மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 33 | சூது கவ்வும் | ‘ஞானோதயம்’ பெறும் அமைச்சராக எம்.எஸ்.பாஸ்கர்

33-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘சூது கவ்வும்’ திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ஏற்று நடித்திருந்த ஞானோதயம் கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்
சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்புதிய தலைமுறை
Published on

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

தமிழ் சினிமாவில் வெளிவந்த முன்னோடி ‘பிளாக் காமெடி’ படங்களுள் ஒன்று ‘சூது கவ்வும்’. உபத்திரவமல்லாத முறையில் செயல்படும் உதிரிக் குற்றவாளிகளின் கதையை சிரிக்கச் சிரிக்க நையாண்டியான முறையில் சொல்லியிருந்தார் இயக்குநர் நலன் குமாரசாமி.

‘தீமை எத்தனைதான் ஓங்கினாலும் இறுதியில் நன்மைதான் வெல்லும்’ என்பதுதான் ஏறத்தாழ அனைத்துப் படைப்புகளிலும் இறுதியில் சொல்லப்பட்ட நீதியாக அதுவரை இருந்தது. ‘தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும். ஆனால் மீண்டும் தர்மமே வெல்லும்’ என்கிற வாக்கியம், சலித்துப் போகும் அளவிற்கு அரசியல் மேடைகளில் மீண்டும் மீண்டும் முழங்கப்பட்ட தேய்வழக்கு. இதற்கு எதிர்முரணாக ‘சூது கவ்வும்’ என்று படத்தின் தலைப்பு அமைந்திருந்ததிலேயே ஓர் ஆதாரமான கிண்டல் இருந்தது.

சூது கவ்வும் படம்
சூது கவ்வும் படம்

தீமைதான் வெல்லும்

இந்தப் படத்தில் ஓர் அரசியல்வாதி வருவார். மோசமான அரசியல்வாதிகளையே சித்தரித்திருந்த தமிழ் சினிமாவில் விதிவிலக்காக மிக நேர்மையான அரசியல்வாதியாக அவர் இருப்பார். அவர் சார்ந்திருக்கும் கட்சியில் தலைவர் உள்ளிட்டு ஏறத்தாழ அனைவருமே ஊழல் பேர்வழிகளாக இருக்கும் போது இவர் மட்டுமே மிக நாணயத்துடன் நடந்து கொள்வார்.

இதனாலேயே மற்றவர்கள் இவரை மலினமாகப் பார்ப்பார்கள். சொந்த வீட்டிலேயே மரியாதை இருக்காது. ஊதாரி மகனும், மகனை பாசத்துடன் ஆதரிக்கும் அம்மாவும் இந்த நேர்மையாளருக்கு தொடர் இம்சையாக இருப்பார்கள்.

கடைசியில் என்னவாகும்? நேர்மை, நேர்மை என்று கதறிக் கொண்டிருந்தவரின் பதவி பறிக்கப்பட்டு, பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல ஒடுங்கி வாழ வேண்டி வரும். அது மட்டுமல்ல, ஊதாரி மகன், இவருடைய இடத்தில் வந்து அமர்வதுதான் காலக்கொடுமையாக இருக்கும்.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்
சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்

எனில் இந்தத் திரைப்படம் எம்மாதிரியான நீதியை வலியுறுத்துகிறது? நேர்மையானவர்கள் தோற்கத்தான் வேண்டும், ஊழல்வாதிகளுக்குத்தான் இறுதியில் வெற்றி கிடைக்கும் என்பதையா? இல்லை. சமகால அரசியல் நிலவரத்தைத்தான் இந்தத் திரைப்படம் நையாண்டியான முறையில் காட்டி நம் மனச்சாட்சியை சலனப்படுத்த முயல்கிறது.

