மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 37 | ‘நான் பெத்த மகனே’ மனோரமா | மிகையான அன்பும் மனச்சிக்கலே!

37 வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘நான் பெத்த மகனே’ திரைப்படத்தில் மனோரமா ஏற்று நடித்திருந்த ஆண்டாள் கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
‘நான் பெத்த மகனே’ படம்
‘நான் பெத்த மகனே’ படம்புதிய தலைமுறை
Published on

‘குடும்பச் சித்திரம்’ என்றொரு ஜானரே தமிழ் சினிமாவில் வழக்கொழிந்து போய் விட்டது. ஹீரோ சாதாரண கோயிஞ்சாமியாக இருந்தால் கூட திடீரென்று மெஷின் கன்னை தூக்கி ‘படபட’வென்று நூறு பேரை சுட்டுத் தள்ளும் ஆக்ஷன் படங்கள் பெருகி இப்போது டிரெண்டாகி விட்டன.

பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு, டி.பி.கஜேந்திரன் என்று குடும்பத் திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த இயக்குநர்கள் முன்பு கணிசமாக இருந்தார்கள். இதன் கடைசிக் கண்ணி என்று வி.சேகரைச் சொல்லலாம்.

இயக்குநர் வி.சேகர்
இயக்குநர் வி.சேகர்

வி.சேகர் எடுக்கும் பெரும்பாலான திரைப்படங்கள், குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சினைகளை ஜனரஞ்சகமான பாணியில் அலசுவதாக இருக்கும். இந்த வரிசையில் அவர் இயக்கிய திரைப்படங்களுள் முக்கியமானது

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

‘நான் பெத்த மகனே’

பெண்களை சரியான முறையில் சித்திரித்த சிறந்த படம்’ என்கிற பிரிவில் தமிழ்நாடு மாநில விருதைப் பெற்ற திரைப்படம் இது. 

மாமியார் - மருமகள் - நூற்றாண்டு காலப் பிரச்னை

மாமியார் Vs மருமகள் பிரச்சினை என்பது உலகளாவியது மட்டுமல்ல, பல நூற்றாண்டுகள் கடந்ததும் கூட. திருமணம் என்னும் அமைப்பு மனித குலத்தில் உருவான போது இந்தப் பிரச்னையும் கூடவே தோன்றியிருக்கும். பல வருடங்களாக தான் போற்றி வளர்த்த மகனை, நேற்று வந்த ஏதோவொரு பெண் அபகரித்துக் கொண்டு போகிறாளே என்கிற நோக்கில் மாமியாருக்கு பதட்டமும் ஆத்திரமும் ஏற்படும். அதுவரை தன்னுடைய அதிகாரத்தில் இருந்த வீடும் மகனும், புதிதாக நுழைந்த ஒரு பெண்ணின் கட்டுப்பாட்டிற்கு செல்வதை எந்தவொரு மாமியாரும் ஏற்க மாட்டார். ஒருவகையான உளவியல் அச்சம் இது. 

அதே போல, தான் அத்தனை வருடம் வாழ்ந்து வளர்ந்த  வீடு, உறவுகள் போன்றவற்றை துறந்து புகுந்த வீட்டிற்கு வரும் மருமகள், சுயமரியாதையோடும் கரிசனத்தோடும் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இது நிகழாத பட்சத்தில், மனைவி என்னும் உரிமையை அவர் நிலைநாட்ட முயல்வார்.

காதல், காமம் போன்ற ஆயுதங்களின் துணையோடு கணவனை தன் பக்கம் இழுக்க முயல்வார். ஆக ஒருவகையான உளவியல் யுத்தம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆரம்பமாகும். மாமியார் - மருமகள் என்கிற இந்த உறவு, நீரும் நெருப்பும் போல. ஒன்றிணையவே முடியாதாக இருக்கிறது. 

‘நான் பெத்த மகனே’ படம்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்| “சார்..மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்சு”- VIP ‘அழகு சுந்தரம்’ விவேக்!

ஆனால் இரண்டு தரப்புமே ஒருவரையொருவர் புரிந்து கொண்டு பரஸ்பர மதிப்பு மற்றும் அன்புடன் நடத்தினால் இந்த உறவு சீர்குலையாமல் இருக்கும். வீட்டின் மருமகளை, தனது மகள் போலவே நடத்தும் அரிய மாமியார்களும் உலகத்தில் உண்டு. 

