மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 40 | ‘உன்னால் முடியும் தம்பி’ மனோரமா | அண்ணியும் அம்மாதான்!

40 வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் மனோரமா ஏற்று நடித்திருந்த அங்கயற்கண்ணி கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
உன்னால் முடியும் தம்பி திரைப்படம் - கமல்ஹாசன், கே.பாலச்சந்தர், மனோரமாPT Web

1958-ல் ‘மாலையிட்ட மங்கை’ என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை மனோரமா. அவரை அறிமுகப்படுத்தியவர் கண்ணதாசன். கதாநாயகியாக நடிக்க விரும்பிய மனோரமாவிற்கு நகைச்சுவைப் பாத்திரத்தில் அறிமுகமாக விருப்பமில்லை. அது குறித்த தயக்கம் இருந்தது.

‘கதாநாயகி என்றால் அந்த வேடத்தின் ஆயுள் குறைவு. காமெடி என்றால் இறுதி வரைக்கும் நடிக்கலாம்’ என்று சொல்லி சம்மதிக்க வைத்தார் கண்ணதாசன். கவிஞனின் வாக்கு பொய்க்காது. ‘கவிஞர் வழிகாட்டிய அந்த முடிவுதான் சரியானது’ என்று பல நேர்காணல்களில் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார் மனோரமா.

கண்ணதாசன் - மனோரமா
கண்ணதாசன் - மனோரமா

நகைச்சுவை நடிகையாக கொடி கட்டிப் பறந்த மனோரமா, ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு குணச்சித்திர நடிகையாகவும் மாறினார். நகைச்சுவை நடிகர்களால் குணச்சித்திர நடிப்பிற்கு எளிதில் மாற முடியும் என்பது தொடர்பான உதாரணங்களை இந்தக் கட்டுரைத் தொடரில் முன்பே நிறைய பார்த்திருக்கிறோம்.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
அட்டகாசமான கவுண்ட்டர், பிச்சு உதறும் டயலாக் டெலிவரி, கறாரான பாசம்... ஆல் இன் ஆல் அசத்தல் ‘கண்ணம்மா’!

(தொடரின் முந்தைய பிற அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

இப்படி மனோரமா குணச்சித்திர நடிகையாக பிரகாசிக்க ஆரம்பித்த காலக்கட்டத்திய படங்களுள் முக்கியமானது

‘உன்னால் முடியும் தம்பி’
இதில் கமலின் அண்ணி, ‘அங்கயற்கண்ணி’ பாத்திரத்தில் நடித்த மனோரமாவின் நடிப்பு அத்தனை உணர்ச்சிகரமாக அமைந்திருக்கும்.

தனது திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தந்து காட்சிகளை எழுதுவது பாலசந்தரின் வழக்கம். அந்த வகையில் இந்த ‘அங்கயற்கண்ணி’ மறக்க முடியாத அண்ணியாக மாறி விட்டார். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 38 | தடுமாற்றத்தால் சறுக்கிவிழும் இளைஞனாக ‘திலீப்’

அண்ணியாக அங்கயற்கண்ணி மனோரமா

பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை பெரிய சங்கீத வித்வான். (ஜெமினி கணேசன்). அவருக்கு மூன்று வாரிசுகள். இரண்டு ஆண் பிள்ளைகள். ஒரு பெண் பிள்ளை. மூத்த மகனின் மனைவிதான் அங்கயற்கண்ணி. மார்த்தாண்ட பிள்ளையின் மனைவியின் மறைவிற்குப் பிறகு மருமகளான அங்கயற்கண்ணிதான் வீட்டு நிர்வாகத்தை சீரும் சிறப்புமாக கவனிக்கிறார்.

எல்லோரும் அஞ்சி நடுங்கும் மார்த்தாண்ட பிள்ளையே, சற்று நிதானித்து அடங்கி நடப்பது மருமகளான அங்கயற்கண்ணியின் சொல்லுக்குத்தான்.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 37 | ‘நான் பெத்த மகனே’ மனோரமா | மிகையான அன்பும் மனச்சிக்கலே!

யாரையுமே மனதார பாராட்டாத மார்த்தாண்டம், “இவ ஒரு நாள் இந்த வீட்டுல இல்லைன்னா இந்தக் குடும்பம், எஸ்டேட்லாம் என்ன ஆகும்?” என்று வாய் விட்டு பாராட்டுவது அங்கயற்கண்ணியை மட்டுமே. அங்கயற்கண்ணியின் கணவர் நாகஸ்வர வித்வான். வாய் பேச முடியாதவர்.