இப்போது களத்தில் இருக்கும் பெரும்பான்மையான அரசியல்வாதிகளைப் பாருங்கள்! துளி கறை கூட அல்லாத நேர்மையாளர் என்று ஒருவரைக் கூட சுட்டிக் காட்ட முடியாது. ஏனெனில் அவ்வாறானவர்களுக்கு அதிகார அரசியலில் இடம் கிடையாது. அரிதாக அப்படி முன்வருபவர்களையும் மக்கள் டெபாசிட் இழக்கச் செய்து தோற்கடிப்பார்கள். இதைத்தான் படமும் மறைமுகமான முறையில் நையாண்டியாக நமக்கு குத்திக் காண்பிக்கிறது.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்
புது லுக்கில் விஜய்.. ரிலீஸ் தேதியை சொன்ன GOAT படக்குழு! போஸ்ட்டரில் இதெல்லாம் கவனிச்சீங்களா?

காமெடி நடிகர் சீரியஸாக அசத்திய பாத்திரம்

‘சூது கவ்வும்’ திரைப்படத்தில் நேர்மையான அரசியல்வாதியாக நடித்திருப்பவர் எம்.எஸ்.பாஸ்கர். அடிப்படையில் இவர் ஒரு நகைச்சுவை நடிகர். குணச்சித்திர பாத்திரங்களிலும் ஜொலிப்பார். ஆனால் ஒரு காட்சியில் கூட இவரை புன்னகைக்க விடாமல் சிடுசிடுவென்ற குணாதிசயத்துடன் நடிக்க வைத்த புதுமைக்காகவே இயக்குநரைப் பாராட்ட வேண்டும். இதுவொரு சவாலான பாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு திறம்பட நடித்திருந்தார் பாஸ்கர்.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்
சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்

இந்தப் படத்தில் கதாபாத்திரங்களுக்கு சூட்டப்பட்ட பெயர்களே நையாண்டியாக இருந்தன. துரோகம் செய்யப் போகும் ஒரு பாத்திரத்தின் பெயர் ‘நம்பிக்கை கண்ணன்’. என்கவுண்டர் செய்து கொல்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் ஒரு சைக்கோ இன்ஸ்பெக்டரின் பெயர் ‘பிரம்மா’. ஊதாரி மகனாக சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞனின் பெயர் ‘அருமை பிரகாசம்’. இந்த வரிசையில் நேர்மையான அமைச்சரின் பெயர் ‘ஞானோதயம்’. கடைசியில்தான் இவருக்கு ஞானோதயம் பிறக்கிறது என்கிற கிண்டலுக்காக இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 29 | “அப்ப என் காதல் ஃபெயிலியரா?” - அவ்வை சண்முகி மணிவண்ணன்!

லஞ்சம் வாங்காத அமைச்சர்!

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அமைச்சர் ஞானோதயம் நுழைவதோடு இந்தப் பாத்திரத்தின் என்ட்ரி அமைகிறது. காண்டிராக்ட் வாய்ப்பை தனக்கு வழங்குமாறு லஞ்சப்பணத்தோடு வந்திருக்கும் ஒரு தொழிலதிபரை இன்முகத்துடன் வரவேற்கும் அமைச்சர் “நான் உங்களுக்கு என்ன செய்யணும்?” என்று கேட்கிறார். வந்த விஷயத்தை தொழிலதிபர் சொன்னதும் மறுவார்த்தை பேசாமல் கையை நீட்டுகிறார். வந்தவர் தயக்கத்துடன் சூட்கேஸை தந்ததும் அதைப் பிரித்து உள்ளேயிருக்கும் கரன்ஸி நோட்டுக்களைத் தடவி விட்டு எதிரே சபாரி ஆடை அணிந்திருக்கும் ஆசாமியை தொழிலதிபருக்கு அறிமுகப்படுத்துகிறார்.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்
சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்