‘நான் பெத்த மகனே’ திரைப்படம், இந்தப் பிரச்சினையைத்தான் மிக சுவாரசியமாகவும் கோர்வையாகவும் உணர்ச்சிகரமாகவும் அலசுகிறது.

‘நான் பெத்த மகனே’ திரைப்படம்
‘நான் பெத்த மகனே’ திரைப்படம்

மாமியார் - மருமகள் பிரச்சினை எவ்வாறெல்லாம் உற்பத்தியாகிறது, அதற்கான காரணங்கள் என்ன, தீர்வு என்ன என்பதையெல்லாம் வெகுசன பாணியில் உரையாடுகிறது. 

மாமியார் பாத்திரத்தில் அசத்தியிருக்கும் மனோரமா

அறுபதுகளில் நடிகையாக அறிமுகமான மனோரமா, தமிழ் சினிமாவின் மிக முன்னணி  நகைச்சுவை நடிகையாக உயர்ந்தார். பிறகு பல குணச்சித்திர பாத்திரங்களிலும் பிரகாசித்தார். இந்த இரண்டின் கலவையாக பல படங்களில் அவர் நடிப்பு கொடி கட்டிப் பறந்தது.

நடிகை மனோரமா
நடிகை மனோரமா

அவரது வழக்கமான பாணியிலிருந்து வித்தியாசப்பட்டு, மனோரமாவின் ‘சீரியசான’ முகத்தையும் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்திய திரைப்படங்களுள் ஒன்றாக ‘நான் பெத்த மகனே’வைச் சொல்ல முடியும். நகைச்சுவை முகத்தின் ஒரு துளியைக் கூட காண்பிக்காமல், ‘ஆண்டாள்’ என்கிற  உணர்ச்சிகரமான பாத்திரத்தில் நடித்திருந்தார் மனோரமா.

ஒருவரிடம் நாம் அன்பு செலுத்துவதும் பதிலுக்கு எதிர்பார்ப்பதும் இயல்பானதுதான். ஆனால் அந்த அன்பு மிகையாகி விடும் போது அதுவே சிக்கலாகவும் மாறி விடுகிறது என்கிற செய்தியை இந்தத் திரைப்படம் வலுவாக பதிவு செய்திருந்தது. 

‘நான் பெத்த மகனே’ படம்
அட்டகாசமான கவுண்ட்டர், பிச்சு உதறும் டயலாக் டெலிவரி, கறாரான பாசம்... ஆல் இன் ஆல் அசத்தல் ‘கண்ணம்மா’!

ஆண்டாளின் ஒரே மகன் ரவி. அவனுக்கு வயது முப்பதைத் தாண்டியிருந்தாலும், ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பவனாக இருந்தாலும் எல்கேஜி வகுப்பிற்கு செல்லும் குழந்தையை கையாள்வது போலவே அவனை நடத்துகிறார் ஆண்டாள். குளிப்பாட்டுவது, தலை சீவுவது, என்ன ஆடை போட வேண்டும் என கட்டாயப்படுத்துவது என்று ரவியின் ஒவ்வொரு அசைவையும் ஆண்டாள்தான் தீர்மானிக்கிறார். தாயன்பு என்கிற பெயரில் ரவியின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அவர்தான் ஆக்ரமித்திருக்கிறார். பதிலுக்கு ரவியும் தன்னிடம் பாசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். தன்னுடைய அம்மாவின் மீது ரவியும் விசுவாசமான பாசத்துடன் இருக்கிறார்.

‘நான் பெத்த மகனே’ படம் - இயக்குநர் வி சேகர்
‘நான் பெத்த மகனே’ படம் - இயக்குநர் வி சேகர்

இது சார்ந்த துவக்க காட்சிகளின் மூலம் இரு பாத்திரங்களின் வார்ப்புகளும் பார்வையாளர்களுக்கு சரியாக நிறுவப்பட்டு விடுகின்றன. ஒரு காலக்கட்டத்திய தமிழ் சினிமாவை ‘அம்மா’ பாத்திரத்தின் மூலம் மனோரமா ஆட்சி செய்து கொண்டிருந்த காரணத்தினால், இது தொடர்பான காட்சிகளை மிக அநாசயமாகவும் இயல்பாகவும் நடித்து விடுகிறார்.

