என்கிற இந்தத் தொடரில் இது ஐம்பதாவது வாரம். எனவே இந்தக் கட்டுரை நிச்சயம் ஸ்பெஷலாக அமைந்திருக்க வேண்டும் அல்லவா?. எனவே ஒரு ஸ்பெஷலான துணைக் கதாபாத்திரம் பற்றித்தான் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.
யார் அந்த ஸ்பெஷலான நடிகர்? - சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற
ஆம். ‘அபூர்வ ராகங்கள்’ படம் வெளிவந்து நாற்பத்தொன்பது வருடங்கள் நிறைவடைகின்றன. ஆக, ரஜினியின் சினிமா என்ட்ரிக்கும் அதே வயதுதான் ஆகிறது. ரஜினிகாந்த் நடிக்க வந்து நாற்பத்தொன்பது வருடங்கள் நிறைவடைகின்றன.
வருடம் 1974. திரைப்படக் கல்லூரியில் சிவாஜிராவ் படித்துக் கொண்டிருந்த சமயம். தமிழ்ப்பிரிவில் நடந்த ஒரு நடைமுறைத் தேர்விற்காக இயக்குநர் கே.பாலசந்தர் அங்கு செல்கிறார். சிவாஜிராவின் ஆசிரியர் கோபாலி, தன்னுடைய மாணவனை இயக்குநருக்கு அறிமுகப்படுத்தி “இவர் உங்களின் தீவிர விசிறி. உங்களுடைய படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்” என்று சொல்கிறார்.
தனக்கு முன்னால் பதட்டத்துடன் நின்று கொண்டிருக்கிற இளைஞனைப் பார்க்கிறார் பாலசந்தர். திறமை எங்கிருந்தாலும் சட்டென்று அடையாளம் கண்டுகொள்கிற பாலசந்தருக்கு அந்த இளைஞனின் வித்தியாசமான தோற்றம், உடல்மொழி, வசன உச்சரிப்பு, அசைவுகள் போன்றவற்றின் மீது ஈர்ப்பு வருகிறது. இந்த இளைஞனை சரியாகப் பயன்படுத்தினால் மிக உயரத்திற்குச் செல்வான் என்று அவரது உள்ளுணர்வு அடித்துச் சொல்கிறது. அந்த எண்ணம் பிறகு நிஜமாக ஆனது மட்டுமல்லாமல் வரலாறாகவும் மாறுகிறது.
திரைப்படக்கல்லூரியில் நடந்த கேள்வி-பதில் நேரத்தில், இயக்குநர் பாலசந்தரிடம் சிவாஜிராவ் கேட்ட கேள்வி இதுதான். ‘ஒரு நடிகரிடம் நடிப்பைத்தாண்டி என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’ பாலசந்தர் உடனே சொன்ன பதில் இது. ‘வெளியில் நடிக்கக்கூடாது’.
என்று பிறகு ஒரு நேர்காணலில் சொல்கிறார் ரஜினிகாந்த்.
சிவாஜிராவ், இயக்குநர் பாலசந்தரை சந்தித்த சில நாட்கள் கழித்து பாலசந்தரிடமிருந்து அழைப்பு வருகிறது. “எதாவது நடித்துக் காட்டு” என்று இயக்குநர் சொல்கிறார். பதட்டத்துடன் சிவாஜிராவ் நடித்துக் காட்டியவுடன் சற்று மௌனமாக இருந்த பாலசந்தர், “உன்னை என்னுடைய மூன்று திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்கிறேன்” என்கிறார். அந்த வரிசையில் முதல் திரைப்படம்,
சிவாஜிராவிற்கு சினிமாவிற்காக என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்த பாலசந்தர், தான் இயக்கிய ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில் வரும் ஒரு கேரக்டரின் பெயரை அவருக்குச் சூட்டினார். ‘ரஜினிகாந்த்’ என்கிற அந்தப் பெயர்தான் பிறகு கோடிக்கணக்கானவர்கள் உச்சரிக்கும் வசீகரமான வார்த்தையாக மாறியது. ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டப்பட்டாலும் ‘அபூர்வ ராகங்கள்’ உள்ளிட்ட சில ஆரம்ப படங்களின் டைட்டில் கார்டில் ‘ரஜனிகாந்த்’ என்று பிழையாக காட்டப்பட்டது. ரஜினிகாந்த் என்றால் ‘இருளின் நிறம்’ என்பதாக பொருள் சொல்லப்படுகிறது.
பிறப்பால் மராட்டியம். வளர்ந்தது கன்னடம் என்பதால் ரஜினிகாந்த்தின் தமிழ் உச்சரிப்பு தாறுமாறாக இருந்தது. அவருடைய வேகமான உடல்மொழி. அசைவு, வசன உச்சரிப்பு போன்றவற்றால் பாலசந்தர் வசீகரிக்கப்பட்டார். வசனத்தை தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பேசி நடிப்பதுதான் ‘சிறந்த நடிப்பு’ என்று அதுவரை நம்பப்பட்ட டெம்ப்ளேட்டை ரஜினியின் மூலம் உடைக்க விரும்பினார் பாலசந்தர்.