“இவர் பேரு கர்ணன். (இயக்குநரின் குசும்பைக் கவனித்தீர்களா?!) லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி” என்று அமைச்சர் சொன்னதும் தொழிலதிபரின் முகம் வெளிறிப் போகிறது. “எனக்கு லஞ்சம் கொடுக்க வந்த குற்றத்திற்காக இப்போது இவர் உங்களை கைது செய்வார்” என்று எந்த வித முகச்சலனமும் இன்றி அமைச்சர் இயல்பான சொல்வது சுவாரசியமான காட்சி. ‘இந்தியாவின் நேர்மையான கடைசி அரசியல்வாதி’ என்கிற அடைமொழியுடன் இவரைப் பற்றிய செய்தி தொலைக்காட்சியில் வெளியாகும்.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்
சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்

“எலெக்ஷன் வருது. இதெல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்ட்ன்னு சொல்றாங்களே.” என்று நிருபர் மடக்குவது போல் கேட்க “அதெல்லாம் பப்ளிசிட்டி இல்லாதவங்களுக்கு தம்பி” என்று புன்சிரிப்புடன் சொல்லுவார் ஞானோதயம்.

ஊதாரி மகன் செய்யும் கடத்தல் நாடகம்

அடுத்த காட்சியில் ‘தொழில் பண்ணலாம்ன்னு இருக்கேன். காசு கொடுங்க” என்று ஊதாரி மகன் கேட்க, “முதல்ல ஏதாச்சும் வேலை செஞ்சு சம்பாதிக்கற வழியைப் பாரு. அப்புறம் பிஸ்னஸ் பண்ணலாம்” என்று முறைப்பான மொழியில் அமைச்சர் பதிலளிக்க “டிகிரி முடிக்காம யாரு வேலை தருவாங்க?” என்று இடக்காக கேட்கிறான் மகன்.

அவனை அடிப்பதற்காக கை ஓங்குவதற்குள் பி.ஏ. வந்து விட, “ஏழு வருஷம் அரியர்ஸ் வெச்சும் பாஸாக துப்பில்ல. பிஸ்னஸ் பண்றாராம்” என்று எரிச்சலுடன் முனகிக் கொண்டே அமைச்சர் செல்லும் காட்சியில் ஒரு பொறுப்பில்லாத மகனைப் பெற்றுத் தொலைத்து விட்ட துயரத்தை அநாயசமாக நடித்துக் காண்பித்து விடுவார் பாஸ்கர்.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 17 | நினைவுகள் உறைந்து போன ஒரு தகப்பனாக எம்.எஸ்.பாஸ்கர்...!
சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர் - கருணாகரன்
சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர் - கருணாகரன்

அடுத்த காட்சியில் அமைச்சருக்கு ஒரு போன் வரும். “பதட்டப்படாதீங்க. உங்க பையனை நாங்க கடத்தி வெச்சிருக்கோம். எங்களுக்கு அதிகமால்லாம் ஒண்ணும் வேணாம்” என்று பதட்டத்துடன் ஒரு அமெச்சூர் கடத்தல்காரன் பேசுவதைக் கேட்கும் அமைச்சர், ஒரு வார்த்தையும் பேசாமல் அழைப்பைத் துண்டித்து விடுவார்.

“எங்கப்பனை பத்தி எனக்குத் தெரியும். டிவியைப் பாருங்க” என்று கடத்தப்பட்டிருக்கும் ஊதாரி மகன் சொல்ல “தேர்தல் நேரத்தைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் என் மகனைக் கடத்தியிருக்கிறார்கள். நான் காவல்துறையின் மூலம் நேர்மையான வழியில் என் மகனை மீட்டாலும் மீட்பேனே தவிர, அவர்களுக்கு வளைந்து கொடுக்க மாட்டேன்” என்று பந்தாவாக பிரஸ் மீட் வைத்துக் கொண்டிருப்பார் அமைச்சர்.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்
சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்

