மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | ஈகோ, பொறாமை, வெட்டி வீராப்பு, அலப்பறைகளுடன் ‘J பேபி’ மாறன்!

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் தொடரில் ‘J பேபி’ திரைப்படத்தில் ‘லொள்ளு சபா’ மாறன் ஏற்று நடித்திருந்த ‘செந்தில்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
J Baby - நடிகர் மாறன்
J Baby - நடிகர் மாறன்PT Web
Published on

‘லொள்ளு சபா’ மாறனை பலரும் நகைச்சுவை நடிகராகவே அறிந்திருப்பார்கள். ஆனால் அவருக்குள் ஒரு நல்ல குணச்சித்திர நடிகர் இருக்கிறார் என்பதை அழுத்தமாக அடையாளப்படுத்திய படம்  J பேபி. அகங்காரம், தாழ்வு மனப்பான்மை, முன்கோபம் போன்ற காரணங்களால் இளைய சகோதரனிடம் பகைமை பாராட்டும் அண்ணன் பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார் மாறன். 

மாறனின் இயற்பெயர் இளஞ்சேரன். தந்தை திமுகவில் அரசியல் பேச்சாளர். ஆனால் மகனுக்கோ கம்யூனிஸ்ட் கட்சியில் ஈடுபாடு. ஓவியம் வரைவதில் ஆர்வமும் திறமையும் கொண்ட மாறன், கட்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மகன் வேறு கட்சியில் இயங்குவது குறித்து தந்தைக்கு வருத்தம். ஆனால் மாறனுக்கு அரசியலில் பெரிய ஈடுபாடில்லை. ஆனால் அந்தப் பயணம் அவரை ஒரு சிறந்த படிப்பாளியாக மாற்றிற்று. இடதுசாரி சிந்தனைகள் அடங்கிய புத்தகங்களையும் ஆளுமைகளையும் தேடி அறிந்தார். 

ஆர்ட் டைரக்டராக டெலிவிஷன் துறையில் நுழைந்தவர், மெல்ல நடிப்புத் திறமையையும் காண்பித்தார். மாறனுக்குள் இருந்த இயல்பான நகைச்சுவை மற்றும் எழுத்துத் திறமை காரணமாக காமெடி பஜார், லொள்ளு சபா போன்ற காமெடி ஷோக்களில் அடையாளம் கிடைத்தது. நண்பர் சந்தானத்தின் படங்களில் உள்ளிட்டு பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். 

J Baby - நடிகர் மாறன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்: ‘டௌரி கல்யாணம்’ டெல்லி கணேஷ் | சின்ன ரோலிலும் அத்தனை உருக்கம்!

மூத்த சகோதரனின் குணவார்ப்புகள்

 J பேபி திரைப்படத்தில் மாறன் ஏற்றிருப்பது ஒரு மூத்த அண்ணனின் பாத்திரம். இந்த மூத்த அண்ணன்கள் என்பவர்களே ஒரு தனியான ஜானர். குடும்பப் பொறுப்பை ஆரம்பத்தில் ஏற்பவர்கள் என்பதால் அதற்குரிய மரியாதையை எதிர்பார்ப்பார்கள். அதில் சிறு குறை வந்தாலும் கோபித்துக் கொள்வார்கள். இளைய பிள்ளைகளிடம் அம்மா பாசம் காட்டினால் அதற்காக பொறமைப்படுவார்கள். தம்பிகள் தன் சொல் பேச்சு மீறாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

இப்படியொரு குணச்சித்திர வார்ப்பில் கச்சிதமாகப் பொருந்தியிருந்தார் மாறன். J பேபி திரைப்படத்தில் இவருடைய கேரக்டரின் பெயர் ‘செந்தில்’. திடீரென்று ஒரு நாள் காவல் நிலையத்தில் இருந்து போன் வருகிறது. சைக்கிளில் சென்று இறங்குகிறான் செந்தில். அங்கு தன் தம்பியான சங்கர், மினி வேனில் வருவதைப் பார்த்து முகத்தைச் சுளித்தபடி உள்ளே செல்கிறான். அண்ணனுக்கும் தம்பிக்கும் ஏதேவொரு காரணத்தால் ஆகாது என்பது ஆரம்பத்திலேயே நமக்கு உணர்த்தப்பட்டு விடுகிறது. 

