1988-ல் வெளியான ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ என்கிற திரைப்படம், இன்றைக்குப் பார்த்தாலும் கூட சுவாரசியம் துளி கூட குறையாத அளவிற்கான எமோஷனல் டிராமா. ‘Ente Mamattukkuttiyammakku’ என்கிற தலைப்பில் மலையாளத்தில் ஃபாசில் இயக்கியிருந்தார். பிறகு தமிழ் ரீமேக்கையும் அவரே டைரக்ஷன் செய்தார்.
இதில் எந்த துணைக் கதாபாத்திரத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம்? அதற்கு முன் இந்தப் படத்தின் கதையை ஒரு அவுட்லைனாக தெரிந்து கொள்வது நல்லது. வினோத்தும் லஷ்மியும் மனமொத்த ஒற்றுமையான தம்பதியினர். அவர்களின் அன்பு மகள் ஒரு படகு விபத்தில் இறந்து விடுகிறாள். இந்தச் சோகமான சம்பவம் அந்தக் குடும்பத்தை பெரிதும் பாதிக்கிறது.
தன் மனைவியை இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பதற்காக ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என்று வினோத் ஆலோசனை சொல்ல, ‘என் மகளின் இடத்தை வேறு எவராலும் இட்டு நிரப்ப முடியாது’ என்று லஷ்மி கோபமாகச் சொல்கிறாள். என்றாலும் வினோத்தின் வற்புறுத்தலுக்கு இணங்க அனாதை இல்லத்திற்குச் செல்லும் லஷ்மி, அங்கு டினு என்கிற துறுதுறுவென்கிற சிறுமியைப் பார்த்ததும் மெல்ல மனம் மாறுகிறாள். அந்தச் சிறுமியை தத்தெடுத்து தன்னுடைய மகளைப் போலவே பாசத்தைக் கொட்டி வளர்க்கிறாள். அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி மீண்டும் நிரம்புகிறது.
இப்படியாக அவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் டிராமாவிற்கு எங்கே இடம் இருக்கிறது?! எனவே விதி ‘அலெக்ஸ்’ என்கிற ஆசாமியின் வடிவில் அவர்களின் வாழ்க்கையில் நுழைகிறது.
இந்த ‘அலெக்ஸ்’ கேரக்டரை ஏற்று நடித்திருந்தவர் ரகுவரன். இந்தியச் சினிமாவிலேயே மிகச்சிறந்த நடிகர்களின் பட்டியலை எடுத்தால் அதில் ரகுவரனின் பெயர் தவறாமல் இடம் பெறும். பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக இருந்த ரகுவரன் முதலில் ஹீரோவாக திரைப்படங்களில் அறிமுகமானார்.
பிறகு வில்லனாகவும் குணச்சித்திர பாத்திரங்களிலும் பல படங்களில் நடிப்பால் அசத்தினார். ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் ஆரம்பத்தில் வில்லன் போல தெரியும் அலெக்ஸ், பிறகு ஒரு கட்டத்தில் ஹீரோ போல உயர்ந்து விடுவார். இந்தக் கலவையான குணாதிசயத்தை தனது இயல்பான நடிப்பால் சிறப்பாகக் கொண்டு வந்திருந்தார் ரகுவரன். (மலையாள ஒரிஜினலில் அலெக்ஸாக நடித்திருந்தவர் மோகன்லால்).
சிறுமி டினு பள்ளியில் இருந்து கிளம்புவது, பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்புவது போன்றவற்றையெல்லாம் ஓர் இளைஞன் பின்தொடர்ந்து புகைப்படங்களாக எடுக்கிறான். பரபரப்பான இசை பின்னணியில் ஒலிக்கிறது. அந்த இளைஞன் பார்ப்பதற்கு டிப்டாப்பாக இருந்தாலும், குழந்தையைக் கடத்தும் ஆசாமியோ என்று தோன்றும்படியாக அவனுடைய செயல்கள் இருக்கின்றன.