தன் அப்பாவிற்கு எப்படி செக்மேட் வைக்க வேண்டுமென்று ஊதாரி மகனுக்குத் தெரியும். தன்னுடைய தாயின் மூலம் தான் உயிராபத்தில் இருப்பதாக நாடகமாடுவான். “தலைவர் வீட்ல போய் கத்திடாதீங்கம்மா. அப்பாவுக்கு அசிங்கமா போயிடும்” என்று மறைமுகமாக தூண்டி விடுவான். அப்பாவி அம்மாவும் அதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு முதலமைச்சரின் வீட்டிற்கு முன்னால் “என் மகனைக் காப்பாத்துங்கய்யா” என்று ஒப்பாரி வைக்க, தொலைக்காட்சி காமிராக்கள் குவிந்து விடும். தேர்தல் நேரம் என்பதால் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும்.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்
“இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” - விளக்கமளித்த விஜய் ஆண்டனி! நடந்தது என்ன?

நேர்மைக்கு மரியாதை இல்லாத களநிலவரம்

எனவே முதலமைச்சரிடமிருந்து ஞானோதயத்திற்கு அழைப்பு வரும். சி.எம்.அலுவலகத்தில் நுழையும் அமைச்சருக்கு வணக்கம் போடும் ஒரு சக அரசியல்வாதி “என்னண்ணே.. உங்க சம்சாரம் டிவில கலக்கிடுச்சு” என்று நையாண்டியாக கேட்க “வாயை மூடிட்டு பேப்பரை படி” என்று அவரிடம் எரிந்து விழும் அமைச்சர், முதலமைச்சரின் அறைக்குள் சென்றவுடன் ஆளே மாறி பம்மி கைகூப்புவார்.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர் - ராதா ரவி
சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர் - ராதா ரவி

“மன்னிச்சுக்குங்க தலைவரே… சம்சாரம் தெரியாம..” என்று அமைச்சர் பணிவுடன் ஆரம்பிக்க “உன் சம்சாரம் என்னய்யா தப்பு பண்ணா.. ஒத்த பைசாக்கு பிரயோசனம் இல்லாத அமைச்சர். இருந்தாலும் எதுக்கு விட்டு வெச்சிருக்கோம். சரி கட்சிக்கு ஒருத்தனாவது வௌங்கட்டுமேன்னு விட்டா.. இன்னிக்கு அதுவும் போச்சு” என்று முதலமைச்சர் பாய்வதில் சமகால அரசியல் நிலவரம் தெளிவாக விளங்கி விடும்.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 25 | காமெடியும் செண்டிமண்ட்டுமாய்... ‘அய்யாக்கண்ணு’ வடிவேலு!

“இன்னிக்கு எலெக்ஷன் வெச்சா.. உன் பொண்டாட்டி உனக்கு டெபாசிட்டே இல்லாம பண்ணிடுவா தெரியுமா.. எதிர்க்கட்சிக்கு போயிட மாட்டால்ல?” என்று சி.எம். கேட்க பதறிப் போய் “அப்படில்லாம் விட்டுட மாட்டேன் தலைவரே” என்று பம்முவார் அமைச்சர். “சரி கட்சி நிதில இருந்து ரெண்டு கோடி பணம் தரேன். உன் பையனை மீட்டுக்க” என்று முதலமைச்சர் சொல்ல, முகம் மாறும் நேர்மையான அமைச்சர் மிகுந்த தயக்கத்துடன் “அய்யா.. நாம போலீஸ் கிட்ட சொல்லி” என்று இழுக்க “யோவ்.. கிறுக்கா.. பையனைக் கடத்தி வெச்சிருக்காங்க.. இதுல என்னய்யா நேர்மைக் குசும்பு உனக்கு?” என்று சி.எம். வெடிக்கும் காட்சி ரகளையானது.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர் - ராதா ரவி
சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர் - ராதா ரவி

