மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | அழகிய தீயே | அதிசுவாரசிய அமெரிக்க மாப்பிள்ளையாக பிரகாஷ்ராஜ்!

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘அழகிய தீயே’ திரைப்படத்தில் ‘பிரகாஷ்ராஜ்’ ஏற்று நடித்திருந்த ‘அரவிந்த்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
நடிகர் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ்‘அழகிய தீயே’ படம்
Published on

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

இயல்பான நகைச்சுவை, அடக்கமான உணர்ச்சிகரம், சுவாரசியமான திரைக்கதை போன்றவற்றின் கலவையோடு பல திரைப்படங்களை இயக்கியவர் ராதாமோகன். அவருடைய இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம்,

‘அழகிய தீயே’

வெளியாகி 20 வருடங்கள் ஆகப்போகும் இந்தத் திரைப்படத்தில் வரும் ஒரு சுவாரசியமான கேரக்டரைப் பற்றி இந்த வாரக் கட்டுரையில் பார்ப்போம்.

அழகிய தீயே திரைப்படம்
அழகிய தீயே திரைப்படம்

அமொிக்க மாப்பிள்ளை என்பது இந்தியச் சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாததொரு அம்சம். காதலர்களுக்கு நடுவே இடையூறு போல இவர்கள் புயல் வேகத்தில் உள்ளே நுழைவார்கள். இவர்களில் பல வில்லன்களும் உண்டு. விட்டுக் கொடுக்கும் சில தியாகிகளும் உண்டு. அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் போல எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அமைதியாக கடந்து விடுபவர்களும் உண்டு. 

நடிகர் பிரகாஷ்ராஜ்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்|'மனதில் உறுதி வேண்டும்'- எஸ்.பி.பி ஏற்று நடித்த Dr.அர்த்தநாரி!

அமொிக்க மாப்பிள்ளை என்னும் இந்த சுமாரான கேட்டகிரியில், இப்படியொரு அதிசுவாரசியத்துடன்  ஒரு கேரெக்டர் அதுவரையான தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்பட்டிருக்குமா என்பது ஆச்சரியம்தான்.

‘அழகிய தீயே’ படத்தில் ‘அரவிந்த்’ என்னும் பாத்திரத்தின் மூலம் அந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார் ராதா மோகன். பிரகாஷ்ராஜ் என்னும் திறமையான நடிகர் அதை அநாயசமாக சாதித்திருக்கிறார். 
பிரகாஷ்ராஜ் - ராதா மோகன்
பிரகாஷ்ராஜ் - ராதா மோகன்

வித்தியாசமான அமொிக்க மாப்பிள்ளை

திருமணத்தில் விருப்பமில்லாத நாயகி, அமொிக்காவில் சாப்ஃட்வேர் இன்ஜினியராக இருக்கும் அரவிந்த் என்னும் வரனை மறுக்கிறார். ஆனால் முரட்டுத்தனமான தந்தையோ அந்தக் கல்யாணத்தை நடத்தியே தீருவேன் என்று மகளை மிரட்டுகிறார். திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக, சகோதரனைப் போல் கருதும் ஒருவனிடம் யோசனை கேட்கிறாள் நாயகி. அவன் ஹீரோவிடம் சென்று ஐடியா கேட்க, சினிமாவில் இயக்குநராகும் கனவுடன் இருக்கும் ஹீரோ, ஒரு சினிமாத்தனமான ஐடியாவை சொல்வதும் அதன் சுவாரசியமான, விபரீதமான எதிர்வினைகளும்தான் இந்தத் திரைப்படம். 

நடிகர் பிரகாஷ்ராஜ்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 42- இயல்பான நடிப்பில் பிரமிட் நடராஜன்- அலைபாயுதே

நாயகிக்கு ஒரு கற்பனையான காதலை உருவாக்கும் ஹீரோ, அந்த விஷயத்தை அமொிக்க மாப்பிள்ளையிடம் சொன்னால் திருமணம் நின்று விடும் என்று ஐடியா தர, காதலனாக நடிக்கச் சொல்லி அவனையே களத்தில் இறக்கி விடுகிறார்கள். அந்த ஐடியா தன்னுடைய வாழ்க்கையையே திசை மாற்றப் போகிறது என்பதை அப்போது அவன் அறிந்திருக்க மாட்டான்.