J Baby - நடிகர் மாறன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்|மாநில அரசு விருது; ’பெரியவருக்கு’ பெருமை சேர்த்தார் ராஜ்கிரண்!

“உங்க அம்மா எங்க இருக்காங்கன்னு தெரியுமா?” என்று இன்ஸ்பெக்டர் விசாரிக்க இருவருமே திருதிருவென விழிக்கிறார்கள். இருவரும் பல ஆண்டுகளாக பேசிக் கொள்வதில்லை என்பதும் நமக்குத் தெரியவருகிறது. இருவரையும் கடிந்து கொள்ளும் காவல் அதிகாரி “உங்க அம்மா கல்கத்தாவில் இருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் போய் கூட்டிட்டு வாங்க” என்று கண்டிப்பாக உத்தரவிடுகிறார்.  எதிரும் புதிருமாக இருக்கும் இந்தச் சகோதரர்கள் தங்களின் அம்மாவைக் கண்டுபிடித்து அழைத்து வரும் பயணம்தான் இந்தத் திரைப்படம். 

அண்ணன் செந்தில் சற்று விவரமில்லாதவர். குடிப்பழக்கமும் உள்ளவர். தம்பி சங்கரிடம் முறைப்பாக உள்ளவர். எனவே “இவன் கூடல்லாம் சேர்ந்து போக முடியாது. நான் வேணா தனியா போய்ட்டு வந்துடறேன்” என்று செந்தில் அடம் பிடிக்க, “அப்புறம்… உன்னைத் தேடிட்டு நாலு போ் வரணுமா.. ஒழுங்கு மரியாதையா.. ரெண்டு பேரும் போய் அம்மாவைக் கூட்டிட்டு வாங்க..” என்று உறவினர்கள் சொல்ல வேண்டாவெறுப்பாக தம்பியுடன் கிளம்புகிறான் செந்தில். 

பெரியண்ணனின் ஈகோவை சரியாக வெளிப்படுத்தியிருக்கும் மாறன்

உறவினர்கள் அனைவரும் காசு போட்டு அந்தப் பணத்தை தம்பியிடம் தருகிறார்கள். “ஏன்.. என் கிட்ட கொடுத்தா என்ன.. நான் குடிச்சிடுவேன். அதானே?” என்று செந்தில் விறைப்பாகக் கேட்க “சரிப்பா.. இந்தா நீயே வெச்சி செலவு பண்ணு” என்று தர “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. அவன்கிட்டயே கொடுங்க” என்று முறைப்பாக சொல்கிறான் செந்தில். 

பைக்கில் அமர்ந்து ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். தம்பியின் பின்னால் எப்படி அமர்வது? செந்திலுக்கு கௌரவப் பிரச்சினை. எனவே சங்கர் முன்னால் அமர்ந்து பைக் ஓட்ட, இன்னொரு தம்பியின் பின்னால் அமர்ந்து கொள்கிறான் செந்தில். இந்தச் சமயத்திலும் குடித்து விட்டு வந்திருக்கும் செந்திலிடம் “ஏம்ப்பா.. இப்பயாவது குடிக்காம இருப்பா..” என்று இன்னொரு சகோதரன் உபதேசம் செய்ய “பார்த்துக்கலாம்.. போ” என்று மெல்லிய இருமலுடன் சொல்கிறான் செந்தில்.

“ஏம்ப்பா.. வாப்பா.. டிரையின் கிளம்பிடப் போகுது” என்று தம்பி சொல்ல “எல்லாம் தெரியும் போ..” என்று அலட்சியமாகச் சொல்லி விட்டு மெதுவாக வண்டியில் ஏறுகிறான் செந்தில். ரயில் பயணத்தின் போது புகைப்பிடிக்கும் தாகம் எழ, அனைவரிடம் தள்ளி விட்டு இறங்க முற்படுகிறான். “ஏம்ப்பா.. எங்கப்பா போறே?” என்று கேட்கும் தம்பியை “எனக்குத் தெரியும்..” என்று அலட்சியப்படுத்தி இறங்குகிறான். ஒவ்வொருவரையும் தள்ளித் தள்ளி இறங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. “இந்த வண்டிக்கு ‘ஹவுரா’ன்னு பெயர் வைக்கறதுக்குப் பதிலா ‘நவுர்ரா’ன்னு வெச்சிருக்கலாம்” என்று ஜோக் அடிக்கும் இடத்தில் செந்தில் தனது காரெக்டரில் இருந்து வெளியேறி ‘லொள்ளுசபா மாறன்’ வெளிப்பட்டு விடுகிறார்.