அடுத்த காட்சியில் கடத்தல்காரன் போன் செய்ய “தெரியுது. சொல்லு’ என்று முறைப்பாக கேட்பார் அமைச்சர். “நாளைக்கு சண்டே நாங்க வேலை செய்ய மாட்டோம்” என்று கடத்தல்காரன் சொல்வது அதிரடியான நகைச்சுவை. “பணத்தை பையனோட அம்மாதான் கொண்டு வரணும். எங்க, எப்படின்னு நாங்க சொல்வோம்” என்று அவன் சொல்ல “இதோ பார்.. நான் யாருன்னு தெரியாம விளையாடிட்டு இருக்க” என்று அமைச்சர் ஆத்திரத்துடன் சொல்ல ‘டொக்’ என்று அழைப்பு துண்டிக்கப்படும். அமைச்சர் முன்பு செய்ததற்கு பதிலடி இது.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்
Manjummel Boys: தமிழகத்தில் உச்சம்தொட்ட வசூல் வேட்டை – உலக அளவிலும் மலையாள சினிமாவாக புதிய சாதனை!

சைக்கோ இன்ஸ்பெக்டர் என்ட்ரி

முதலமைச்சரின் உத்தரவையும் மீறி, காவல்துறை அதிகாரியாக இருக்கும் தனது உறவினரை அழைத்து கடத்தல்காரனை எப்படியாவது பிடிக்கச் சொல்வார் அமைச்சர். தனது நேர்மைக்கு விடப்பட்ட சவாலாக இதை எடுத்துக் கொள்வார். ஆனால் அவருக்கு எதிராகவே சம்பவங்கள் நடக்கும். “அரசியல்ல நேர்மையா இருக்கணும்னா பொண்டாட்டி புள்ளைங்கள்லாம் இருக்கக்கூடாது போல” என்று ஞானோதயம் எரிச்சலுடன் முனகுவது சுவாரசியமான காட்சி.

சூது கவ்வும் படம்
சூது கவ்வும் படம்

காவல்துறையின் கண்காணிப்பையும் மீறி கடத்தல்காரர்கள் எப்படியோ பணத்தை எடுத்து விடுவார்கள். மகனும் வீட்டுக்கு வந்து விடுவான். “எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் மகனை மீட்பேன் என்று சொன்னாரே?” என்று ஊடகங்கள் சந்தேகமாக கேள்வி எழுப்ப அவமானத்தால் குன்றி விடுவார் அமைச்சர். கடத்தல்காரர்களை எப்படியாவது பிடிக்க வேண்டுமென்கிற வெறியே அவருக்குள் கிளம்பி விடும்.

சூது கவ்வும் படம்- எம்.எஸ்.பாஸ்கர்
சூது கவ்வும் படம்- எம்.எஸ்.பாஸ்கர்

எனவே ‘பிரம்மா’ என்கிற சைக்கோ இன்ஸ்பெக்டரிடம் இந்த வழக்கை ஒப்படைப்பார். ஒரு நேர்மையான அமைச்சர் இப்படிச் செய்வாரா என்பது சற்று லாஜிக் பிசிறுதான். வரவழைக்கப்படும் பிரம்மாவிடம் உயர் அதிகாரி வளவளவென்று குறிப்புகள் தர, அவரைத் தடுக்கும் அமைச்சர் “இன்னமும் 48 மணி நேரத்துல அவங்களைப் பிடிக்கணும்” என்று கறாராக சொல்வார்.

நேர்மைக்கு வீட்டிலும் மரியாதையில்லை

இதற்குப் பிறகு நிகழும் சில கலாட்டாக்களுக்குப் பிறகு ஒரு விஷயம் தெரியவரும். பிஸினஸ் செய்வதற்காக பணம் தராத அப்பாவிடம், கடத்தல் நாடகம் ஆடி பையன் இரண்டு கோடியை சம்பாதித்திருக்கிறான் என்பது. வீட்டிற்குள் இருக்கும் பணப்பையைக் காட்டி “என்னடா இது?” என்று மகனைப் போட்டு நையப் புடைப்பார் அமைச்சர். தடுக்க வரும் மனைவியையும் அடிக்க முயல்வார். அப்போது அந்த அம்மணி சொல்லும் வசனம்தான் டாப். “யோவ் நிறுத்துய்யா. உனக்குத்தான் சம்பாதிக்கத் துப்பில்ல. அவனைப் போய் அடிக்கறியே?” என்று ஆவேசமாக கேட்கும் போது ஊழல் பணமாக இருந்தாலும் கூட சம்பாதித்தால்தான் ஒருவனுக்கு வீட்டில் மரியாதை என்னும் நிதர்சனம் புரியும்.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர் - கருணாகரன்
சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர் - கருணாகரன்

