மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | கண்டிப்பு, கறார், கருணை, கரிசனம்... ‘தினந்தோறும்’ ரேணுகா!

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘தினந்தோறும்’ திரைப்படத்தில் ‘ரேணுகா’ ஏற்று நடித்திருந்த ‘சந்திராக்கா’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
ரேணுகா
ரேணுகாபுதிய தலைமுறை
Published on

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

தமிழ் சினிமாவில், துறுதுறுவென துடுக்குத்தனமாகப் பேசும் பெண் பாத்திரங்கள் யாரென்று யோசித்தால் அந்தப் பட்டியலில் தவறாமல் நினைவுக்கு வருபவர் நடிகை ரேணுகா. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரேணுகா, தந்தையின் மறைவுக்குப் பிறகு பொருளீட்டும் நெருக்கடியால் சென்னைக்கு வந்தார். கோமல் சுவாமிநாதனின் நாடகக்குழுவில் இடம் கிடைத்தது. பிறகு டி.ராஜேந்தரின் சில திரைப்படங்களில் நடித்தார். கணிசமான மலையாளத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை ரேணுகா
நடிகை ரேணுகா

பாலசந்தரின் இயக்கத்தில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த போதுதான் ரேணுகாவின் நடிப்பு கூடுதல் பிரகாசம் அடைந்தது. தமிழில் பிரபலமான முகமாகவும் ஆனார். இதனால் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது. 

துறுதுறுவென நடிக்கும் பாத்திரங்களில் அசத்தும் ரேணுகா

பாலசந்தரின் பட்டறையில் பயின்றதால், தான் நடித்த பல கதாபாத்திரங்களை ரேணுகாவால் திறம்பட கையாள முடிந்தது. பல்வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் துறுதுறு பாத்திரங்களில் அவரது நடிப்பின் முத்திரை அழுத்தமாகப் பதிந்தது. அந்த வரிசையில் நாகராஜ் இயக்கிய ‘தினந்தோறும்’ படத்தில் ‘சந்திரா’ என்கிற பாத்திரத்தில் ரேணுகாவின் நடிப்பு மறக்க முடியாததாக அமைந்திருந்தது. 

‘இப்படியொரு அக்கா நமக்கு இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று ஒவ்வொரு இளைஞனும் இளம்பெண்ணும் ஏங்குமளவிற்கு பாசம், கிண்டல், நையாண்டி, கண்டிப்பு, அறிவுரை என்று அனைத்தையும் ஹீரோ முரளிக்கு  கலந்து தரும் பாத்திரத்தில் ரேணுகாவின் நடிப்பு இயல்பாக அமைந்திருந்தது. 

ரேணுகா
ரேணுகா

இந்தப் படத்தில் முரளிக்கு டெம்ப்ளேட்தனமானபாத்திரம். அதாவது தன்னுடைய காதலைச் சொல்வதற்கு மிகவும் தயங்கி மறுகுவார். ஆனால் இத்தகைய குணாதிசயம் கொண்ட இளைஞர்கள் தமிழகத்தில் ஏராளம் என்பதால் சலிக்காமல் அவரது பயணம் தொடர்ந்தது. ஹீரோயின் சுவலட்சுமி மீது முரளிக்கு காவியத்தனமான காதல். ஆனால் வெளிப்படுத்துவதற்கு தயக்கம், அச்சம். எங்கே தனது காதல் நிராகரிக்கப்பட்டு விடுமோ என்று பயப்படுவார். எனவே வீட்டருகே வசிக்கும் ‘சந்திராக்கா’வின் (ரேணுகா) உதவியை அடிக்கடி நாடுவார். 

ரேணுகா
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்: ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ | பாசப்போராட்டத்தில் ரகுவரன்!

சந்திராக்கா - கண்டிப்பும் கரிசனமும் கலந்த கவிதை

ரேணுகாவிற்கு முரளியின் மீது நிறைய அன்பு உண்டு. அதே சமயத்தில் அவனுடைய கோழைத்தனம் மீது காட்டமான விமர்சனமும் உண்டு. எனவே அன்பையும் கோபத்தையும் சரிவிகிதமான கலவையில் வெளிப்படுத்தும் பாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை கச்சிதமாக தந்திருந்தார் ரேணுகா. இதைப் போலவே ஹீரோயின் சுவலட்சுமியிடமும் ரேணுகாவிற்கு நெருக்கமான நட்பு உண்டு. அந்த உரிமையில் ‘சந்திராக்கா’ செய்யும் விஷயங்கள் அத்தனை இயல்பாக இருக்கும். 