பிரசன்னா
பிரசன்னா‘அழகிய தீயே’ படம்

ஹீரோவான சந்திரன், அமொிக்க மாப்பிள்ளையான அரவிந்தனுக்கு போன் செய்து ‘நந்தினி விஷயமாக உங்களிடம் பேச வேண்டும்’ என்று கேட்க, நட்சத்திர ஹோட்டலில் அப்பாயிண்ட்மென்ட் தரப்படுகிறது. ஹோட்டலின் வாசலில் சந்திரன் பரிதாபமாக காத்திருக்க ஓர் ஆடம்பர கார் விலையுயர்ந்த வேகத்துடன் உள்ளே நுழைகிறது. காரிலிருந்து ஸ்மார்ட்டாக இறங்குபவனைப் பார்த்து திகைத்துப் போகிறான் சந்திரன். ‘இவனையா அந்தப் பொண்ணு வேணாம்ன்னு சொன்னா?”

நடிகர் பிரகாஷ்ராஜ்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 39 | ‘இப்படியொரு நண்பன் நமக்கு கிடைக்க மாட்டானா?’- சேது ஸ்ரீமன்

எரிச்சல், கோபம், அலட்சியம் - பிரகாஷ்ராஜின் அற்புதமான பாடி லேங்வேஜ்

என்றாலும் தன்னுடைய ஐடியாவின் படி அமொிக்க அரவிந்தனை தயக்கத்துடன் அணுகி ‘ஹலோ’ என்கிறான் சந்திரன். ஒரு இந்தியப் பணக்காரனின், அதிலும் அமொிக்காவில் செட்டில் ஆகியிருக்கும் ஒரு செல்வந்தனின் தோரணையை இந்தக் காட்சியில் அற்புதமாக நடித்துக் காட்டியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். ‘குட்மார்னிங்’ என்று சொல்லும் சந்திரனை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கூட பார்க்காமல் ‘குட்மார்னிங்’ என்று அலட்சியமாக சொல்லி விட்டு தன்னை அழைத்தவன் எங்கிருப்பான் என்று தேடுகிறான். “சார்.. நான்தான் சந்திரன்” என்று சொல்லப்பட்டவுடன், அவனை கீழிருந்து மேலாக பார்க்கிறான் அரவிந்தன். 

பிரசன்னா - பிரகாஷ்ராஜ்
பிரசன்னா - பிரகாஷ்ராஜ்‘அழகிய தீயே’ படம்

சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிபவன் எப்படியிருப்பான்..? அதிலும் ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில்.. ? தன் எதிரே எளிய உருவத்துடன் நின்று கொண்டிருக்கும் லோ மிடில்கிளாஸ் ஆசாமியை அலட்சியமாக பார்க்கும் அரவிந்தன், ‘உஃப்’ என்று பெருமூச்சு விட்டு ‘உள்ளே வா..’ என்று உத்தரவு போல சொல்லி விட்டு கோபத்துடன் செல்கிறான். 

நடிகர் பிரகாஷ்ராஜ்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்| “சார்..மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்சு”- VIP ‘அழகு சுந்தரம்’ விவேக்!

எதிரே அமர்ந்திருக்கும் சந்திரனை ஒரு புழுவைப் போல பார்க்கும் அரவிந்தன், கோபத்துடன் கோக் டின்னை உடைக்கும் வேகத்தில் சந்திரனுக்கு கதி கலங்கிப் போகிறது. சந்திரனின் பின்னணியைப் பற்றி விசாரிக்கும் அரவிந்தன் “எத்தனை வருஷமா நந்தினியை லவ் பண்றே.. அப்படின்னா..  கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே.. உன்னை மாதிரி ஒரு பிச்சைக்காரன் கிட்ட நான் தோத்துப் போகணுமா.. நான் யாருன்னு தெரியுமா..” என்றெல்லாம் ஆத்திரத்தில் அதட்ட, ஒட்டுமொத்த ஹோட்டலும் திரும்பிப் பார்க்கிறது. 

பிரசன்னா - பிரகாஷ்ராஜ்
பிரசன்னா - பிரகாஷ்ராஜ்‘அழகிய தீயே’ படம்

“உடம்பையா.. மனசையா.. எதைக் காதலிக்கிறே?”

சங்கடம் காரணமாக, அரவிந்தனுக்குள் இருக்கும் கனவான் விழித்துக் கொள்ள,  தன்னை நிதானித்துக் கொண்டு ‘ஸாரி’ என்று சுற்றும் முற்றும் பார்த்து சொல்கிறான். இது போன்ற எரிச்சல் காட்டும் வில்லத்தனத்தை பிரகாஷ்ராஜ் எப்போதும் நன்றாகவே செய்வார்.