ஆனால் பேசப்படுகிற தமிழ் பார்வையாளர்களுக்கு சற்றாவது புரிய வேண்டுமல்லவா? ‘நீ தமிழைப் பேசுவதற்கு விரைவில் கற்றுக் கொண்டால் பட வாய்ப்பு உறுதி’ என்கிற பாலசந்தரின் உத்தரவை சின்சியராக கடைப்பிடித்த ரஜினி, தினத்தந்தி போன்ற நாளிதழ்கள், நண்பன் ராஜாபகதூரிடம் கற்றுக் கொள்வது போன்றவற்றின் வழியாக விரைவிலேயே தமிழ் பேசக் கற்றுக் கொண்டார். இன்றும் கூட ரஜினிகாந்த்தின் தமிழ் உச்சரிப்பு சற்று விநோதமாகத்தான் இருக்கும். என்றாலும் அதுவே அவரது ஸ்டைலாகவே மாறியது.
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில், ஒவ்வொரு பிரதான கதாபாத்திரத்தின் அறிமுகம் நிகழும் போதெல்லாம், இசையுடன் தொடர்புடைய ஒரு வாசகம் தலைப்பாக காட்டப்படும் அந்த வகையில் ரஜினிகாந்த்தின் என்ட்ரி நிகழும் போது ‘சுருதி பேதம்’ (அதாவது அபஸ்வரம்) என்கிற எதிர்மறையான அடையாளத்துடன் நிகழும்.
நெகட்டிவ் தன்மையுடைய கேரக்டருடன் என்ட்ரி தந்தாலும், பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் பாசிட்டிவ் உச்ச நட்சத்திரமாக ரஜினி உயர்வார் என்பதை அவர் உட்பட எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘பாண்டியன்’ என்பதுதான் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ரஜினியின் பாத்திரப் பெயர்.
கதைப் போக்கின் படி கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் இணையும் சமயத்தில் அந்த உறவை தன்னிச்சையாக கலைப்பது போல் கணவரான ரஜினிகாந்த்தின் வருகை அமைந்திருக்கும். ராகமும் தாளமும் இணையப் போகும் தருணத்தில் “பைரவி வீடு இதுதானே?” என்கிற கேள்வியுடன் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைவார் ரஜினி.
அவர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கான சூரிய வெளிச்சம் அப்போதே அவருடைய முகத்தில் துல்லியமாகத் தெரிந்தது என்றெல்லாம் கம்பி கட்டும் கதையைச் சொல்ல முடியாது. சாதாரணமான தோற்றம்தான். கேரெக்டரின் படி, மரண தறுவாயில் உள்ள புற்றுநோயாளி மற்றும் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வந்திருக்கும் கணவன் என்பதால் பஞ்சத்தில் அடிபட்ட மாதிரியான தோற்றம். பொருந்தாத ‘தொள தொள’ கோட், பரிதாபத்தை ஏற்படுத்தும் தாடி, இரக்கத்தைக் கோரும் கண்கள், கலைந்த தலைமுடி என்கிற கெட்டப்பில் இருந்தார் ரஜினி.
ஒருவேளை ரஜினியின் வெற்றிப் பாதை விதியால் தீர்மானிக்கப்படாமல் போயிருந்தால் ஒரு துணை நடிகராகவே கூட அவரது கேரியர் அமைந்திருக்கலாம். அந்த அளவிற்கான தோற்றம் மற்றும் நடிப்பு மட்டும்தான் அப்போது அவரிடம் இருந்தது. பின்னர் அவர் சூப்பர் ஸ்டாராகி விட்டதால், இப்போது நாம் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ரஜினி வரும் காட்சிகளை ஒருவிதமான பரவசத்துடன் பார்க்கக்கூடும். ஆனால் அவர் யாரென்றே தெரியாத காலக்கட்டத்தில் ஒரு சாதாரண நடிகராகவே பார்வையாளர்களின் கண்களில் கடந்து சென்றிருப்பார் என்பதுதான் யதார்த்தம்.
ஆனால் ஒன்றைச் சொல்ல வேண்டும். என்னதான் துணை கேரெக்டர் என்றாலும் கேட்டைத் தள்ளித் திறக்கும் காட்சியில் ரஜினியின் அந்த மேனரிஸத்தின் துளி தன்னிச்சையாக வெளிப்பட்டதைக் கவனிக்க முடியும். குறிப்பாக அந்தக் கைகளின் அசைவு. தனது காதல் நிறைவேறப்போகும் சந்தோஷத்தில் படபடப்பாக இருப்பார் கமல். அதைக் கலைப்பது போல் வந்திருக்கும் ரஜினியின் மீது அவருக்கு ஆத்திரமாக வரும். கமலின் நடிப்பு ஆவேசமாக அமைந்திருக்கும் அதே சமயத்தில் அதன் எதிர்முனையில் ரஜினியின் அசைவுகளில் அப்படியொரு நிதானம் உறைந்திருக்கும்.