சுவலட்சுமி, ரேணுகா
சுவலட்சுமி, ரேணுகா

சந்திரா அக்காவின் இன்ட்ரோ காட்சியிலேயே அவரது குணாதிசயத்தை பதிவு செய்திருப்பார் இயக்குநர். சந்திராவின் கணவர் துபாயில் பணிபுரிவதால் ‘துபாய்க்காரம்மா’ என்று போஸ்ட்மேன் அழைக்க “எத்தனை முறை சொல்லியிருக்கேன்.. சந்திரான்னு கூப்பிடு” என்று அதை மறுப்பார். மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போஸ்ட்மேனின் பிரச்சினையை சுவலட்சுமியின் அம்மாவிடம் சொல்லி ‘என்னன்னு விசாரியுங்க’ என்பார். பின்பு தானும் போஸ்ட்மேனுக்கு அறிவுரை சொல்வார். அடுத்தவர் வாழ்க்கை மீது அக்கறை கொண்ட கேரக்டர் என்பது ஆரம்பத்திலேயே பார்வையாளர்களுக்கு உணர்த்தப்பட்டு விடும். 

ரேணுகா
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | கடைசி விவசாயி | நீதிபதி ‘மங்கையரக்கரசி’யாக ரெய்ச்சல் ரபேக்கா

ஓர் இளம்பெண்ணின் ரொமான்ஸ் கதையை கிளுகிளுப்பாக விசாரித்துக் கொண்டே சாலையில் நடந்து செல்வார் ரேணுகா.  பின்னால் தயங்கித் தயங்கி வந்து கொண்டிருப்பார் முரளி. ஆனால் அதைப் பார்த்தும் பார்க்காதது போல் ‘நீ சொல்லு’ என்று அந்தப் பெண்ணிடம் வம்பாக பேச்சு வளர்ப்பார். “அந்த அண்ணனைப் பார்த்தா பாவமா இருக்கு. நீங்க பேசுங்க” என்று அந்தப் பெண்ணே உரையாடலைத் துண்டிக்க முயல்வாள். ‘சரி.. நீ கௌம்பு’ என்று அந்தப் பெண்ணை கறாராக அனுப்பி விட்டு ‘என்னடா உன் பிரச்சினை?’ என்கிற மாதிரி முரளியைப் பார்ப்பார். 

சுவலட்சுமி, முரளி
சுவலட்சுமி, முரளி

காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் முரளியை காய்ச்சியெடுக்கும் ரேணுகா

சுவலட்சுமி ஊருக்கு வருவது குறித்த தகவலை அறிவதற்காக துடியாகத் துடித்துக் கொண்டிருப்பார் முரளி. “அந்தப் பொண்ணு கிட்ட லவ்வை சொல்ல தைரியம் கிடையாது. இப்படி முடியைக் கோதிக்கிட்டே நின்னா என்ன அர்த்தம்?” என்று முரளியைப் போட்டு காய்ச்சுவார் ரேணுகா. “காத்திருக்கதுல கூட ஒரு சுகம் இருக்கு. திங்கட்கிழமை பார்த்து செவ்வாய்க்கிழமை சொல்றது என்னோட காதல் கிடையாது” என்று முரளி உருக்கமாக வசனம் பேச, அதை நெகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருப்பார் ரேணுகா. 

தனக்கு வேண்டிய தகவலைப் பெற்றுக் கொண்டவுடன் சந்தோஷமாகச் சிரிக்கும் முரளியிடம் “அடக்கடவுளே! கல்யாணம் முடிஞ்சு பத்து வருஷம் கழிச்சு பொண்டாட்டியைப் பார்க்கப் போற மாதிரில்ல பல்லைக் காமிக்கான்” என்று வியக்கும் ரேணுகா, இந்தப் படத்தில் ‘திருநவேலி’ வட்டார வழக்கை சிறப்பாகப் பேசி நடித்திருப்பார். 

சுவலட்சுமி, முரளி
சுவலட்சுமி, முரளி

காதலி பற்றிய தகவலுக்காக தன்னைத் தேடி வரும் முரளியிடம் “எனக்குத் தெரியும்.. நீ வருவேன்னு’ என்று ரேணுகா நக்கலடிக்க “நீ என்னதான் கிண்டல் பண்ணாலும் உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும். நானும் பூமாவும் சேர்ந்து வாழணும்ன்னு நீ மனசார நெனக்கறே” என்று முரளி ஃபீலாகி சொன்னவுடன் கிண்டல் மறைந்து நெகிழ்வான முகபாவத்தைத் தருவார் ரேணுகா. 

ரேணுகா
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | பூரணத்துவமான அக்கா ‘பூர்ணி’யாக... ‘அலைபாயுதே’ சொர்ணமால்யா!