மனோரமா
மனோரமா

அங்கயற்கண்ணி அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே அவரது பாத்திரத்தின் தன்மை பளிச்சென்று வெளிப்பட்டு விடுகிறது. மார்த்தாண்டம் ஆலாபனை செய்தபடி சங்கீதத்தில் மூழ்கியிருக்க, வீட்டுக்கு வெளியே சாமி ஊர்வலம் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

அண்ணி.. அண்ணி.. வெளிய சாமி காத்துக்கிட்டு இருக்கு. அப்பா கிட்ட எப்படி சொல்றது?” என்று மோகனா (மார்த்தாண்ட பிள்ளையின் மகள்) பதட்டத்துடன் கேட்க, அந்தச் சூழலை இயல்பாக கையாள்கிறார் அங்கயற்கண்ணி. “சாமி காத்துக்கிட்டு இருக்கல.. மார்த்தாண்டம் பிள்ளையோட இசையை கேட்டு ரசிச்சிக்கிட்டு இருக்கு” என்று சொல்லும் அண்ணி, சற்று நகர்ந்து “எல்லோரையும் காக்கற கடவுள், நம்ம வீட்டு வாசல்லயும் கொஞ்சம் காக்கட்டுமே” என்று சொல்லுமிடத்தில் மனோரமாவின் நடிப்பு மட்டுமில்லாமல் வசனத்தின் கூர்மையும் வெளிப்படுகிறது. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 34 | உணர்ச்சிகரமான உயிர் நண்பன் ‘ரகு’வாக ‘சலங்கை ஒலி’ சரத்பாபு!

பொறுப்பற்ற தன்மையுடன் விளையாட்டுப் புத்தியுடன் இருக்கும் மகன் உதயமூர்த்தியை (கமல்ஹாசன்) அவ்வப்போது ஏகவசனத்தில் திட்டித் தீர்ப்பது மார்த்தாண்டத்தின் வழக்கம். அப்படியாக ஒரு முறை சாப்பாட்டு மேஜையில் “இப்படியொரு பிள்ளை இருந்தா என்ன.. செத்தா என்ன?” என்று ஆத்திரத்தில் அவர் திட்ட, வழக்கமாக மாமனாரை எதிர்த்துப் பேசாத அங்கயற்கண்ணி சட்டென்று குறுக்கிட்டு “என்ன மாமா.. இது.. நீங்க ஒரு வித்வான். உங்க வாக்கு பலிச்சிடாதா.. உதயமூர்த்திக்கு நான் அண்ணி மட்டுமல்ல, அம்மாவும் கூட” என்று கண்கலங்கிச் சொல்ல தன்னுடைய தவறை உணரும் மார்த்தாண்ட பிள்ளையும் பின்பு கண் கலங்குகிறார்.

மனோரமா
மனோரமா

அம்மாவின் இன்னொரு வடிவம்தான் அண்ணி

மறுநாள் உதயமூர்த்தி நடுவீட்டின் உத்திரத்தில் தூக்கில் தொங்குகிறான். அண்ணி அலறியடித்துக் கொண்டு ஓடி வருகிறார். எல்லோரும் பதறி விடுகிறார்கள். ஆனால் அது வழக்கம் போல் உதயமூர்த்தியின் குறும்பு என்பது தெரிகிறது.

வழக்கமாக அவனுடைய குறும்புகளுக்கு சிரிக்கும் அண்ணி இந்த முறை சிரிப்பதில்லை. அவரின் முகம் சில விநாடிகளுக்கு குளோசப் காட்சியில் காட்டப்படுகிறது. முகம் சிவந்து கண்களில் நீர் துளிர்க்க மனோரமா தரும் நடிப்பு பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது.

மனோரமா
மனோரமா

உன்னை சரியா வளர்க்கத் தவறிட்டேன். நான் தோத்துப் போயிட்டேன் உதயமூர்த்தி” என்று அண்ணி வெடித்து கதறி அழ, உதயமூர்த்தி திகைத்துப் போய் நிற்கிறான். 