J Baby - நடிகர் மாறன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | கண்டிப்பு, கறார், கருணை, கரிசனம்... ‘தினந்தோறும்’ ரேணுகா!

இன்னொரு தருணத்தில் “பொறி விக்கப் போனா காத்தடிக்குது.. வெல்லம் விக்கப் போனா மழையடிக்குது” என்று அதிர்ஷ்டமில்லாத விஷயத்தைப் பற்றி தம்பி சலித்துக் கொள்ள “ஏன் ரெண்டுத்தையும் கலந்து பொறி உருண்டையா விக்கலாமில்ல?” என்று நக்கல் அடிக்கும் இடத்திலும் லொள்ளு சபா மாறனின் குறும்பு வெளிப்பட்டு விடுகிறது. ஆனால் இது சொற்பமான இடங்களில் மட்டுமே. மற்றபடி ஒரு சீரியஸான அண்ணன் பாத்திரத்தை பல இடங்களில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் மாறன். 

பகைமைக்குப் பின்னால் உள்ள காரணம்

அது சரி. அண்ணனுக்கும் தம்பிக்கும் அப்படி என்னதான் பகை? பிளாஷ்பேக் காட்சியில் இதற்கான காரணம் வெளிப்படுகிறது. அண்ணனுக்கு நிச்சயித்த பெண், தனது காதலனுடன் ஓடிப் போய் விடுகிறார். இதனால் இரு வீட்டாருக்கும் இடையில் சண்டை நடக்கிறது. மணப்பெண்ணின் தங்கைக்கும் செந்திலுக்கும் கடுமையான வாக்குவாதம். ஆனால் பிறகு ஒரு டிவிஸ்ட். அண்ணனிடம் சண்டை போட்ட பெண்ணையே காதல் திருமணம் செய்து வருகிறான் தம்பி. தன்னை அவமானப்படுத்திய பெண்ணை, தம்பி  திருமணம் செய்து கொண்டானே என்று கோபமுறும் செந்தில், தம்பியை வீட்டை விட்டே துரத்துகிறான். இந்தப் பிரிதல் ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியை குலைக்கிறது. 

J Baby - நடிகர் மாறன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | OKOK | ‘நவீன அம்பி’ பார்த்தாவாக சேஷ்டை செய்யும் சந்தானம்!

அன்றிலிருந்து செந்தில் தனது தம்பியிடம் பேசுவதில்லை. எல்லாவற்றிலும் இருந்து ஒதுக்கி வைக்கிறான். விட்டுக் கொடுக்கும் குணமுள்ள தம்பி, அண்ணனின் மூர்க்கம் காரணமாக ஒதுங்கி நிற்கிறான். இப்படியொரு சூழலில்தான் அம்மாவைத் தேடி இந்தப் பயணம். 

கல்கத்தாவில் வசிக்கும் தமிழரான மூர்த்தி என்பவர்தான், இவர்களுக்கு உதவுகிறவர். ஊரில் வந்து இறங்கும் செந்தில், மூர்த்திக்கு போன் செய்ய, அவர் “பஸ் பிடிச்சு Barrackpore வந்து இறங்கிடுங்க.” என்று சொல்ல, செந்தில் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு “ஏதோ.. பராக் பராக் ஊராம்.. அங்க வரச் சொல்றாரு” என்று சொல்ல “ஏம்ப்பா.. என்னமோ பான்பராக் மாதிரி சொல்ற. ஒழுங்கா விசாரிப்பா” என்று கடுப்பாகிறான் தம்பி. 

