வன்மம்.. பிற்போக்கு.. ஒடுக்குமுறை..கொட்டித் தீர்த்த ‘நாட்டாமை’ பட அரசியல்- அலசல்! #30YearsOfNattamai

நாட்டாமை திரைப்படம் வெளியாகி, இன்றோடு 30 ஆண்டுகள் ஆன நிலையில், அந்தப் படம் பேசிய... இன்றும் நாட்டாமை வழியில் சினிமா பேசிக்கொண்டிருக்கும் பிற்போக்கு அரசியலில் முக்கியமான சில விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
நாட்டாமை
நாட்டாமைபுதிய தலைமுறை
Published on

நம் எல்லோருக்கும் ஏதாவதொரு ஒரு படம்... ‘ஒரு சீன் தப்பா இருந்தா பரவால்ல... ஆனா ஒவ்வொரு சீனும் தப்பாவே இருந்தா... எப்பிடிங்க?’ என நம்மை யோசிக்க வைக்கும். ஆனால் தப்பு என எதை சொல்கிறோம் என்பதில்தான் விஷயம் உள்ளது. கதையா, திரைக்கதையா, இசையா, வசனமா... என்றால் எல்லாத்துக்கும் மேல... படத்தோட கருத்தே தப்பு என்று சில படங்கள் இருக்கும். கருத்தே தவறாக போவதால், அந்தப் படத்தில் ஒவ்வொரு சீனும் தவறாகிவிடும்! அப்படியொரு படத்தை பற்றிதான் இங்கே பார்க்கப்போகிறோம். அப்படி என்ன படம் அது? அதை ஏன் இன்னைக்கு சொல்லணும்? பார்க்கலாம்...

1994-ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், மீனா, குஷ்பூ, விஜயகுமார், கவுண்டமணி, செந்தில் என பெரிய நட்சத்திர பட்டாளமே கூடி நடித்திருந்த படம்தான் நாட்டாமை.

இந்தப் படத்தைதான் முழுக்க முழுக்க தப்பு என்கிறோம். ஏன் அப்படி சொல்கிறோம்? அதுவும் ஏன் இன்று? இதோ சில முக்கியமான காட்சிகளும், அது பேசிய மிக மிக மோசமான தவறான அரசியலும்...

1) படத்தில் முதல் 10 நிமிடங்களுக்குள்ளாகவே ஒரு சீன். ஹீரோ தன் விவசாய நிலத்தில் நடந்துசெல்ல... அவருக்கு குடை பிடிக்க ஒருவர். குடைபிடிக்க தனி ஆள் இல்லை, கணக்காளரே குடை பிடிப்பார். ஹீரோ நடக்க நடக்க, அங்கிருக்கும் எல்லோரும் கையெடுத்து கும்பிட்டு நிற்கிறார்கள். மேல்சட்டை அணியாத ஆண்களும், கைக்கட்டி தலைகுனிந்த பெண்களுமாய்... ஹீரோக்கு வரவேற்பு ‘மரியாதை’யாம்!

வழியில் தன்னிடம் வேலை செய்யும் ஒருவரிடம் ‘பிரசவத்துக்குப் போன உன் மனைவிக்கு காளைக்கன்னா, பொட்டக்கன்னா...’ என கேட்கிறார் ஹீரோ... அவர் பையன் என்கிறார். ‘அடுத்த வாரிசுக்கு ரெடி பண்ணிட்ட’ என ஹீரோ சிரிக்கிறார். கேட்டவருக்கு சந்தோஷம். அன்று தொடங்கிய வாரிசு ஆண் என்பதுதான் மெய்யழகன் வரை கொஞ்சம் கொஞ்சம் திரிந்து திரிந்து மாறிக்கொண்டிருக்கிறது. இன்று வரை, பெண்ணுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதைகூட இந்தச் சமூகம் ஏதோ பாவப்பட்ட விஷயமாகவே பார்க்கிறது.

சட்டப்படி பெண்ணுக்கு சொத்தில் பங்குண்டு என்று 1989-ல் வந்துவிட்டது என சட்டம் சொல்கிறது. படம், அதன்பின் 5 வருடங்கள் கழித்தே வருகிறது. ஆனாலும் மாறவில்லை. இதோ... இப்போது மெய்யழகன் 2024-ல் வந்தது. இன்னமும் பெண்ணுக்கு சொத்தில் சம பங்கு கொடுத்ததை, ஏதோ அடாவடி செய்து.... பிடுங்கிக்கொண்டு சென்றுவிட்டாள் பெண் என்பதை போல கட்டமைக்கிறது சினிமா.