'சினிமா அம்மா' நடிப்பையும் அற்புதமாக வெளிப்படுத்தும் மனோரமா

என்னதான் கிளிஷேவான ‘அம்மா’ பாத்திரம் என்றாலும் அதில் தன்னுடைய பிரத்யேகமான நடிப்பால் நிஜம் போல் ஆக்கி விடுவதை சிலரால்தான் செய்ய முடியும். ‘இது சினிமா.. இதில் வருவது புனைவுக்காட்சிகள்’ என்கிற யதார்த்தத்தைக் கடந்து நடுவில் இருக்கிற திரையைத் தாண்டி வந்து பார்வையாளனின் மனதிற்குள் நுழைந்து விடும் திறமையான நடிகர்களுள் ஒருவராக மனோரமா இருப்பதால், சினிமா அம்மாக்களின் சலிப்புகளையும் தாண்டி ஏதோவொரு மாயம் செய்து விடுவார். அப்படிப்பட்ட உணர்வு இது போன்ற காட்சிகளில் வருகிறது.

‘நான் பெத்த மகனே’ படத்தில் நிழல்கள் ரவி - மனோரமா
‘நான் பெத்த மகனே’ படத்தில் நிழல்கள் ரவி - மனோரமா

ஆண்டாளின் வீட்டைச் சுற்றியுள்ள அம்மாக்கள், ‘தாங்கள் எப்படியெல்லாம் மருமகளால் பாதிக்கப்பட்டோம்’ என்பதை அடிக்கடி வம்பு கலந்த புகாராக சொல்ல, தன்னுடைய மகன் அப்படியெல்லாம் கிடையாது என்று ஆண்டாள் தீர்மானமாக நம்புகிறார். இப்படியொரு சூழலில் ரவிக்கு இந்திரா என்கிற பெண்ணின் மீது காதல் ஏற்படுகிறது. அம்மாவின் அன்புக் கோட்டையை மீறி அவன் வெளியே காலடி எடுத்து வைக்கும் முதல் அசைவு அது. 

‘நான் பெத்த மகனே’ படம்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 30 | அஞ்சாதே ‘தயா’ | வில்லன்தனத்தை காட்ட வசனம் எதற்கு?

தன்னிடம் எதையும் மறைக்காத மகன், முதன்முறையாக எதையோ மறைப்பதைக் கண்டு அதிர்ச்சியடையும் காட்சியில் மனோரமாவின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. மெலிதான கோபத்துடன் இதைப் பற்றி விசாரிக்கிறார். “நீ மறுக்க மாட்டேன்னு உன் மேல நம்பிக்கை வெச்சேன். அது தப்பா?” என்று மகன் அப்பாவித்தனமாக பாவனை செய்ய உடனே சந்தோஷமாகி விடும் ஆண்டாள், மகனின் காதலை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு மாறி விடுகிறார். கோபம், மகிழ்ச்சி ஆகிய இரண்டு உணர்ச்சிகளையும் அடுத்தடுத்து நடிப்பதில் மனோரமாவின் திறமை அற்புதமாக பதிவாகியிருக்கிறது. 

‘நான் பெத்த மகனே’ படத்தில் நிழல்கள் ரவி - மனோரமா
‘நான் பெத்த மகனே’ படத்தில் நிழல்கள் ரவி - மனோரமா

படித்த மருமகளைக் கண்டு மிரளும் மாமியார்

வழக்கறிஞராக இருக்கும் இந்திராவின் வீட்டிற்கு திருமண சம்பந்தம் பேசும் விஷயமாக ஆண்டாளும் ரவியும் செல்கிறார்கள். மருமகள் தன்னை அன்புடன் வரவேற்பதைப் பார்த்து ஆண்டாள் மகிழ்ச்சியடைகிறாள். ஆனால் பேசிக் கொண்டிருக்கும் போது இந்திரா மிக இயல்பாக கால் மேல் கால் போட்டு அமர்வதைப் பார்க்கும் போது உள்ளுக்குள் ஆண்டாளுக்கு நெருடல் ஏற்படுகிறது. இந்தச் சிறிய முகமாற்றத்தை ஒரு அற்புதமான ரியாக்ஷன் ஷாட்டில் வெளிப்படுத்தி விடுகிறார் மனோரமா. பிறகு நடக்கும் சம்பவங்கள் ஆண்டாளின் மனதை மாற்றி விடுகின்றன. வீட்டின் பணியாள் செய்த தவறுக்காக அவரை கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறாள் இந்திரா. 