இவர்களுக்கு உதவும் மூர்த்தி ஒரு ஸ்கூட்டரில் வந்து விசாரித்து விட்டு “வாங்க.. ஏறுங்க” என்று சொல்ல, “சார்.. நீங்க முன்னாடி போங்க.. நாங்க ஆட்டோல பின்னாடி வந்துடறோம்” என்று மறுக்கிறான் செந்தில். தம்பியுடன் உரசிக் கொண்டு எப்படி ஸ்கூட்டரில் பிரயாணம் செய்வது? கௌரவப் பிரச்சினை. “அட . ஏறுங்கப்பா” என்று அவர் சொல்ல, தம்பியின் மீது பட்டு விடாமல் உடம்பை பின்னால் வளைத்தபடியே பயணிக்கும் காட்சியில் மாறனின் நடிப்பு புன்னகையை வரவழைக்கிறது. 

குடிகார அண்ணனின் அலப்பறைகள்

இரவு தங்குவதற்காக,  ராணுவ வீரர்களின் இருப்பிடத்தைக் காட்டுகிறார் மூர்த்தி. அனைவரும் நைட் டூயூட்டி சென்றிருப்பதால் அப்போதைக்கு பிரச்சினையில்லை. “இங்க இருக்கற பொருட்கள் எதையும் தொடாதீங்க” என்று அவர் சொல்லி விட்டுச் சென்றாலும், தம்பி குளிக்கப் போகிற நேரத்தில் ஒவ்வொரு பெட்டியையும் ஆராய்ந்து ஒரு ரம் பாட்டிலைக் கண்டெடுத்து அதில் தண்ணீர் கலந்து குடித்து விட்டு,  வாட்டர் பாட்டிலிலும் ஃபில்அப் செய்து கொண்டு தம்பி வெளியே வரும் போது வாயைத் துடைத்துக் கொண்டு கமுக்கமாகப் படுத்துக் கொள்ளும் காட்சியில் ஒரு அசலான குடிகாரனின் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் மாறன். 

இதைப் பிறகு கண்டுபிடித்து விடும் தம்பி, பாட்டிலில் தண்ணீரை நிரப்பி விடுகிறான். பிறகான பயணத்தில் ‘பசிக்குது.. லஸ்ஸி சாப்பிடலாம்’ என்று தம்பி அழைக்க “ஒண்ணும் தேவையில்ல போ..” என்று வீம்பாக மறுத்து விட்டு குடிப்பதற்கு தனியான இடம் தேடுகிறான் செந்தில். பாட்டிலில் இருப்பது வெறும் தண்ணீர் என்பதை அறிந்து கொப்பளித்து விட்டு “யாரு இதை மாத்தியிருப்பா?” என்று கூலாக லஸ்ஸி குடித்துக் கொண்டிருக்கும் தம்பியை எரிச்சலுடன் பார்ப்பதும், அவனோ நமட்டுச் சிரிப்பை மறைத்துக் கொள்வதும் சுவாரசியமான காட்சி. 

J Baby - நடிகர் மாறன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | திருநங்கையாக ‘சூப்பர் டீலக்ஸ்’ விஜய்சேதுபதி

உணவுக்காக தம்பி செலவு செய்வதைப் பார்த்து காண்டாகும் செந்தில், வேறு எங்கோ பார்த்துக் கொண்டே “நாம என்ன.. அம்மாவைப் பார்க்க வந்தமா.. டூருக்கு வந்தமா.. நீ பாட்டுக்கு செலவு செஞ்சுட்டே போறே.. இது பொது துட்டு” என்று எரிச்சலுடன் பேச “சரிப்பா. நீயே வெச்சுக்க. செலவு செய்” என்று தம்பி சொல்ல, அந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் “ஏன்.. முக்காவாசி செலவு செஞ்சிட்டு என் தலைல கட்டலாம்ன்னு பாக்குறியா?” என்று தட்டிக் கழிப்பதில் அண்ணனிடம் உள்ள வெற்றான வீம்பையும் ஈகோவையும் மாறன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

இரவு தங்க இடம் கிடைக்காமல் ஒரு படகில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார் மூர்த்தி. அங்கு குடித்து விட்டு இரவு முழுக்க அனத்திக் கொண்டேயிருக்கும் காட்சிகளில் மாறனின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. “டேய்.. என்னையே ஏமாத்தலாம்ன்னு பார்க்கிறயா.. சாவடிச்சுடுவேன்..” என்று நடு இரவில் புலம்பும் அண்ணனை “ஏம்ப்பா.. கொஞ்ச நேரம் தூங்க விட மாட்டியா?” என்று தம்பி கேட்க “ச்சீ.. என் கிட்ட பேசாத.. மரியாதை கெட்ரும் உனக்கு.. அவ்ளோதான் உனக்கு மரியாத” என்று எரிந்து விழும் காட்சிகளில் ஒரு அண்ணனின் வெறுப்பு சரியாக பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது. 

