வசந்த் இயக்கிய அருமையான திரைப்படங்களுள் ஒன்று,
அவருடைய இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமும் கூட. இது ஜூலை 27, 1990 அன்று வெளியானது.
முப்பத்து நான்கு வருடங்களைக் கடந்திருந்தாலும் இன்று பார்த்தாலும் கூட நெகிழ்வுணர்ச்சியைத் தரக்கூடிய ஃபீல் குட் திரைப்படம்.
இந்தப் படத்தை மீள்நினைவு செய்யும் விதமாக இதில் வரக்கூடிய ஒரு சுவாரசியமான துணைக் கதாபாத்திரத்தைப் பற்றி பார்க்கலாம்.
நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிப்புடனான கலவையில் வெளிப்படும் போது கூடுதலாக பிரகாசிப்பார்கள் என்பதற்கு இந்தக் கட்டுரைத் தொடரில் பல உதாரணங்களை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் குறிப்பிடத்தகுந்தவர்
முகம் நிறைய சிரிப்போடு வித்தியாசமான இழுவையில் ‘என்னமோ போடா மாதவா’ என்கிற பாணியில் இவரிடமிருந்து வெளிப்படும் விதம் விதமான நகைச்சுவைக் காட்சிகளை நாம் நிறைய ரசித்திருக்கிறோம்.
‘கேளடி கண்மணி’ திரைப்படத்தில் வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது குணச்சித்திர நடிப்பும் இணைந்து வருமாறு அந்தப் பாத்திரத்தை வடிவமைத்து ஜனகராஜிடமிருந்து சிறந்த நடிப்பை வாங்கிய இயக்குநர் வசந்த் பாராட்டுக்குரியவர்.
அச்சக உரிமையாளராக ‘அடைக்கலராஜ்’ என்கிற பாத்திரத்தில் நடித்திருந்தார் ஜனகராஜ். இவர் காண்கிற கனவுகள் பிறகு உண்மையிலேயே நடந்து விடும். ஆனால் என்ன... அவை பெரும்பாலும் துர்கனவுகளாக அமைந்து விடும். அதன அது குறித்து அச்சத்துடனும் பதட்டத்துடனும் புலம்பிக் கொண்டேயிருப்பார் ஜனகராஜ்.
அந்தக் கனவு உண்மையில் நடந்து விடாமல் இருப்பதற்காக சில உபாயங்களை கையாள்வார். ஆனால் அந்த உபாயங்கள்தான் அவரை சிக்கலுக்கு இட்டுச் சென்று கனவை உண்மையாக்கி விடும். இது தொடர்பான நகைச்சுவை டிராக்தான் இந்தப் படத்தில் சித்திரிக்கப்பட்டிருந்தது.
இந்த காமெடி டிராக்கின் பொதுத்தன்மையைக் கவனிக்கும் போது ஒரு பழைய கதை நினைவிற்கு வருகிறது. ‘கல்லுக்குள் இருக்கிற தேரைக்கும் உணவு படைக்கும் கருணையைக் கொண்டவன் கடவுள். மனிதர்களுக்கும் அவ்வாறே’ என்று ஓர் ஆத்திக நண்பர் சொல்கிறார். அதை மறுக்கிற நாத்திக நண்பர் ‘அப்படியெல்லாம் இல்லை. அதை பொய் என்று நான் நிரூபித்துக் காட்டுகிறேன்’ என்று சவால் விட்டபடி விதாண்டாவாதம் செய்கிறார்.
தன்னுடைய வாதத்தில் நிரூபிப்பதற்காக யாருமில்லாத வனாந்தரத்தில் போய் அமர்ந்து கொள்கிறார் நாத்திக நண்பர். ‘நான் இன்று முழுக்க பசியோடு இங்கு அமர்ந்திருக்கப் போகிறேன். யார் வந்து எனக்கு உணவு தருகிறார்கள் என்று பார்க்கலாம்’ என்பது அவரது திட்டம்.
அந்த வனத்தின் இன்னொரு புறத்தில் சில கள்வர்கள் பொருட்களை கொள்ளையடித்து விட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் அவர்களுக்கு ஒரு உணவுப் பொட்டலம் கிடைக்கிறது. நல்ல பசி வேறு. அதை எடுத்து ஒருவன் சாப்பிட முனையும் போது கள்வர்களின் தலைவன் தடுக்கிறான். ‘நம்மை கொல்வதற்காக இதில் யாராவது விஷம் கலந்திருக்கலாம். எனவே உணவை சோதித்துப் பார்த்து விட்டு பிறகு சாப்பிடலாம்’ என்று சொன்னபடி பொட்டலத்தை எடுத்துக் கொண்டு நடந்து வருகிறார்கள்.