இது இல்லாமல் ‘நாட்டாமை’த்தனம் செய்வதன் பின்னுள்ள சாதி அரசியல் தனி விஷயம். இன்றைய சில சினிமாக்களை பார்த்துவிட்டு, ‘இப்போதான் இப்பிடி சாதிப்படம் எடுக்குறாங்க. இதனாலதான் சாதி வளருது’ என்கிறார்கள் சிலர். அப்போ, 30 வருஷத்துக்கு முன் வந்த நாட்டாமை மாதிரி தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் முன்னிறுத்திய படங்கள் எதைக்காட்டின?

நாட்டாமை
கை கூடாத ஆசை.. தென்மேற்குப் பருவக்காற்று ‘கலைச்செல்வி’.. சீனு ராமசாமியின் அற்புதமான பாத்திர படைப்பு!

2) படத்தின் அடுத்த சில நிமிடங்களில், ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு குடும்பம். எந்தளவுக்கு ஒதுக்கி வைப்பார்கள் என்றால், அந்த வீட்டில் யாசகம் பெறுபவர் கூட பெறமாட்டார்! இன்னும் கொடுமையாக ‘ஒதுக்கிவைக்கப்பட்ட’ வீட்டை சேர்ந்த மனோரமா படிக்கட்டில் உருண்டு... ஒரு வாய் தண்ணீருக்கு மூச்சை இழுத்துக்கொண்டிருக்க... குடிக்க தண்ணீர் கூட தராத கொடுமையெல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சோகம் என்னவென்றால், மனோரமா கதாபாத்திரத்துக்குக்கூட இது கோவத்தை தராது. ‘இன்னும் கொஞ்சம் ஒதுக்கிவைங்கப்பா’ என்பதுபோல காட்சிகள்... இதிலென்னங்க உங்களுக்கு பெருமை வேண்டி இருக்கு?

ஊரை விட்டு ஒருவரை ஒதுக்கி வைப்பதே தப்பு... ஆனால் அதை யாரும் கேட்டுவிடக்கூடாதென ஒரு அதி மோசமான ஃப்ளாஷ்பேக். அதன்படி, ஒதுக்கிவைக்கப்பட்டவர் குடும்பத்தின் தலைவர், பாலியல் குற்றவாளி. ‘ஓ பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் தர ஊரை விட்டு ஒதுக்கி வைச்சாங்களா?’ என்றால் இல்லை... அந்தப் பொண்ணையே அவருக்கு கல்யாணம் பண்ணிவச்சு ஒருநாள் துயரத்தை வாழ்நாள் துயரமா அந்தப் பொண்ணுக்கு மாத்திட்டாங்க. இதுக்குப் பேர் ஒரு தீர்ப்புன்னு... நீதிடா நியாமம்டா என டயலாக் வேற. தப்பே செய்யாம அந்தப் பொண்ணு ஏங்க தண்டனை அனுபவிக்கோணும்?

அடுத்த சீன்லயே ஒரு கொலை. கொலைக்கு ஒரு தண்டனை. அதுதான், குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பது. கூடவே, அந்த பெண் உட்பட அவருக்கு ‘கட்டாயத்தின்பேரில்’ திருமணம் செய்துவைக்கப்பட்ட அந்நபர் மற்றும் அவர் குடும்பம் என எல்லோரையும் ஊரை விட்டு ஒதுக்கிவைச்சு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் மேலும் தண்டனை கொடுக்கிறார்கள்.

ஒதுக்கிவைக்கப்பட்ட பின்னும் அந்தப் பெண்ணுக்கு வாழ்நாள் முழுக்க, ‘ஏன் உனக்கு நடந்த கொடுமையை வெளியே சொன்னாய்’ என்பதுபோல வீட்டு வன்கொடுமை வேற... ஆனா இதை தட்டிக்கேட்க யாருமில்ல. எங்கே அந்தப் பெண் மறுபடி கேட்டிருவோமோனுதான் ஊரை விட்டு குடும்பத்தையே ஒதுக்கிவச்சிருப்பாங்களோ..... யாருய்யா நீங்கள்லாம்?