இரண்டு பெண்களுக்கு இடையேயான நெருக்கமான நட்பு

ஊரிலிருந்து வரும் சுவலட்சுமி வீட்டில் பையைத் தூக்கிப் போட்டு விட்டு முதலில் தேடி ஓடுவது ரேணுகாவைப் பார்ப்பதற்காகத்தான். கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் ரேணுகாவின் இடுப்பில் சுவலட்சுமி திடீரென்று கிள்ள அலறியடித்து குடத்தை கிணற்றுக்குள் போட்டு விடுவார் ரேணுகா. “அண்ணன்.. வேற ஊர்ல இல்ல. ஏக்கத்துல இளைச்சுப் போயிருப்பன்னு பார்த்தா.. சும்மா கும்முன்னு இருக்க” என்று சுவலட்சுமி கிண்டல் செய்ய, அவரை அடிப்பதற்காக வேடிக்கையாக பொருளைத் தேடுவார் ரேணுகா. இருவருக்குமான நட்பின் நெருக்கம் இந்தக் காட்சியில் சுவாரசியமாகப் பதிவாகியிருக்கும். 

சுவலட்சுமி, ரேணுகா
சுவலட்சுமி, ரேணுகா

தான் எழுதிய காதல் கடிதத்தை சுவலட்சுமியிடம் தருவதற்கு தயங்கி, ரேணுகாவை விட்டு தரச் சொல்வார் முரளி. “இங்காரு.. இவரு ஒரு பொண்ணை லவ் பண்ணுவாராம். நான் போய் லெட்டரைக் கொடுக்கணுமாம்.. கொழுப்புதானே இது?.. கூறு கெட்டவனே..” என்று ஆரம்பித்து சரமாரியாக திட்டி விட்டு “பூமா அருவிக்கரைலதான் இருக்கா.. நீயே கொண்டு போய் கொடு” என்று வழியும் காட்டுவார் ரேணுகா. 

நண்பர்களிடம் இரவல் கவிதை வாங்கி தத்துப்பித்தென்று காதல் கடிதம் கொண்டு வந்திருக்கும் முரளியை எரிச்சலுடன் பார்க்கும் சுவலட்சுமி, ஒவ்வொரு பேப்பரையும் அருவியில் தூக்கிப் போட்டு விட்டு சென்று விடுவார். அவ்வளவுதான். சாக்லெட்டைப் பிடுங்கிக் கொண்ட பச்சைக் குழந்தை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு மனப்புழுக்கத்தில் தவிப்பார் முரளி. அதைப் பார்த்து ரேணுகாவிற்கே மனது இளகி விடும். 

சுவலட்சுமி, முரளி
சுவலட்சுமி, முரளி

காதலுக்கு தூது செல்லும் சந்திராக்கா

கோபத்துடன் சுவலட்சுமியை தேடிச் சென்று “நீ  உன் மனசுல என்னதான் நெனச்சிட்டு இருக்கே.. உன்னை விட்டா ஊர்ல வேற ஒரு பொண்ணே இல்லைன்னா?” என்று கண்டிப்புடன் கேட்க “லெட்டரா அது.. லைப் ஈஸ் எ டிராமாவாம்.. ஐ வாண்ட் பூமாவாம்.. உன் இதயத்துல ஓரமாவாவது இடம் கொடுன்னு.. ஒரே பேத்தல். லவ் பண்ணலாம்ன்னு ஒரு பொண்ணுக்கு ஐடியா இருந்தா கூட இந்த மாதிரி லெட்டரைப் பார்த்தா ஓடிடும்” என்று கிண்டலடிப்பார் சுவலட்சுமி. 

ரேணுகா
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்| ’மலர்விழி’ ஆக ’இறைவி’-ல் மின்னலென வெட்டிச் சென்ற பூஜா தேவரியா!

“அடிச்சேன்னா பாரு.. ஃபிரெண்டு எழுதிக் கொடுத்தா இவன் என்ன பண்ணுவான். அது போகட்டும். உனக்கு அவனைப் பிடிச்சிருக்கா.. இல்லையா.. ஒழுங்கா பதில் சொல்லு” என்று ரேணுகா கறாராகக் கேட்க, ‘பிடிச்சிருக்கு’ என்று மெல்லிய நாணத்துடன்  சுவலட்சுமி பதில் சொல்ல, என்னமோ தன்னுடைய காதலே சக்ஸஸ் ஆனது போல மகிழ்வார் ரேணுகா.