‘இது முத்துப்பாண்டி கோட்டைடி’ என்று கில்லி படத்தில் வருவது போல, கோட்டு சூட்டு அணிந்த இந்த முத்துப்பாண்டியும், கை விரல்களை தேய்த்து உருட்டுவது, கண்களை மூடி நெற்றியில் விரலை வைத்து தேய்ப்பது, முறைத்து எதிராளியைப் பார்ப்பது என்று தன்னுடைய எரிச்சலை திறமையான உடல்மொழியின் வழியாக வெளிப்படுத்துகிறார் பிரகாஷ்ராஜ். 

பிரகாஷ்ராஜ்
பிரகாஷ்ராஜ்‘அழகிய தீயே’ ‘கில்லி’ படம்

“நீ அந்தப் பொண்ணோட உடம்பைக் காதலிக்கிறியா.. மனசையா?” என்று எரிச்சலுடன் அரவிந்தன் கேட்க,

சினிமாவில் பணிபுரியும் சந்திரன், அதே சினிமாத்தனத்துடன் “மனசைத்தான்” என்று கவித்துவமாக பதில் சொல்ல...

“அப்ப.. அவளை நான் கல்யாணம் பண்ணிக்கறேன். அமொிக்காவிற்கு கூட்டிட்டுப் போயி ஆறு மாசம் கழிச்சு அனுப்பிடறேன். அப்புறமா நீ கல்யாணம் பண்ணிக்கோ.. ஏன்னா.. நீ மனசை மட்டும்தானே காதலிக்கிறே?” - என்று அரவிந்தன் நக்கலாக சொல்ல...

‘அய்யோ.. சார்’ என்று அலறுகிறான் சந்திரன்.

இந்த வசனத்தின் மூலம் சினிமாவின் கிளிஷேவான விஷயங்களை கிண்டல் செய்கிறார் ராதாமோகன்.

பிரகாஷ்ராஜ் - நவ்யா நாயர்
பிரகாஷ்ராஜ் - நவ்யா நாயர்‘அழகிய தீயே’ படம்

ஹோட்டலில் இருந்து நேராக நந்தினி பணிபுரியும் அலுவலகத்திற்குச் செல்லும் அரவிந்தன், சந்திரன் உடனான காதலைப் பற்றி பேசி உறுதி செய்து கொள்கிறான். சந்திரன் தன்னிடம் சொன்னபடி அந்தப் பொய்யை தானும் உறுதி செய்கிறாள் நந்தினி. அவளுக்கு எப்படியாவது இந்தத் திருமணத்தில் இருந்து தப்பித்தால் போதும். ஸோ… சந்திரனின் ஐடியா செல்லுபடியாகிறது. யெஸ்.. திருமணம் நின்று போகிறது. சந்திரனுக்கு சந்தோஷமாக சாக்லேட் கொண்டு வந்து தருகிறாள் நந்தினி. 

நடிகர் பிரகாஷ்ராஜ்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 29 | “அப்ப என் காதல் ஃபெயிலியரா?” - அவ்வை சண்முகி மணிவண்ணன்!

பொய்யான காதல் கதையில் தொடரும் டிவிஸ்ட்டுகள்

நியாயமாக இந்தக்  கதை இத்துடன் நின்றிருக்க வேண்டும்… அதுதான் இல்லை… இனிமேல்தான் வேறு மாதிரியான டிவிஸ்ட்டுடன் பயணிக்கிறது.

என்னதான் சந்திரனை கோபத்துடன்  திட்டி விட்டாலும் அரவிந்தனுக்குள் இருக்கிற கனவான், ‘கன்னா பின்னாவென்று’ விழித்துக் கொள்ள அவனுக்குள் இருக்கும் நல்லவன் விஸ்வரூபமெடுத்து நிற்கிறான். இந்த இரண்டு உடல்மொழிக்குமான வித்தியாசத்தை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

பிரசன்னா - பிரகாஷ்ராஜ்
பிரசன்னா - பிரகாஷ்ராஜ்‘அழகிய தீயே’ படம்

ஒரு நாள் இரவில் சந்திரனின் இருப்பிடத்திற்கே வரும் அரவிந்தன், உற்சாகத்துடன் அவனை அழைத்து கடற்கரைக்கு பேச அழைத்துச் செல்கிறான். “அன்னிக்கு நீ திடீர்னு வந்து சொன்னியா.. அதான் உன் மேல கோபம் வந்துடுச்சு.. அப்புறம் ரொம்ப ஃபீல் பண்ணேன்.. ஸாரி.. உன் காதலைப் பத்தி சொல்லு” என்று கேட்க, அரவிந்தனுக்குள் இருக்கும் ஜென்டில்மேன் பற்றி சந்திரனும் அப்போது உணர ஆரம்பிக்கிறான். தான் உருவாக்கிய பொய்யான காதல் கதையைப் பற்றி தானே உணர்ச்சிகரமாக விவரிக்க அதைக் கேட்டு உருகிப் போகிறான் அரவிந்தன்.