சிவில் இன்ஜினியரான வினோத்தை கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டில் சென்று சந்திக்கிறான், அந்த இளைஞன். தன்னை ‘அலெக்ஸ்’ என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்கிறான். “என் வொய்ஃப் பேரு மெர்ஸி. எங்களுக்கு குழந்தை இல்ல. அநாதை இல்லத்துல ஒரு பொண்ணை தத்தெடுக்கலாம்ன்னு பார்த்து வெச்சிருந்தோம். வந்து பார்த்தா, நீங்க அதுக்குள்ள அந்தப் பொண்ணை எடுத்துட்டுப் போயிட்டீங்க” என்று வந்திருக்கும் விஷயத்தை மெல்ல அவிழ்க்கிறான் அலெக்ஸ். இதைக் கேட்டு உள்ளுக்குள் எரிச்சலாகும் வினோத், அதைப் பணியாளர்களிடம் காட்டுகிறான்.
உதவி கேட்டு வந்திருக்கும் ஒருவன், அதனால் எரிச்சலாகும் இன்னொருவன் என இருவரின் நடிப்பும் இந்தக் காட்சியில் கச்சிதமாக வெளியாகியிருக்கிறது. இந்தச் சமயத்தில் வீட்டிலிருந்து போன் வருகிறது. தன் மகளிடம் வினோத் மிகவும் பாசமாகப் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறான் அலெக்ஸ். பிறகு “இந்த விஷயமா இனிமே என்னைப் பார்க்க வராதீங்க” என்று அலெக்ஸை வெளியே துரத்தாத குறையாக வினோத் பேச.. ‘ஓகே.. ஓகே..’ என்று அடிபட்ட முகத்துடன் கிளம்பிச் செல்கிறான் அலெக்ஸ்.
தன்னுடைய வீட்டில் மனைவி மற்றும் மகளுடன் வினோத் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது வாசலில் ஒரு உருவம். மீண்டும் அலெக்ஸ். “ஏன்யா.. நீ படிச்சவன்தானே.. ஒருமுறை சொன்னா புரியாதா.. அன்னிக்கே சொன்னேன்ல” என்று ஏக வசனத்தில் எரிச்சலாகிப் பேசுகிறான் வினோத். “என்னால வராம இருக்க முடியாது மிஸ்டர் வினோத். ஏன்னா.. டினு என்னோட மனைவியோட குழந்தை” என்று புதிர் போல சொல்லும் அலெக்ஸைப் பார்த்து திகைத்து நிற்கிறான் வினோத்.
தனது குடும்பத்தை வீட்டிற்குள் அனுப்பி விட்டு “என்ன சொன்ன.. புரியல.. உன் மனைவியோட குழந்தையா?” என்று புரியாமல் கேட்கும் வினோத், “ஓகே.. இது இங்க பேச வேண்டிய விஷயமில்ல. ஆபிஸ் பக்கம் வாங்க” என்று அப்போதைக்கு அலெக்ஸை திருப்பியனுப்புகிறான்.
விடாக்கண்டன், கொடாக்கண்டன் மாதிரி அவர்களுக்குள் ஒரு பூனை எலி விளையாட்டு ஆரம்பிக்கிறது. கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டில் மீண்டும் அலெக்ஸ் வந்து நிற்க, “இவனிடம் கோபித்துக் கொண்டால் வேலைக்கு ஆகாது. சிரித்தே கழுத்தை அறுக்க வேண்டும்” என்று முடிவு செய்தவன் போல வினோத் சிரித்துப் பேசி “நான் ரொம்ப பிஸியா இருக்கேன். இப்ப பேச முடியாது” என்று துரத்த முயல. “எவ்ளோ நேரம் ஆனாலும் வெயிட் பண்றேன், மிஸ்டர்” என்று எதிரேயிருக்கும் மைதானத்தில் அமர்ந்து கொள்கிறான் அலெக்ஸ்.
கட்டடிப் பணிகளுக்கு இடையில் அவ்வப்போது வினோத் வெளியே எட்டிப் பார்ப்பதும், மைதானத்தில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் அலெக்ஸ், தலையை உயர்த்தி இதைப் பார்ப்பதும் என, இந்தப் போராட்டம் சுவாரசியமான காட்சிகளாக படமாக்கப்பட்டிருக்கின்றன. ‘காலெல்லாம் நோகுதடி.. கண்ணே.. உன்னைத் தேடி’ என்று பின்னணியில் இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் பாட்டு, இந்தக் காட்சிகளின் எமோஷனை இன்னமும் உயரத்திற்கு இட்டுச் செல்கிறது.