பையன் ஏமாற்றிச் சம்பாதித்த கட்சி நிதியான இரண்டு கோடியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று சி.எம். அலுவலகத்திற்கு செல்வார் அமைச்சர். அத்துமீறி முதலமைச்சரின் அறைக்குள் நுழைந்து பதட்டத்துடன் நடந்ததை விளக்கி “நான் நேர்மையானவன்றதுக்கு இதுவே ஒரு உதாரணம் தலைவரே” என்றபடி பையைப் பிரித்துப் பார்க்க உள்ளே பணத்திற்குப் பதிலாக செய்தித் தாள்கள் இருக்கும். கிடைத்த இடைவெளியில் பையன் செய்த மோசடி அது. இடிந்து போய் உட்காரும் அமைச்சர் “ஊர்ல அவனவன் நாலைஞ்சு பையனை பெத்துட்டு நிம்மதியா இருக்கான். நான் ஒரு பையனைப் பெத்துட்டு” என்று கலக்கத்துடன் சொல்லும் காட்சியில் பாஸ்கரின் நடிப்பு அருமையாக இருக்கும்.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 23 | உடலசைவிலேயே அசாத்திய நடிப்பை கொடுத்த ‘முதல்வன்’ பட ரகுவரன்

அமைச்சராகும் ஊதாரி மகன்

இதற்குப் பிறகு நடப்பதுதான் அவல நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

பையன் செய்த மோசடியின் திறமையை அறியும் முதலமைச்சர், வருகின்ற தேர்தலில் அப்பனுக்குப் பதிலாக மகனுக்கு சீட் தருவார். “தலைவரே.. வேணாம் தலைவரே. அரசியல் ரொம்ப புனிதமானது. இவனையெல்லாம் அரசியல்வாதியா ஆக்காதீங்க” என்று தந்தை கதறினாலும் சி.எம். காதில் அது விழாது. வழக்கமான முறையில் தடாலடி வேலைகளைச் செய்யும் மகன், தேர்தலில் ஜெயித்து அமைச்சராகி விடுவான்.

சூது கவ்வும் படம்
சூது கவ்வும் படம்

அவன் பதவியேற்கும் காட்சியை தொலைக்காட்சியில் அம்மா பரவசமான மகிழ்ச்சியுடன் பார்க்க, நொந்து போய் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருப்பார் அப்பா.

இந்தப் படத்தில் காட்டப்படும் சித்தரிப்புகளின் படி நேர்மையான அரசியல்வாதிதான் நமக்கு கோமாளியாகத் தெரிவார். திரைக்கதையின் பலம் அப்படி.

சூது கவ்வும் படம்
சூது கவ்வும் படம்

ஊதாரி மகனின் மூலம் தன்னுடைய நேர்மையான பிம்பம் அடியோடு சிதைந்து வீழும் பதட்டத்தையும் ஆத்திரத்தையும் படம் பூராவும் வெளிப்படுத்தியிருப்பதின் மூலம் ‘ஞானோதயம்’ என்கிற அந்தப் பாத்திரத்தை மறக்க முடியாதபடியாக ஆக்கியிருப்பார் எம்.எஸ்.பாஸ்கர்.

சூது கவ்வும் படம் - எம்.எஸ்.பாஸ்கர்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 16 | சிரிப்பும் சீரியஸூமாக ‘சாமிபிள்ளை’ சுருளிராஜன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com