‘நான் பெத்த மகனே’ படம்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | கோபத்தின் வெப்பமும் அன்பின் குளிர்ச்சியும் ஆய்த எழுத்து இன்பா

‘ஒரு ஆம்பளையை கன்னத்தில் அடிக்கலாமா.. இப்படிப்பட்ட பொண்ணு நமக்கு வேணாம்ப்பா’ என்று இந்திராவை மருமகளாக ஏற்க மறுக்கிறார் ஆண்டாள். ஆனால் காதலின் மயக்கத்தில் இருக்கும் ரவி பிடிவாதமாக இருக்கிறான். தன்னுடைய பிடியில் இருந்து மகன் விடுபட்டு விடுவானோ என்று அச்சமடையும் ஆண்டாள், பெற்றோர்கள் வழக்கமாக கையில் எடுக்கும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார். ஆம். தற்கொலை முயற்சி. பயந்து போகும் ரவி தன் காதலைக் கைவிடுகிறான். இது சார்ந்த உணர்ச்சிகரமான காட்சிகளில் மனோரமாவின் நடிப்பு கொடி கட்டிப் பறக்கிறது. 

‘நான் பெத்த மகனே’ படத்தில் நிழல்கள் ரவி - மனோரமா
‘நான் பெத்த மகனே’ படத்தில் நிழல்கள் ரவி - மனோரமா

இந்த டிராமாவின் சதுரங்க ஆட்டத்தில் ஆண்டாளுக்கு வெற்றி கிடைக்கிறது. ‘படித்த மருமகளாக இருந்தால் தன் அதிகாரத்திற்கு உடன்பட மாட்டார். மகனையும் பிரித்து விடுவார்’ என்று கணக்குப் போடுகிற ஆண்டாள், உமா என்கிற அநாதைப் பெண்ணை மகனுக்கு திருமணம் வைத்து விடுகிறாள். அந்தப் பெண் தனக்கு அடங்கி நடப்பாள் என்பது ஆண்டாளின் திட்டம். 

‘நான் பெத்த மகனே’ படம்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 20 |நடிப்பின் இலக்கணம் - காளையனாக வாழ்ந்த குரு சோமசுந்தரம்!

மிகையான அன்பும் ஒருவகையான மனச்சிக்கல்தான்

திருமணமான இளம் தம்பதியினர் கிளுகிளுப்பான செயல்களில் ஈடுபடுவது ஆண்டாளுக்கு நெருடலை ஏற்படுத்துகிறது. மகனுக்கு திருமணம் ஆகி விட்டாலும் கூட குளிப்பாட்டுவது, உணவு சமைப்பது என்று வீட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் தன்னுடைய அதிகாரத்தை விட்டுத்தர மறுக்கிறார் ஆண்டாள். இதனால் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே விரிசல் ஆரம்பிக்கிறது. ஏழைப் பெண்ணான உமா, ஆரம்பத்தில் அடங்கிப் போனாலும் ஆண்டாளின் ஆட்சி எல்லை மீறி நடக்கும் போது தன்னிச்சையாக பொங்கி விடுகிறாள்.

‘நான் பெத்த மகனே’ படத்தில் நிழல்கள் ரவி - ஊர்வசி
‘நான் பெத்த மகனே’ படத்தில் நிழல்கள் ரவி - ஊர்வசி

பாசமான அம்மாவின் பக்கம் சாய்வதா, காதல் மனைவியின் பக்கம் சாய்வதா என்கிற தடுமாற்றத்தில் ரவி விழுகிறான். இதனால் குடும்பத்தில் தொடர்ந்து சண்டைகளும் சச்சரவுகளும் பெருகுகின்றன. “அநாதை நாயே.. என் மகனுக்கு வேறொரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன்” என்று ஆண்டாள் ஆத்திரத்தில் வெடிக்க “நீங்களே அந்தத் தாலியை வாங்கிக் கட்டிக்கங்க” என்று உமாவும் பதிலுக்கு வெடிக்கிறாள்.

மிக நுட்பமாக எழுதப்பட்ட freudian slip வசனம் இது. 