இப்போது வினோத்திற்கு வேறு வழியே இல்லை. காலையில் இருந்து மாலை வரை அலெக்ஸ் நிகழ்த்தும் நீண்ட காத்திருப்பு அவனுடைய மனதை இளகச் செய்கிறது. “சரி.. வாங்க.. போய்ப் பேசுவோம்” என்று இருவரும் கிளம்புகிறார்கள். தான் குழந்தையைத் தேடுவதின் பின்னணிக் கதையை பாகம் பாகமாக விவரிக்கிறான் அலெக்ஸ்.
அலெக்ஸூம் மெர்ஸியும் புது மணத் தம்பதிகள். ஆனால் மெர்ஸியின் கடந்த காலத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. திருமணத்திற்கு முன்பான ஒரு காதலின் மூலம் மெர்ஸிக்கு குழந்தை உருவாகிறது. காதலன் விபத்தில் இறந்து விடுகிறான். என்றாலும் குழந்தையைக் கலைக்க விரும்பாமல் பிடிவாதத்துடன் பெற்றுக் கொள்கிறாள் மொ்ஸி.
இதனால் ஆத்திரமடையும் மெர்ஸியின் பெற்றோர், குழந்தையை அநாதை இல்லத்தில் தந்து விட்டு மெர்ஸிக்கு இன்னொருவனை திருமணம் செய்து வைக்கிறார்கள். இதையெல்லாம் திருமணத்திற்குப் பிறகு மனைவியின் மூலமாகவே அறிந்து கொள்ளும் அலெக்ஸ், கோபத்துடன் புது மனைவியை விட்டு விட்டு பம்பாய்க்கு சென்று விடுகிறான்.
“உனக்கு வர்ற புது துணை, குழந்தையை ஏத்துக்கறவனா இருக்கலாம்” என்று சர்ச் ஃபாதர் சொன்னதைக் கேட்டுத்தான் மெர்ஸி இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். ஆனால் ஒரு சராசரியான கணவனாக அலெக்ஸ் விலகி விடுகிறான். தன்னுடைய குழந்தையாவது தனக்கு திரும்பக் கிடைக்குமா என்று போராடுகிறாள் மெர்ஸி. அவளுக்கு புத்தி பேதலித்து விடுகிறது. மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.
பம்பாயில் இருக்கும் அலெக்ஸ், இந்த விஷயத்தையெல்லாம் அறிந்து குற்றவுணர்ச்சி அடைகிறான். தன்னால்தான் இதெல்லாம் நடந்ததோ என்று வருத்தமடைகிறான். குழந்தைதான் மெர்ஸி குணமாவதற்கான மருந்து. எனவே தாயையும் குழந்தையையும் சோ்த்து வைக்க முடிவு செய்கிறான். அலெக்ஸ் டினுவை தரச் சொல்லி வற்புறுத்துவதின் பின்னணி இதுதான்.
இந்த பிளாஷ்பேக்கை விவரிக்கும் காட்சிகளில் “எனக்கு என் மனைவி திரும்ப வேணும் மிஸ்டர் வினோத்.. ப்ளீஸ் ஹெல்ப்” என்று அழுது கதறும் ரகுவரனின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. ஆரம்பத்தில் வில்லனாகத் தெரிந்த இளைஞனின் பின்னால் இத்தனை கருணையுள்ளம் இருக்கிறதா என்று நெகிழ்வாக இருக்கிறது.
வினோத்திற்கு இப்போது தர்மசங்கடம். அலெக்ஸ் சொன்ன கதை பரிதாபமாகத்தான் இருக்கிறது. அதற்காக தன்னுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியை மீட்டுத் தந்த டினுவை தூக்கிக் கொடுத்து விட முடியுமா? ஒருவேளை வினோத் ஒப்புக் கொண்டாலும், தத்தெடுத்த மகள் மீது அம்மாவிற்கும் மேலாக அன்பைக் கொட்டும் லஷ்மி சம்மதிப்பாளா? நிச்சயம் மாட்டாள். இருதலைக்கொள்ளி எறும்பாக தத்தளிக்கிறான் வினோத்.
அலெக்ஸின் வேண்டுகோள் வில்லங்கமாக இருந்தாலும் வினோத் அவனுடன் மெல்ல நட்பாகிறான். ஒருநாள் வினோத்தை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தன் மனைவி மெர்ஸியின் பரிதாபமான நிலைமையைக் காண்பிக்கிறான் அலெக்ஸ். டினு திரும்பக் கிடைத்தால்தான் அவள் குணமாவாள் என்கிற நிதர்சனம் வினோத்திற்குப் புரிகிறது. என்றாலும் நடைமுறையில் சாத்தியப்படுத்த மனம் ஒப்புக் கொள்வதில்லை.