3) அடுத்து மீனா - குஷ்பு கதாபாத்திரம். மீனா படித்தவர். தனக்கான தேவையை அறிந்த பெண். இதை ஹீரோயினாகவே காட்டியிருக்கலாம். ஆனா முடியாதே... அதெப்படி ஒரு பெண் தனக்கானதை தானே தேர்வு செய்யலாம்? ஆணின் ஈகோ தடுக்குமே... அதனால ஒரு ட்விஸ்ட். மீனா படித்தவர் என்பதால், திமிரானவர். அவ்வளவுதான் லாஜிக். ஏங்க... நீங்கள்லாம் என்னங்க படிச்சீங்க? மொத்த படத்தில், படித்த இரு பெண் கதாபாத்திரங்கள் உண்டு.

ஒன்று, மீனா. திமிரானவர், அடங்காதவர், அசராதவர்! இன்னொருவர் அந்த டீச்சர் கதாபாத்திரம். அதைப்பற்றி தனியே சொல்லத் தேவையில்லை. படித்த பெண்கள் அன்றைய தேதியில் சமூகத்தில் எவ்வளவு மோசமாக சினிமாவில் சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு இவ்விரு கதாபாத்திரங்களே சாட்சி. அப்படி என்னங்க வன்மம் படிச்ச பெண்கள் மேல என்றே கேட்கத் தோன்றுகிறது.

நாட்டாமை
”என்னங்க சார் உங்க சட்டம்?”-`விருமன்’.. முத்தையா சாருக்கு சுயமரியாதையோட ஒரு சின்ன லெட்டர்!

அதிலும் குஷ்பு ஒரு இடத்தில் மீனாவிடம் ‘பாதம் பார்த்து போன பொண்ணுங்கதான் பாதை மாறாம போயிருக்காங்க; ஆனா உன்ன மாதிரி வானை பார்த்து நடந்தவங்க வழிதெரியாம போயிட்டாங்க’ என்கிறார்! இன்னும் ‘விளக்கேத்துவதுன்னா என்ன...’ ‘பொம்பளையா நடந்துக்கோங்க’ என பல வசனங்கள்... அதலாம் எழுத ஒரு கட்டுரை பத்தாதுப்பா, ஒரு கட்டுரை பத்தாது. என்ன சோகம்னா.. இதலாம் அப்போ பேசுன குஷ்புவே இதையெல்லாம் பார்த்தா சிரிப்பாங்க!

4) இவை அனைத்தையும்விட, முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. அது ‘நாட்டாமை’த்தனம். எதை வைத்து இவர்கள் நாட்டாமைகளாகிறார்கள்? சாதி, நில உரிமை. இரண்டு மட்டுமே காரணிகள். இவையே ஒரு குடும்பத்தை மட்டுமே சேர்ந்த ‘ஆண்களை’ வழிவழியாக நாட்டாமைகளாக்குகின்றன. இப்படி தேர்வாகும் இந்த நாட்டாமைகள், எப்படியான தீர்ப்பை வழங்குவார்கள் என்பது அடுத்த கேள்வி.

தங்கள் நிலத்துக்கும், தங்கள் சாதிக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு தீர்ப்பையே இவர்கள் வழங்குவர். இந்த படத்திலேயே இதற்கு ஒரு காட்சியும் உண்டு. பாலியல் குற்றவாளிக்கான வழக்கை விசாரிக்கையில், மனோரமா கதாபாத்திரத்திடம் விஜயகுமார் கதாபாத்திரம் ஒரு வசனம் சொல்லும். தீர்ப்பை தன் மகனுக்கு (குற்றவாளிக்கு) சாதகமாக கேட்பார் மனோரமா. அதற்கு விஜயகுமார், தன் மகனிடம் “உன் அம்மோவோட நகை 500 பவுன் சும்மா இருக்குல்ல... அதையும் மனோரமா வீட்டுக்குப்பின் உள்ள 300 ஏக்கர் நிலத்தையும் அவருக்கே கொடுத்துவிடு... வச்சுக்கட்டும்” என்று பெருந்தன்மை (ஓஹோ) பொங்க சொல்லிவிட்டு, தீர்ப்பில் தலையிடாதே என்பார். என்ன வேணா தர்றேன்.. தீர்ப்பில் நியாயம்தான் என்பதே இதன் சாராம்சம்.