J Baby - நடிகர் மாறன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | பூரணத்துவமான அக்கா ‘பூர்ணி’யாக... ‘அலைபாயுதே’ சொர்ணமால்யா!

வெற்று ஈகோவை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கும் மாறன்

இன்னொரு காட்சியில் அண்ணன் தொலைந்து விடுகிறார். சங்கரும் மூர்த்தியும் பதட்டமாக இவரைத் தேடுகிறார்கள். இவரே ஹாயாக ஒரு இடத்தில் புகை பிடித்துக் கொண்டு நிற்கிறார். “ஏம்ப்பா.. இப்படில்லாம் பண்றே.. அம்மாவைத் தேடி வந்திருக்கோம்… நீ உன்னையே தேட வெச்சிட்டியே?” என்று மூர்த்தி சலித்துக் கொள்ள “சரி.. சரி.. போலாம்.. போலாம்..” என்று அலட்சியமாக கைகாட்டும் இடத்திலும் மாறனின் நடிப்பு அருமை.

இன்னொரு தருணத்தில் வழக்கம் போல் குடித்து விட்டு செந்தில் புலம்ப ஆரம்பிக்க அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் மெல்லிய அடிதடி வந்து விடுகிறது.  திருமணம் நின்று போன சமயத்தில்,  தான் எப்படியெல்லாம் அவமானப்பட்டேன் என்பதை செந்தில் உருக்கமாக விளக்கும் காட்சி அற்புதமானது. “தூக்கு மாட்டிட்டு செத்துடலாம்ன்னு தோணுச்சு” என்று கலங்குகிறான் செந்தில். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தன் தரப்பு நியாயத்தை உருக்கத்துடன் சொல்கிறான் தம்பி. அப்போதுதான் எதிர் கோணத்தின் பக்கம் செந்திலுக்குப் புரிகிறது. தம்பியின் மீதான கோபம் அகல ஆரம்பிக்கிறது. தம்பி பரிசளித்து முன்பு மறுத்த சட்டையை இப்போது அணிந்து கொள்வது அவர்கள் இணக்கமாகி விட்டதின் குறியீடாக இருக்கிறது. 

சகோதரர்கள் ஒருவழியாக அம்மாவைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதுவரையான இறுக்கம் மறைந்து கண்கலங்க அம்மாவைப் பார்க்கிறார் செந்தில். இருவரையும் காணும் அம்மா, முதலில் தம்பியின் கைகளைப் பிடித்துக் கொண்டு “என்னைத் தேடி அவ்வளவு தொலைவு வந்தீங்களா?” என்று பரவசப்படுகிறாள். தனக்கு குழந்தை பிறந்திருக்கும் செய்தியை தம்பி சொல்ல, அம்மா அதைப் பாசத்துடன் விசாரிக்க “ஏம்மா.. எனக்கும் ஒரு குழந்தை இருக்கு. அதைப் பத்தி விசாரிக்க மாட்டியா?” என்று பொறாமையுடன் கேட்கிறான் செந்தில்.

இறுதிக்காட்சியில் செந்திலின் மடியில் தம்பியின் குழந்தையை வைத்துக் கொண்டு கொஞ்சம் காட்சி நெகிழ்வை ஏற்படுத்துகிறது. 

ஒரு மூத்த அண்ணனின் ஈகோ, தம்பிக்கு தரப்படும் முக்கியத்துவத்தால் ஏற்படும் பொறாமை, கோபம், பகைமை, குடிப்பழக்கத்தின் அலப்பறைகள், வெட்டி வீறாப்பு என்று பல்வேறு உணர்வுகளை தன் கதாபாத்திரத்தின் மூலம் இயல்பாக வெளிப்படுத்தி ‘செந்தில்’ என்னும் கேரக்டரை மறக்க முடியாதபடி செய்திருக்கிறார் மாறன். ஒரு நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகராக பெரும்பாய்ச்சலுடன் நகர்ந்திருக்கும் திரைப்படமாக   J பேபி-யைச் சொல்லலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com