இன்னொருபுரம், உதயமூர்த்தி மட்டுமல்ல, அங்கயற்கண்ணியின் வாய் பேச முடியாத கணவரும் அவருக்கு ஒரு பிள்ளை மாதிரிதான். “என்னதிது பனியனா.. இல்லை சல்லடையா.. ஆனை கட்டி போரடிச்ச ஜமீன்தார் பரம்பரை இது. இந்த வீட்டுக்காச்சும் ஒரு மரியாதை வேணாமா?” என்று கணவரின் பனியனை மாற்றி தலையைத் துவட்டி விடும் காட்சி அற்புதமானது.

அண்ணிக்கும் கொழுந்தனுக்கும் உள்ள உறவு தாய்க்கும் மகனுக்கும் என்பது போல இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக சித்திரிக்கப்பட்டுள்ளது. தான் காதலில் விழுந்த பெண்ணைப் பற்றி அண்ணியிடம் உதயமூர்த்தி மறைமுகமாகச் சொல்லும் காட்சி சுவாரசியமானது.

மனோரமா - கமல்ஹாசன்
மனோரமா - கமல்ஹாசன்

“கருநாகப்பாம்பு மாதிரி அப்படியொரு கூந்தல் அண்ணி... வெயிட் கூட கச்சிதம்... 45 கிலோதான் இருப்பா” என்று வர்ணிக்கிற உதயமூர்த்தி, ஒரு சினிமாப்பாடலை முணுமுணுத்து விட்டு பிறகு அதை கர்நாடக சங்கீத ராகத்தில் மாற்றி ஆலாபனை செய்வதும் “ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் பாட்டுதானே?” என்று அண்ணி அந்தப் பாடலைப் பாடி கிண்டல் செய்வதும் ரகளையான நகைச்சுவையைக் கொண்ட காட்சி. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 26 | நாயகன் பட ‘ஜனகராஜ்’!

சுவாரசியமான ஒத்திகைக் காட்சி

இந்தப் படத்தில் பலரும் மறக்க முடியாத ஒரு காட்சி, ஹீரோயின் தன்னுடைய பெயரை வேண்டுமென்றே வில்லங்கமாகச் சொல்லி குறும்பு செய்வது. “இவ்ளோ வர்ணிக்கறயே?.. அவ பேரு என்ன?” என்று அண்ணி விசாரிக்க “அய்யோ.. அதை மறந்துட்டனே!” என்று கேட்பதற்காக ஓடும் உதயமூர்த்தி, காதலியின் பெயரைக் கேட்டு விட்டு பேய் அறைந்தது மாதிரி தவிப்பதும், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அண்ணியிடம் “அய்யோ..இந்தச் சமயத்துல எப்படி அந்தப் பேரை சொல்லுவேன்?” என்று அங்கலாய்ப்பதும் நகைச்சுவை இழைந்தோடும் காட்சிக் கோர்வை.

“அண்ணி.. என்னோட காதலைப் பத்தி அப்பா கிட்ட நீங்கதான் பேசணும்.. வாங்க.. எப்படி சொல்வீங்க.. பேசிக் காட்டுங்க” என்று மார்த்தாண்டம் பிள்ளையாக உதயமூர்த்தியும் அண்ணியாக அங்கயற்கண்ணியும் ஒத்திகை பார்க்கும் காட்சியும் சுவாரசியமானது.
மனோரமா
மனோரமா

பின்னால் மார்த்தாண்டம் வந்து நிற்க அதை அறியாமல் உதயமூர்த்தி வசனம் பேசிக் கொண்டே போக “இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம்.. பின்னால பாரப்பா” என்று பிளேட்டை மாற்றிப் பேசி அண்ணி நழுவும் காட்சியில் வெடிச்சிரிப்பு வராமல் போகாது. 

யய்யா.. சாமி.. அந்தப் பொண்ணு எந்த சாதின்னு தெரியாம நான் பாட்டுக்கு தூபம் போட்டு பேசிட்டேன். என்னை விட்டுடுய்யா.. மாமா கிட்ட என்னால இதைப் பத்தி பேச முடியாது” என்று அங்கயற்கண்ணி பயந்து கையெடுத்துக் கும்பிட்டு ஓடுகிறார். பிறகு தனது கணவரிடம் “வீட்டுக்கு மூத்த பிள்ளையா அப்பாவை சமாதானப்படுத்தணும்.. இல்லைன்னா தம்பியைக் கண்டிக்கணும்.. இப்படி ஜடம் மாதிரி இருந்தா என்ன அர்த்தம்?” என்று கோபத்துடன் கேட்க, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலை அவர் நாகஸ்வரத்தில் வாசித்து தனது பதிலைத் தெரிவிக்கும் காட்சி அற்புதமானது. 