‘ஒரேயொரு முறை டினுவை கூப்பிட்டு வந்து மெர்ஸி கிட்ட காட்டுவோம். இந்த உதவியை மட்டும் பண்ணுங்க மிஸ்டர் வினோத்” என்று அலெக்ஸ் பயங்கரமாக கெஞ்ச, மனைவிக்குத் தெரியாமல் டினுவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான் வினோத். சிறுமியைப் பார்க்கும் மெர்ஸி, தலையணையை தூக்கி கோபத்துடன் எறிய “பார்த்தீங்களா.. என்னாச்சுன்னு நீங்க சொன்ன உதவியை செஞ்சாச்சு.. நாங்க கிளம்பறோம்” என்று வினோத் கிளம்ப “கொஞ்ச நேரம் இருங்க.. ப்ளீஸ்..” என்று அலெக்ஸ் கெஞ்சும் காட்சியில் ரகுவரனின் நடிப்பு நெஞ்சை உறுக்கிவிடும். சிறிது நேரத்திற்குப் பிறகு தன் குழந்தையை அடையாளம் கண்டு தூக்கிக் கொண்டு மொ்ஸி கொஞ்ச ஆரம்பிக்க, டினு பயந்து அலறுகிறாள்.
மெர்ஸியிடமிருந்து குழந்தையை பலவந்தமாக பிடுங்கும் வினோத், டினுவைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வருகிறான். பின்னாலேயே ஓடி வரும் அலெக்ஸிற்கும் வினோத்திற்கும் இடையே மோதல் ஆரம்பிக்கிறது. இதனால் பயந்து போய் டினு அழ ஆரம்பிக்க, சட்டென்று சண்டையை நிறுத்திக் கொண்டு இருவரும் ‘நாங்க சண்டை போடலை.. விளையாடினோம்’ என்று பொய் சொல்கிறார்கள். குழந்தையை சமாதானப்படுத்துவதற்காக அவர்கள் வேடிக்கையாக பாடும் ஒரு பாடல் சுவாரசியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
“மிஸ்டர் அலெக்ஸ்.. டினு மொ்ஸியோட குழந்தைதான்னு தெரிஞ்சு போச்சு. ஆனா இதை என் மனைவி கிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லணும்.. அதுதான் எப்படின்னு எனக்குப் புரியல. கொஞ்சம் டைம் கொடுங்க” என்று வினோத் சொல்ல, அது அலெக்ஸிற்குப் புரிய ‘இட்ஸ் ஓகே’ என்று தலையாட்டுகிறான்.
பிறகு என்னவாயிற்று? வினோத் - லஷ்மி தம்பதியினர் குழந்தையைத் திருப்பித் தந்தார்களா? மெர்ஸிக்கு குணம் ஆயிற்றா? அலெக்ஸின் போராட்டம் வெற்றி பெற்றதா?’ என்பதை உணர்ச்சிகரமான கிளைமாக்ஸைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தப் படத்தில் வினோத்தாக சத்யராஜூம், லஷ்மியாக சுஹாசினியும் தங்களின் சிறப்பான நடிப்பை போட்டி போட்டுக் கொண்டு தந்திருப்பார்கள். இவர்களுக்கு நடுவில் ஸ்கோர் செய்வது எளிதான விஷயமில்லை. ஆனால் அதை தனது இயல்பான நடிப்பால் சாதித்திருப்பார் ரகுவரன். புது மனைவியின் துரோகம், அதனால் ஏற்படும் விலகல், மனைவியின் மனநலம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் குற்றவுணர்வு, அதற்கு மருந்தாக இருக்கும் குழந்தையை அடைவதற்கான போராட்டம் என்று பல காட்சிகளில் ரகுவரனின் நடிப்பு இயல்பான உணர்ச்சிகரத்துடன் அமைந்திருந்தது.
ஒரு காலக்கட்டத்தில் சத்யராஜூம் ரகுவரனும் இணைந்து நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருந்தன. அந்த வரிசையில் ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ ஒரு நல்ல எமோஷனல் டிராமா என்றால் அதில் அலெக்ஸாக நடித்த ரகுவரனின் துணைப் பாத்திரம் மறக்க முடியாத பங்களிப்பாக அமைந்திருந்தது.