சுவலட்சுமி, ரேணுகா
சுவலட்சுமி, ரேணுகா

சுவலட்சுமியின் காதல் அவருடைய வீட்டிற்குத் தெரிந்து விடும். கோபக்காரரான அப்பா, அதை கடுமையாக ஆட்சேபிக்க, “ரோட்ல போகும் போது ஒருத்தர் வண்டில லைட் எரிஞ்சா. அதைக் கூப்பிட்டு சொல்றதில்லையா.. அதுக்காக அவருக்கும் நமக்கும் பத்து வருஷ பழக்கம்ன்னு ஆயிடுமா. அப்படித்தான் இதுவும். நான் சாதாரணமாத்தான் அவன் கூட பேசிட்டு இருந்தேன். நிச்சயம் லவ்லெவ்லாம் கிடையாது. அப்படி ஒண்ணு வந்தா அதை சொல்றதுக்கான துணிச்சல் என்னிடம் இருக்கு” என்று சவடாலாகப் பேசி தந்தையின் வாயை அடைத்து விடுவார் சுவலட்சுமி. அதுவொரு அதிர்ச்சி வைத்தியம். அப்படிப் பேசினால்தான்  அப்போதைக்கு முரட்டுத்தனமான அப்பாவை சமாளிக்க முடியும் என்பது சுவலட்சுமியின் புத்திசாலித்தனமான திட்டம்.

கலவையான உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கும் ரேணுகா

ஆனால் இதைக் கேட்டு ரேணுகா அதிர்ச்சியடைந்து விடுவார். இந்த விஷயம் முரளிக்குத் தெரிந்தவுடன் அவரும் வழக்கம் போல் நெக்குருகி, கண்கலங்கி, நெஞ்சடைத்து மூச்சுத் திணறுவது போல் தவிப்பார். “ஏண்டி.. அவன் மேல லவ் இருக்குன்னு சொல்லிட்டு, வீட்ல கேக்கறப்ப இல்லைன்னு ஏன் சொன்னே.. இதுல எது உண்மை?” என்று சுவலட்சுமியிடம் ரேணுகா கறாராக கேட்க “இது எங்க ரெண்டு பேர் நடுவுல இருக்கிற பிரச்சினை. குறுக்கே நுழையறதுக்கு நீ யாரு?” என்று சுவலட்சுமி கேட்டு விட அடிபட்ட முகத்துடன் அங்கிருந்து விலகி சென்று விடுவார் ரேணுகா.

சுவலட்சுமி, ரேணுகா
சுவலட்சுமி, ரேணுகா

சுவலட்சுமி இப்படிச் செய்ததும் ஒரு டெக்னிக். அப்பாவிற்குத் தந்ததைப் போலவே காதலனுக்கும் தந்த அதிர்ச்சி வைத்தியம். சரியான வேலையைத் தேடிப் போகாமல், அதற்கான துணிச்சல் இல்லாமல் தன்னம்பிக்கையை இழந்து காதலின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் முரளியை முரட்டு வைத்தியம் மூலம் மாற்ற நினைக்கும் சுவலட்சுமியின் பிளான் அது. 

ரேணுகா
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்|'மனதில் உறுதி வேண்டும்'- எஸ்.பி.பி ஏற்று நடித்த Dr.அர்த்தநாரி!

வீட்டில்  காதலை மறைத்ததற்கான காரணத்தை ஆணித்தரமாக முரளியிடம் விளக்கும் சுவலட்சுமி, அவனுடைய முன்னேற்றத்தை உசுப்பி விடுவதற்காக ஒரு நீளமாக லெக்சரை தருவார். பிறகு ரேணுகாவின் வீட்டிற்கு வருவார். ‘நடுவுல நீ யாரு?’ என்று கேட்டதால் ரேணுகா கோபித்துக் கொண்டு முகம் திருப்பிக் கொள்வார். “உன் பையன் தப்பு செஞ்சிருந்தா கூட இப்படித்தான் கை கழுவி விட்டிருப்பியா.. நான் தெரியாம பேசிட்டேன். மன்னிச்சுடு” என்று மடியில் படுத்துக் கொண்டு கதறியழும் சுவலட்சுமியை தாய்மையுடன் அரவணைத்துக் கொள்வார் ரேணுகா. 

சுவலட்சுமி, ரேணுகா
சுவலட்சுமி, ரேணுகா

கண்டிப்பு, கறார்த்தனம், கருணை, கரிசனம், பாசம் ஆகிய கலவையான உணர்வுகளுடன் காதலர்களுக்கு நடுவில் தூது போகும் ‘சந்திராக்கா’ பாத்திரத்தில் சிறப்பாக நடித்து அதை மறக்க முடியாதபடி செய்துவிட்டார் ரேணுகா. 

ரேணுகா
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | அபூர்வ ராகங்கள் | கே.பி-யின் ‘ஜென்டில்மேன்’ ரஜினிகாந்த்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com