புராணங்களில் சித்தரிக்கப்படும் கடவுளான விநாயகருக்கு ஏன் திருமணம் நடக்கவில்லை என்கிற கேள்விக்கு, அவர் தன் தாயின் சாயலைக் கொண்ட பெண்ணைத் தேடியதாகவும் அந்தத் தேடல் நிறைவேறாத காரணத்தால் திருமணம் நடக்கவில்லை என்றும் ஒரு கருத்து உள்ளது.

மகனின் மீது மிகையான அன்பைக் கொட்டும் ஆண்டாளுக்கு, உமாவின் அந்த வில்லங்கமான கேள்வி இன்னமும் ஆத்திரத்தை ஏற்படுத்துவதால் இந்த மோதல் உச்சத்தை எட்டுகிறது.

வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் அமர்ந்து விடுகிறாள். இது தொடர்பான காட்சிகளில் மனோரமாவின் நடிப்பு சன்னதம் வந்தது போல் உக்கிரமாக அமைந்திருக்கிறது. 

‘நான் பெத்த மகனே’ படத்தில் நிழல்கள் ரவி - மனோரமா
‘நான் பெத்த மகனே’ படத்தில் நிழல்கள் ரவி - மனோரமா

தாமதமாக அடையும் ஞானோதயம்

ஒரு கட்டத்தில் மனஅழுத்தம் தாங்காமல் உமா தற்கொலை செய்து கொள்ள, அது கொலையாக கருதப்பட்டு அந்தப் பழி ஆண்டாளின் மீது விழுகிறது. "உங்க அம்மாதானே சாகடிச்சாங்க?” என்று நீதிமன்றத்தில் ரவியிடம் விசாரிக்கப்படும் போது “ஆமாம்” என்று அவனும் தடுமாற்றத்தில் சொல்ல, ஆண்டாளுக்கு தலையில் இடி விழுந்தது போலாகிறது. “ஆமாம். நான்தான் குற்றவாளி. தூக்குல போடுங்க” என்று கதறும் காட்சியில் மனோரமாவின் அத்தனை வருட நடிப்புத்திறமையும் வெளிப்படுகிறது. பிறகு அது தற்கொலைதான் என்று நிரூபிக்கப்படுவதால் மனோரமா விடுதலையாகிறார்.

‘நான் பெத்த மகனே’ படம்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 33 | சூது கவ்வும் | ‘ஞானோதயம்’ பெறும் அமைச்சராக எம்.எஸ்.பாஸ்கர்

நீதிமன்றம் விடுவித்து விட்டாலும் மனோரமாவின் மனச்சாட்சி அவரை விடுவிக்கவில்லை. தன்னிடம் அடைக்கலம் நாடி வந்த பெண்ணை மருமகளாக்கி மரணம் வரை செல்லும் அளவிற்கு தான் காரணம் ஆகி விட்டோமே என்று தவிக்கிறார். மகனின் வாழ்க்கைக்கு வழிவிட்டு மருமகளை சுதந்திரமாக ஏற்றுக் கொண்டிருந்தால் இருவரின் வாழ்க்கையும் நன்றாக இருந்திருக்குமே என்று பரிதவிக்கிறார். ஆனால் இது தாமதமான ஞானோதயம். 

‘நான் பெத்த மகனே’ படத்தில் மனோரமா
‘நான் பெத்த மகனே’ படத்தில் மனோரமா

மாமியார் - மருமகள் மோதல் என்கிற, நீண்ட காலமாக இருக்கிற பிரச்னையின் ஆதாரமான சிக்கலை இந்தப் படம் சரியாக அணுகியிருக்கிறது. மகனின் மீது மிகையான அன்பைக் கொட்டி, அந்த அன்பையே ஓர் ஆயுதமாக பயன்படுத்தும் மாமியாரின் அதிகாரம் காரணமாக ஒரு குடும்பமே உடைந்து சிதறிப் போவதை இயக்குநர் வி.சேகர் ஜனரஞ்சமான திரைமொழியில் சித்தரித்திருக்கிறார். ‘ஆண்டாள்’ என்கிற பாத்திரத்தில் நடித்த மனோரமாவின் நடிப்பு, அவரது கலைப் பயணத்தில் வித்தியாசமானது மட்டுமல்ல, மறக்க முடியாததும் கூட

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com