அந்த வழியில் நம் நாத்திக நண்பர், ‘என்னை யாரும் சாப்பிட வைக்க முடியாது’ என்கிற வீம்போடு அமர்ந்திருக்கிறார். ‘அடேய்.. இதோ இங்கே ஒருவன் இருக்கிறான். பொட்டலத்தைத் திறந்து சிறிது உணவை இவனுக்குத் தருவோம். இவனுக்கு எதுவும் ஆகவில்லையென்றால் நாம் பகிர்ந்து உண்போம்’ என்று கள்வர்களின் தலைவன் ஆலோசனை சொல்ல மற்றவர்கள் உற்சாகத்துடன் சம்மதிக்கிறார்கள்.
கள்வர்கள் நாத்திக நண்பரை உணவு சாப்பிடச் சொல்லி மிரட்ட ‘ஐயா.. நான் ஒரு வாதத்தில் வெற்றி பெறுவதற்காக இங்கு தனிமையில் வந்து அமர்ந்திருக்கிறேன். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். என்னால் உணவை சாப்பிட முடியாது’ என்று அவர் கெஞ்சிப் பார்த்தாலும் கள்வர்கள் மசியவில்லை. “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு எங்களின் பசிதான் முக்கியம். நீ சாப்பிட்டு உயிரோடு இருக்கிறாயா என்று பார்த்தபிறகுதான் எங்களால் பசி தீர முடியும். ஒழுங்காக சாப்பிடு. இல்லையென்றால் குத்திக் கொன்று விடுவோம்” என்று மிரட்ட வேறு வழியில்லாமல் அந்த உணவை எடுத்து பரிதாபத்துடன் உண்கிறார் நாத்திகர். இப்படியாக தனது வாதத்தில் தோற்றுப் போகிறார்.
உலகில் எத்தனையோ மனிதர்கள் பசியால் இறந்திருக்கிறார்கள், இன்னமும் கூட சாப்பாடு கிடைக்காமல் எத்தனையோ பேர் அவதியுறுகிறார்களே என்கிற நடைமுறை புள்ளிவிவரத்துடன் இந்தக் கதையை பகுத்தறிவுவாதிகள் மறுக்கலாம். அதுவும் உண்மையே. சொல்ல வந்தது என்னவெனில் இந்தக் கதையில் இருக்கும் காமெடியான லாஜிக்தான், ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் ஜனகராஜ் பாத்திரத்திற்கும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்.
‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் பாதிப்பகுதி முடிந்தவுடன்தான் ஜனகராஜ் நமக்கு அறிமுகம் ஆவார். ‘அடைக்கலராஜ் அச்சகம்’ என்று போர்டு காட்டப்பட்டவுடன் தலையைக் கவிழ்ந்து அமர்ந்திருக்கும் அவர், நிமிர்ந்து மோட்டுவளையைப் பார்த்து புன்னகைத்து விட்டு அடுத்த கணமே முகம் சுருக்கி அழுகிற பாவனைக்கு மாறுவது பார்க்க நகைச்சுவையாக இருக்கும்.
போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் அடைக்கலத்தின் நண்பன், உற்சாகமான தொனியில் உள்ளே வந்து ‘ஏன் அழுவுறே.. ஷேம்.. ஷேம்.. பப்பி ஷேம்’ என்று கிண்டலடிப்பான். ‘பையனை ஸ்கூல்ல விட்டுட்டு வர்றியா?’ என்று அவனிடம் ஜனகராஜ் கேட்கும் கேள்வியில் நுட்பமான விஷயம் ஒளிந்துள்ளது. நாம் ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்து விட்டு அடுத்ததிற்கு நகரும் போது பழைய மனநிலையில் பாக்கி சற்று எஞ்சியிருக்கும்.
“ஹோட்டல்ல மாவு ஆட்டற மாதிரி கனவு வந்துதுடா.. அது நெஜமாயிடுமோன்னு பயமா இருக்கு.” என்று அடைக்கலம் கதறியழ...