நடிகர் பிரகாஷ்ராஜ்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 30 | அஞ்சாதே ‘தயா’ | வில்லன்தனத்தை காட்ட வசனம் எதற்கு?

பிறகு ஆரம்பிக்கிறது அந்தக் களேபரம். திடீரென்று ஒருநாள் புயல் போல் வந்து சந்திரனையும் நந்தினியையும் காரில் அழைத்துச் செல்லும் அரவிந்தன், சென்று சேருமிடம் ரிஜிஸ்டர் ஆஃபிஸ். நந்தினியின் ரவுடி அப்பா, இன்னொரு திருமணத்திற்கு முரட்டுத்தனமாக நந்தினியை வலியுறுத்துவதால் இந்தக் காதலைச் சேர்த்து வைக்க தானே களத்தில் இறங்குகிறான் அரவிந்தன்.

நவ்யா நாயர் - பிரசன்னா - பிரகாஷ்ராஜ்
நவ்யா நாயர் - பிரசன்னா - பிரகாஷ்ராஜ்‘அழகிய தீயே’ படம்

திருடனுக்கு தும்மல் வந்த கதையைப் போல் ஆகி விடுகிறது, சந்திரனுக்கு.  அவன் உருவாக்கிய கதையில் அவனே மாட்டிக் கொள்கிறான். ‘அய்யோ.. சார்.. அது வந்து’ என்று சொல்ல ஆரம்பிப்பதற்குள் அதைத் தடுத்து நிறுத்துகிறான் அரவிந்தன். ‘எல்லாம் எனக்குத் தெரியும்.. நான் பார்த்துக்கறேன்’.

இந்த ‘திடீர்’ திருமணம் காரணமாக சந்திரன் பதட்டப்பட்டாலும் நந்தினியிடமிருந்து பெரிதும் எதிர்ப்பு வருவதில்லை. காரணம், தன்னுடைய அப்பாவிடமிருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்கிற மனநிலையில் அவள் இருக்கிறாள். எனவே இந்தத் தற்காலிக திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். 

நடிகர் பிரகாஷ்ராஜ்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 14 | ரகளையான மாடுலேஷன்... மறக்கவே முடியாத ‘விக்டர்’ அருண்விஜய்!

முத்துப் பாண்டி கனவானாக மாறும் அதிசயம்

அரவிந்தன் வற்புறுத்துவதால் பலியாடு போல மாட்டிக் கொள்ளும் சந்திரனுக்கு பதிவுத் திருமணம் நடந்து முடிகிறது. அந்தச் சமயத்தில் பதிவு அலுவலகத்திற்கு ஆத்திரத்துடன் வரும் அப்பா, நந்தினியைப் போட்டு அடிக்க, நந்தினியின் அண்ணனோ சந்திரனைப் போட்டு உதைத்து நொறுக்குகிறான். இரண்டு பேர்களையும் காப்பாற்றுவதற்காக அங்குமிங்கும் அல்லாடி அரவிந்தன் பாடுபடுவது ஒருவகையான நகைச்சுவைக் காட்சி. 

நவ்யா நாயர் - பிரசன்னா - பிரகாஷ்ராஜ்
நவ்யா நாயர் - பிரசன்னா - பிரகாஷ்ராஜ்‘அழகிய தீயே’ படம்

ஒருவழியாக புதுமணத் தம்பதிகளைக் காப்பாற்றி அழைத்து செல்லும் அரவிந்தன், அவர்கள் தங்குவதற்காக தன்னுடைய வீட்டையே பரிசாக அளிக்கிறான். அன்று இரவு அரவிந்தன் அளிக்கும் விருந்தில் தம்பதியினரும் நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.

“சந்திரன்.. நந்தினியை முதன் முதல்ல எங்க சந்திச்ச.. அதைப் பத்தி சொல்லேன்” என்று அரவிந்தன் ஆவலாக விசாரிக்க, தன்னுடைய சினிமாக் கற்பனையை விஸ்தாரமாக எடுத்து விடுகிறான் சந்திரன்.