அப்படி தரப்பட்ட தீர்ப்பில் உள்ள சிக்கலைதான் மேலே பார்த்தோம். இதில், இந்த நிலமும் நகையும் எப்படி இவர்களுக்கு வந்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஒரு ஊரில், 300 ஏக்கர் நிலம்... ஒருவரையே சார்ந்து இருப்பதென்பதன் அரசியலை நாம் உணர வேண்டும். ஜனநாயக நாட்டில்... அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பல தசாப்தங்களுக்குப் பிறகும், ஏழைகள் நிலங்கள் பிடுங்கப்பட்டதை எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

இவ்வளவு மோசமான நில அபகரிப்பை நேர்த்தியான கதையமைப்பில் காட்சிப்படுத்தி... அதில் கைத்தட்டல் வாங்குவது எவ்வளவு ஆபத்து?! அதைத்தான் நாட்டாமை செய்தது. இது எஜமான், சின்னகவுண்ட்டர், தேவர் மகன் என அந்த காலகட்டத்தில் பல படங்களில் நீண்டதும் கவனிக்கத்தக்கது. இப்படியான நில உரிமையாளர்களும் சாதி ஆதிக்கவாதிகளும் இன்றைய சினிமாவிலும் இருக்கிறார்கள். இவர்கள் ஊர் நாட்டாமைகளாக இருக்கிறார்கள் என்பதை, நாட்டாமை காட்சிக்கு சற்றும் சளைக்காமல் காட்டியது கடந்த வருடங்களில் வந்த ரஜினி முருகன், கொம்பன், விருமன் போன்றவை! இந்த ஆபத்தை எப்படி தடுப்பது?

நாட்டாமை
சாதி எங்கே இருக்கு? | பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் யார்? அரசு சொல்லும் புள்ளிவிபரம்

சரி... இப்போ ஏன் இதலாம் பேசுறோம்னு உங்களுக்கு தோணலாம். ரெண்டு விஷயம். படம் வெளிவந்து இன்றோடு 30 வருடங்கள் ஆகின்றன. இந்த நேரத்திலும், இந்தப் படத்தை சிலர் கொண்டாடுகின்றனர். ஒரு படம், படித்த பெண்களை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் - பெண் குழந்தைகளை - தொழிலாளர்களை... சாதி ரீதியாக - பாலின ரீதியாக எந்தளவுக்கு மோசமான சிந்தனைகளை, மோசமான அரசியலை சொல்லும் என்பதற்கு நாட்டாமை ஒரு சான்று. அதுவும் ஒரு பானை சோற்றில் ஒரு சோறு.

இதுபோன்ற படங்கள் இன்று நேரடியாக நம்மிடையே வராவிட்டாலும்கூட, இன்றும்கூட இதன் சான்றுகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு பிடிக்கவில்லை என சொல்லும் பெண்ணிடம் ஃபாலோ செய்து செய்து செய்து செய்து... அவளை தொந்தரவு செய்வதை ‘காதலென’ சொல்லும் ஹீரோ, படித்த பெண்ணை திமிர் பிடித்தவள் எனக்கூறி அவளை ‘பெண்’ணாக மாற்றும் நல்லுள்ள ஹீரோ, பெண்ணுக்கு சொத்தில் ‘பங்கு’ கொடுத்துவிட்டு சொத்தையே பிடுங்கி விட்டாளென்பதுபோல அழுவது, நாட்டாமை வைத்து தீர்ப்பு வாங்குவது, குலுக்கல் முறையில் ஊர்த்தலைவரை ஒருவரே தீர்வு செய்வது... இதெல்லாம் நாட்டாமையின் நவீன வடிவங்கள்தான்.

இன்றைய இயக்குநர்கள், பிற்போக்கை கொஞ்சம் பாலிஷாக செய்கிறார்கள். நாட்டாமை வந்த இந்த 30 வருடங்கள் கழித்தும், இந்த பிற்போக்குத்தனங்கள் ஒழிக்கப்படாமல் கொண்டாடப்படுவது வேதனைதான். அதை மாற்றிக்கொள்ளுங்கள் என்பதே இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்களுக்கு நம் கோரிக்கை.

‘அன்றைய விட இன்று நாட்டாமை போன்ற படங்கள் குறைந்துள்ளது... அதை நினைத்துப்பாருங்கள்’ என்பது தவறு. முற்றிலும் நோயை ஒழித்து, வரும் முன் ஒரு நோயை தடுப்பதே எந்தவொரு நோய்க்கும் தீர்வு. அப்படி ஒழிக்கும் ஒரு பிற்போக்கு எனும் நோய்க்கான ஒரு கட்டுரையே, இது! (கூடவே... 30 வருஷத்துக்கு முன் வந்தாலும் தப்பு தப்புதானே. அந்த தப்பை சுட்டிக்காட்ட, இதை விட நல்ல நாள் இருக்கா என்ன? உண்மையான நீதிடா, நேர்மைடா...)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com