“கை நிறைய காசு எடுத்துட்டு போ. சாப்பிடு. எப்படி அந்தக் கனவு உண்மையாகுதுன்னு பார்த்துடலாம்” என்று நண்பன் ஐடியா தர
“ஆமாம். டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம். அப்பத்தான் எனக்கும் கனவு மேல இருக்கிற பயம் போகும்”
என்று அந்த விபரீத முயற்சியில் இறங்குகிற அடைக்கலம், ஹோட்டல் கல்லாவில் இருக்கிற ஆசாமியிடம் சாப்பிடப் போவதற்கான உணவிற்கு முன்பணத்தைத் தர ‘சாப்பிட்டப்புறம் தாங்க’ என்று அவர் மறுத்து விடுவார்.
‘விதி வலியது’ என்கிற கோணலான முகத்துடன் ஹோட்டலுக்குள் செல்கிற அடைக்கலம், பேண்ட் பாக்கெட்டில் இருக்கிற பர்ஸை நிமிடத்திற்கு ஒரு முறை தொட்டுப் பார்த்தபடியே சாப்பிடுவார். ஆனால் ஒரு கட்டத்தில் பர்ஸ் இல்லாதது தெரிய, அடுத்த காட்சியில் மாவாட்டியபடி அமர்ந்திருப்பார்.
அந்தப் பர்ஸ் எப்படி காணாமல் போனது என்பதைக் காட்டாததுதான் இந்தக் காட்சியின் சுவாரசியமே. அது அவசியமில்லை. கனவு உண்மையாகிற காமெடிதான் முக்கியம். இந்தக் காட்சித்துண்டின் முத்தாய்ப்பாக ஒன்று நடக்கும்., அடைக்கலம் தவற விட்ட பர்ஸை கண்டெடுக்கும் ஒரு ஆசாமி, அடைக்கலம் மாவு அரைத்து முடிக்கும் வரை காத்திருந்து திருப்பித் தந்து அடி வாங்குவார். “பிஸியா இருந்தீங்களா.. அதான் வெயிட் பண்ணிட்டிருந்தேன்”
இந்தப் படத்தின் காமெடி டிராக்கில் இதே பாணியிலான நகைச்சுவைகள் தொடர்ந்தாலும், இதர காட்சிகளில் தனது திறமையான நடிப்பைத் தந்திருப்பார் ஜனகராஜ். சட்சட்டென மாறும் முகபாவங்கள், குறிப்பிட்ட வசனத்தை முந்தைய வசனத்தின் பாணியிலிருந்து உடனே மாற்றி வித்தியாசமான மாடுலேஷனில் பேசுவது, அதை வெளிப்படுத்த அவர் பின்பற்றும் உடல்மொழி என்று விதம் விதமாக வெளிப்படும் அவரது நடிப்பைக் கவனிப்பதே அப்படியொரு சுவாரசியமான அனுபவத்தைத் தரும். மத்தாப்பூ எரிவதைப் பார்ப்பது மாதிரி.
கேளடி கண்மணி திரைப்படத்தில், ‘சாரதா டீச்சர்’ என்கிற பாத்திரத்தில் நடித்திருந்தார் ராதிகா. சாரதா டீச்சரின் மீது அடைக்கலத்திற்கு உள்ளார்ந்த காதல் இருக்கும். அந்த உணர்வை அடைக்கலம் விதம் விதமாக வெளிப்படுத்தும் காட்சிகளும், ஒரு தலைக்காதலில் எதிர்கொள்ள வேண்டிய ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் முகபாவங்களும் அற்புதமாக இருக்கும்.
அடைக்கலத்தின் அச்சகத்தில் சாரதா வந்து காத்திருக்க, அவருக்குத் தெரியாமல் பின்னணியில் தலையைச் சீவிக் கொண்டு சட்டையை நீவிக் கொண்டு கம்பீரமான நடையில் வந்து அமர்வார் அடைக்கலம்.
“நான் கண்ட ஒரு கனவைப் பத்தி வேலை செய்யற பசங்க கிட்ட சொல்லிட்டிருந்தேன். சொன்னா கோச்சிக்கக்கூடாது. சொல்லட்டுமா?” என்கிற அடைக்கலம் “உங்களை கல்யாணம் பண்ற மாதிரி கனவு கண்டேங்க” என்று குழந்தையின் உற்சாகத்துடன் சட்டென்று சொல்லி விடுவார்.
கபகபவென்று சிரிக்கும் சாரதா டீச்சர், ‘நல்ல ஜோக்’ என்று அந்த உரையாடலை இடது கையால் புறந்தள்ளியவுடன் ஜனகராஜின் முகம் ஏமாற்றத்திற்கு மாறும்.