மனோரமா
மனோரமா

கொழுந்தனை மகனாகவே பாவிக்கும் அண்ணிமார்கள்  

உயிருக்குப் போராடும் ஒரு தொழிலாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தன்னுடைய காரைத் தருவதற்கு மனமில்லாமல் இசைக்கச்சோிக்கு பாடச் செல்கிறார் மார்த்தாண்டம். தகுந்த நேரத்தில் கொண்டு செல்லாததால் தொழிலாளியின் உயிர் பறிபோகிறது. இந்த விஷயம் உதயமூர்த்தியின் மனதை வெகுவாகப் பாதிக்கிறது. எனவே தகப்பனுக்கும் பிள்ளைக்கும் வாக்கு வாதம் உச்சத்தில் நடக்கிறது.

“என்னடா.. வெறி பிடிச்சவன் மாதிரி பேசற.. அப்பாவையே எதிர்த்துப் பேசற அளவிற்கு வந்துடுச்சா.. மன்னிப்பு கேளு” என்று உதயமூர்த்தியின் கன்னத்தில் அறைகிறார் அங்கயற்கண்ணி.
மனோரமா - கமல்ஹாசன் - ஜெமினிகனேசன்
மனோரமா - கமல்ஹாசன் - ஜெமினிகனேசன்

அது எப்போதுமே பெண்கள் செய்யும் நல்ல தந்திரம். உக்கிரமான போரை நிறுத்துவதற்கான யுக்தி.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக்கதாபாத்திரங்கள் | மருமகளிடம் வேலைக்காரியாக நடிக்கும் மாமியாராக ‘அவர்கள்’ லீலாவதி

“நான் செஞ்சது தப்பு இல்ல அண்ணி” என்று தழுதழுத்த குரலில் சொல்லும் உதயமூர்த்தி வீட்டை விட்டுப் புறப்பட முடிவு செய்கிறான். அவனைத் தடுக்க முடியாமல் தன் கணவரிடம் சொல்லி புலம்பும் காட்சியில் மனோரமாவின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. “அவன் வெளியே போனா பெரிய ஆளா வருவான்” என்று அண்ணன் சைகையால் சொல்ல வேறு வழியின்றி அதற்கு சம்மதிக்கிறார் அண்ணி.

மனோரமா - கமல்ஹாசன்
மனோரமா - கமல்ஹாசன்

ஒற்றைப் பையை முதுகில் சுமந்து கொண்டு வெளியேறும் உதயமூர்த்தியிடம் அவசரம் அவசரமாக உணவுப் பொட்டலத்தை தயார் செய்து தருகிறார். அவன் வாங்க மறுக்க அடிப்பது போன்ற பாவனையுடன் கையை ஓங்கும் காட்சியில் அசலான தாய்மையின் நடிப்பு மனோரமாவிடம் வெளிப்படுகிறது. உதயமூர்த்தி வீட்டை விட்டு வெளியேறுவதை அங்கயற்கண்ணி நீண்ட நேரம் பார்க்கும் காட்சி உருக்கமானது. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
'உன்னை நான் அறிவேன்..' குணாவின் நிஜ 'அபிராமி' ரேகா நடித்த ரோஸி தான்..!

உதயமூர்த்தியின் திருமணத்தை அவனது அப்பாவான மார்த்தாண்டம் பிள்ளையே மறைமுகமாக தடுத்து நிறுத்துவதை அறியும் மூத்த மகன் கோபமடைந்து தன் மனைவி அங்கயற்கண்ணியை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவது உணர்ச்சிகரமான காட்சி.

மனோரமா
மனோரமா

ஒரு பக்கம் கணவனின் இழுப்பை சமாளிக்க முடியாமல், கைக்குழந்தையை சுமந்து கொண்டு இன்னொரு பக்கம் தன் மாமனாரையும் பரிதவிப்புடன் திரும்பிப் பார்த்துக் கொண்டே கணவருடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் அங்கயற்கண்ணி.

தமிழ் சினிமாவில் எத்தனையோ அண்ணி பாத்திரங்கள் வந்திருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் தன் அநாயசமான நடிப்பால் தாண்டி முதலிடத்தில் நிற்கிறார் இந்த அங்கயற்கண்ணி என்கிற மனோரமா. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com