பழைய கணவன் திரும்பி வந்திருக்கிறான் என்கிற விஷயம் ஸ்ரீவித்யாவிற்கு தெரிந்து விடக்கூடாது என்பதால் ரஜினியை அவசரம் அவசரமாக பைக்கில் ஏற்றிக் கொண்டு செல்வார் கமல். தமிழ் சினிமாவின் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு இருவரும் இணைந்து பயணிக்கப் போகிறார்கள் என்பதின் முன்னோட்டம் போலவே அந்தக் காட்சி அமைந்திருந்தது.
ஆட்கள் யாருமற்ற வனாந்திரப் பிரதேசத்தில் ரஜினியை இறக்கி விடுவார் கமல். ‘நாம எதுக்கு இங்க வந்திருக்கோம்?’ என்று வெள்ளந்தியாக கேட்கும் ரஜினியின் உச்சரிப்பில் கன்னட மொழியின் வாசனை சற்று கலந்திருப்பதை உணர முடிகிறது. “என்னால் இந்தத் திருமணத்திற்கு இடையூறு வராது, மனம் திருந்தி மன்னிப்பு கேட்கவே நான் வந்திருக்கிறேன்” என்பதை ரஜினி நிரூபித்த பிறகு ‘ஜென்டில்மேன்’ என்று அவரை கமல் பாராட்டுவார். இந்தக் காட்சிகளில் ரஜினியின் நடிப்பில் தொியும் நிதானம் பாராட்டத்தக்கதாக இருக்கும்.
ரஜினியால் தனக்குத் தொந்தரவில்லை என்பதையும் அவரது நற்குணத்தையும் அறியும் கமல், தன்னுடைய பாதுகாப்பில் அவரை வைத்துக் கொள்வார். மருத்துவம் பார்ப்பதற்காக வரும் டாக்டர் நாகேஷ், ரஜினியை கன்னாபின்னாவென்று கலாய்த்து பேசுவது சுவாரசியமான காட்சி. “மலையாள ஆக்டர் சத்யனை தெரியாதா.. செம்மீன் படம் கூடவா பார்த்ததில்ல?… உங்களுக்கு புற்றுநோய் வரலாம்.. தப்பில்ல” என்றெல்லாம் நாகேஷ் குதர்க்கமாக பேசுவதை, சாய்ந்து படுத்தபடி கசப்பான புன்னகையுடன் அசைவில்லாமல் பார்த்துக் கொண்டிருப்பார் ரஜினி. தன்னை அரவணைத்துப் பாதுகாக்கும் கமலை “ஜென்டில்மேன்” என்று பிறகு பாராட்டுவார்.
கிளைமாக்ஸ் காட்சியில் தனது மனைவி பைரவியிடம் (ஸ்ரீவித்யா) மன்னிப்பு கேட்கும் குறிப்பைத் தந்தபடி அரங்கத்தின் வாசலில் உறைந்தபடி நிற்பார் ரஜினி. பாடி முடித்த பிறகு கண்ணீருடன் அவரைத் தேடி வரும் பைரவி, சில வசனங்களுக்குப் பிறகுதான் கணவரின் உயிர் பிரிந்திருப்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைவார்.
‘என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகனுக்கு அப்பா என் மகனுக்கு மாமனார். அப்படியானால் அவங்களுக்கும் எனக்கும் என்ன உறவு?’ என்கிற புதிர்க்கேள்வி இந்தப் படத்தில் வரும் பிரபலமான வசனம். அப்படியொரு உறவுச் சிக்கலில் இந்தப் படம் தத்தளித்துக் கொண்டேயிருக்கும் போது ரஜினியின் வருகையும் மரணமும்தான் அனைத்துக் குழப்பங்களையும் தீர்த்து வைக்கும் விடையைத் தரும் பாத்திரமாக அமைந்திருக்கும்.
முக்கால்வாசி படம் முடிந்த பிறகுதான் ரஜினியின் என்ட்ரி இந்தப் படத்தில் வரும். அதிலும் சில காட்சிகள் மட்டுமே. தொள தொள கோட்டு, பரிதாபமான தாடி ஆகியவற்றையும் மீறி மின்னல் போல ரஜினியின் வசீகரம் பளிச்சிட்டது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக தனது பழைய, சந்தோஷமான மண வாழ்க்கையை ஸ்ரீவித்யா நினைவுகூரும் போது, இளமையான, துள்ளலான ரஜினியின் தோற்றத்தைப் பார்க்க முடியும்.
அபூர்வ ராகங்கள் படத்தின் ‘பாண்டியன்’ என்பது மிகச் சாதாரணமான கேரக்டர்தான். ஆனால் ரஜினிகாந்த் அதில் நடித்திருந்தார் என்பதாலேயே ஸ்பெஷலாக மாறியது.