தனது நண்பன் ஏஆர்ஆர்-ஐ சாரதா டீச்சருக்கு பிடிக்கவில்லை என்பது அடைக்கலத்திற்கு உற்சாகமான தகவலாக இருக்கும். சாரதா விட்டுச் சென்ற கைக்குட்டையை எடுத்துக் கொண்டு “எத்தனை நாளா அவங்க கூட பழக்கம்?” என்று அதைக் கொஞ்சிய படி சட்டையில் வைத்துக் கொள்வார்.
தனது நண்பனை ‘பிடிக்கவில்லை’ என்று சாரதா டீச்சர் சொன்னது, பெண்களுக்கே உரித்தான நுட்பமான பாவனை என்று அடைக்கலம் அறியும் ஒரு தருணம் வரும். மிக அற்புதமான காட்சியது.
அச்சகத்திலிருந்து வீட்டுக்குப் புறப்படும் சாரதா, மழை பெய்து கொண்டிருப்பதால் வாசலில் காத்திருப்பார். குடை கொண்டு வருவதற்காக உள்ளே சென்று விடுவார் அடைக்கலம். அந்தச் சமயத்தில் சரியாக வரும் ஏஆர்ஆர், “வாங்க.. என் குடைல போகலாம்” என்று சாரதாவை அழைத்துச் சென்று விடுவார்.
இருவரும் ஒரே குடையில் நடந்து செல்வதை நிராசையான முகத்துடன் பரிதாபமாக அடைக்கலம் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியில் ஜனகராஜின் நடிப்பு அற்புதமாக இருக்கும். பின்னணியில் ஒலிக்கும் இளையராஜாவின் மென்மையான இசை, இந்தக் காட்சியின் துயரத்தை சரியாகப் பிரதிபலிக்கும்.
‘நான் காண்கிற கனவு எல்லாம் நிஜமாகிறதே’ என்று படம் பூராவும் கதறித் தீர்க்கிற அடைக்கலத்தின் முடிவும் அப்படியே நடந்து விடும். சாலையில் நடந்து வரும் போது மின்கம்பத்தில் மாட்டிக் கொண்டு படபடக்கும் ஒரு காற்றாடியை நிமிர்ந்து பார்ப்பார் அடைக்கலம்.
“வானத்துல பறக்கற காத்தாடியைப் பாருங்களேன். எவ்வளவு உற்சாகமா பறக்குது.. விசுக் விசுக்குன்னு வாலை வேற ஆட்டிக்கிட்டு.. ஆனா கரண்ட் கம்பத்துல மாட்டிக்கிட்ட காத்தாடியைப் பாருங்க.. ஒரு பறவை மாட்டிக்கிட்ட மாதிரி படபடன்னு தவிக்கும். என்னை யாராவது காப்பாத்துங்களேன்ற மாதிரியே எனக்குத் தோணும்.. உங்களுக்கும் அப்படித் தோணியிருக்கா?”
- என்று சாரதாவுடன் நடந்த பழைய உரையாடல் ஒன்று அடைக்கலத்தின் நினைவிற்கு அப்போது வரும். எனவே மின்கம்பத்தில் மீது ஏறி காற்றாடியை விடுவிக்கும் முயற்சியில் தன் உயிரையே இழந்து விடுவார் அடைக்கலம்.
“அவர் கண்ட கனவு எல்லாமே பலிச்சிருக்கு. ஆனா ஒண்ணு மட்டும் பலிக்கலை... ‘உங்களை கல்யாணம் பண்ற மாதிரி கனவு கண்டேன்..'னு அடிக்கடி சொல்வாருல்ல.. அது மட்டும் பொய்.. அப்படியாவது அப்படியொரு கனவு வந்து அது பலிச்சிடக்கூடாதான்னு எங்க கிட்ட அடிக்கடி சொல்வாரு” என்று அச்சக ஊழியராக இருக்கும் நபர் (விவேக்) சாரதா டீச்சரிடம் சொல்லும் காட்சி நெகிழ்வானதொன்று.
நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி, ஒரு பெண்ணிடம் உள்ள தீராத காதலை மறைமுகமாகவும் நேரடியாகவும் சொல்லி அந்த ஏமாற்றத்தையும் நிராசையையும் விழுங்கிக் கொள்ளும் ஒரு பரிதாபமான காதலனின் சித்திரத்தை ‘அடைக்கலம்’ என்பதின் மூலம் வெளிப்படுத்திய ஜனகராஜ் பாத்திரத்தை மறக்கவே முடியாது.