நவ்யா நாயர்
நவ்யா நாயர்‘அழகிய தீயே’ படம்

“ஊட்டி சார்.. .ஃபுல்லா பனி.. அது கலைகிற போது பின்னால இருந்து பனிச்சிற்பம் மாதிரி ஒரு பொண்ணு” என்று சந்திரன் வர்ணிக்க வர்ணிக்க.. “வாவ்.. ஸோ.. ரொமாண்டிக்.. ஐ லைக் திஸ்” என்று கண்களை மூடி  உணர்ச்சிவசப்பட்டு அரவிந்தன் புல்லரிப்பது நல்ல நகைச்சுவை. 

நடிகர் பிரகாஷ்ராஜ்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 40 | ‘உன்னால் முடியும் தம்பி’ மனோரமா | அண்ணியும் அம்மாதான்!

சில நாட்கள் கழித்து விடைபெறுவதற்காக சந்திரனைச் சந்திக்கிறான் அரவிந்தன். “அமொிக்காவிற்கு போறேன்.. என் கல்யாணம் நின்னு போனாலும் ஒரு உண்மையான காதலை சேர்த்து வெச்ச நிம்மதி எனக்கு இருக்கு.. சந்திரன்.. உன் கிட்ட இருக்கற நேர்மை பிடிச்சிருக்கு. காதல்ல உண்மையா இருக்கே.. அந்த மாதிரி எனக்கும் அமையலாம். நீதான் இதுக்கு இன்ஸ்பிரேஷன்..” என்றெல்லாம் உணர்ச்சிகரமாகப் பேச, சந்திரனுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை. இப்படியொரு நல்லவரைப் போய் பொய் சொல்லி  ஏமாற்றுகிறோமே என்று உள்ளுக்குள் தவிக்கிறான். 

பிரசன்னா - பிரகாஷ்ராஜ்
பிரசன்னா - பிரகாஷ்ராஜ்‘அழகிய தீயே’ படம்

தில்லுமுல்லு சீனிவாசனும் அழகிய தீயே அரவிந்தனும்

“சார்.. ஒண்ணு கேட்கணும்.. நான் யாருன்னே உங்களுக்குத் தெரியாது.. அப்புறம் எப்படி எதுவுமே எதிர்பார்க்காம.. எனக்கு ஏன் இவ்வளவு உதவி செய்றீ்ங்க?” என்று கேட்க

“நான் உலகம் பூரா சுத்திட்டேன் சந்திரன்.. நிறைய பேரு பணத்துக்கு பின்னாடிதான் ஓடறாங்க.. உன்னை மாதிரி உழைச்சு முன்னேற நினைக்கற.. காதல்ல உறுதியா நின்று போராடிச் ஜெயிக்கிற ஆளு அபூர்வம். அதனாலதான் எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. நீ என் தம்பிடா.. என்ன உதவி வேணுமின்னாலும் தயங்காம கேளு” என்றபடி விடைபெறுகிறான் அரவிந்தன்.

‘தில்லுமுல்லு’ திரைப்படத்தில் ஒரேயொரு மீசையை மட்டும் வைத்து ஏமாற்றும் ரஜினியிடம் அது தெரியாமல் விதம் விதமாக உணர்ச்சிவசப்படுவார் தேங்காய் ஸ்ரீனிவாசன்.

பிரகாஷ்ராஜ் - தேங்காய் ஸ்ரீனிவாசன்
பிரகாஷ்ராஜ் - தேங்காய் ஸ்ரீனிவாசன்‘அழகிய தீயே’ படம் - ‘தில்லு முல்லு’ படம்

அந்த நடிப்பு வேறு விதமென்றால், சந்திரன் சொல்வது பொய்க்கதை என்பது தெரியாமல், அந்தக் காதலுக்காக முதலில் கோபப்பட்டு பிறகு உருகி உணர்ச்சிவசப்பட்டு இருவரையும் சேர்த்து வைக்கும் கனவானாக பிரகாஷ்ராஜ் நிகழ்த்தியிருப்பது இன்னொரு விதமான சுவாரசியம். ‘அரவிந்தன்’ என்கிற அமொிக்க மாப்பிள்யைாக சிறந்த நடிப்பை தந்திருக்கும் பிரகாஷ்ராஜின் இந்தக் கேரெக்டரை எளிதில் மறக்க முடியாது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com