சிலபல வருடங்களுக்குப் பிறகு ஒரு திரைப்படத்தை எவ்வாறு நினைவுகூர்கிறோம்? முதலில் அதன் பாடல்கள். பிறகு ஹீரோ, காமெடி டிராக், பஞ்ச் வசனங்கள் என்று இவற்றின் வழியாகத்தான் ஒரு பழைய திரைப்படத்தை நினைவுப்படுத்திக் கொள்கிறோம்.
பிரதான பாத்திரங்களைத் தாண்டி ஒரு திரைப்படத்திற்கு துணைக் கதாபாத்திரங்களும் முக்கியமானவை. பல இயக்குநர்கள், இந்த துணைப் பாத்திரங்களை அவுட் ஆஃப் போகஸில் சம்பிரதாயமாக உருவாக்கி வைத்திருப்பார்கள். அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் போல இவர்கள் நம்முடைய நினைவிலேயே இருக்க மாட்டார்கள்.
ஆனால் ஒரு சில இயக்குநர்கள் துணைப் பாத்திரங்களும் பார்வையாளர்களின் நினைவில் வலிமையாக பதியும் படியாக அவற்றை மெனக்கெட்டு வடிமைப்பார்கள். உதாரணத்திற்கு பாலசந்தரின் திரைப்படங்களைக் கவனித்தால் ஒவ்வொரு சிறிய பாத்திரத்திற்கும் பிரத்யேகமான குணாதிசயத்தைத் தந்து அவற்றை பார்வையாளர்களால் மறக்க முடியாதபடி செய்து விடுவார்.
இந்தக் கட்டுரைத் தொடரில் அவ்வாறு நம்மால் மறக்கவே முடியாத, சிறந்த கதாபாத்திரங்களைப் பற்றி பார்க்கப் போகிறோம்.
தமிழ் சினிமாவில் ஆணாதிக்க குணாதிசயம் கொண்ட கதாபாத்திரம் என்றால் அதை ஒருவகையான டெம்ப்ளேட் பாணியில்தான் வடிவமைப்பார்கள். டிசைன் டிசைனாக மனைவியைக் கொடுமைப்படுத்தும் கணவன் பாத்திரமாகவே அது பெரும்பாலும் இருக்கும். ‘புரியாத புதிர்’ ரகுவரன், ‘கல்கி’ பிரகாஷ்ராஜ் என்று வரிசையாக பல கேரக்ட்டர்களை இப்படி நினைவுகூர முடியும். ஏன், பாலசந்தரே ‘அவர்கள்’ திரைப்படத்தில் ‘மிஸ்டர். ராமநாதன்’ என்று ரஜினிகாந்த்தை வைத்து ஒரு கொடுமைக்கார கணவனை சித்தரித்திருந்தார்.
ஆனால் இதே ரஜினிகாந்த், ஓர் ஆணாதிக்கவாதி பாத்திரத்தை வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் கையாண்ட முக்கியமான திரைப்படம் ஒன்றுண்டு. ‘அவள் அப்படித்தான்’. தமிழ் சினிமா வரிசையிலேயே ஒரு Male Chauvinist கேரக்ட்டரை இத்தனை ரகளையாக கையாள முடியும் என்பதற்கான உதாரணம் ‘தியாகு’ பாத்திரம். ரஜினியின் நடிப்பு அருமை என்றாலும் படத்தின் இயக்குநரான ருத்ரைய்யாவையும் திரைக்கதையில் பங்குபெற்ற எழுத்தாளர்கள் வண்ணநிலவன், அனந்து, சோமசுந்தரேஸ்வர் (பிற்பாடு இயக்குநர் கே.ராஜேஸ்வர்) ஆகியோரையும் பிரத்யேகமாக பாராட்ட வேண்டும்.
நெற்றியில் எப்போதும் பட்டையாக விபூதி, வாயில் புகையும் சிகரெட், போதையேறினால் விஸ்கி மீது சத்தியம் செய்து ‘உண்மை’ மட்டுமே பேசும் நற்குணம், பெண்களைப் பற்றி டிசைன் டிசைனாக வரையறை செய்வது என்று அப்பட்டமான ஆணாதிக்கத்தனம் கொண்ட கேரக்ட்டரை சுவாரசியமாக கையாண்டிருப்பார் ரஜினி. இந்தப் படத்தில் அவருடைய தோற்றமும் சினிமாவிற்கான ஒப்பனை ஏதுமின்றி மிக இயல்பாக இருக்கும். ‘அய்யோ.. இந்த மாதிரி ரஜினியை எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சே’ என்று ஏங்குமளவிற்கு எவ்வித மெனக்கெடலும் அல்லாத அநாயசமான நடிப்பு. இவரும் கமல்ஹாசனும் உரையாடும் காட்சிகளைப் பார்த்தால் படப்பிடிப்பு மாதிரியே இல்லாமல் இரு நெருக்கமான நண்பர்கள் பேசிக் கொள்ளும் அந்தரங்கமான தருணங்கள் மாதிரியே இருக்கும்.
‘டேய் மாப்ள.’ என்று ஆரம்பித்து விதம் விதமான விபரீதமான உபதேசங்களை கமலுக்குச் சொல்வார் ரஜினி. “இந்த உலகத்துலயே ரெண்டு விஷயங்க முக்கியம்” என்று அனைத்தையும் இரண்டே கேட்டகிரியில் அடக்கி விடுவது தியாகு கேரக்ட்டரின் ஸ்டைல். ‘பொம்பளைங்களும் அரசியல்வாதிகளும் ஒண்ணு. ரொம்ப டேஞ்சர்மா.. தங்களோட காரியம்தான் முக்கியம்ன்னு கடைசி வரை நெனப்பாங்க’ என்று துவங்கி பல தியரிகளை அள்ளி விடுவார். “சரி விடு.. உனக்கு பொம்பளைங்கன்னா பிடிக்காது..” என்று ஒரு காட்சியில் கமல் சொல்ல “அய்யோ.. யாரும்மா சொன்னது.. ரொம்ப பிடிக்கும்மா.. அதிலும் சின்ன வயசுன்னா.. ரொம்பவே பிடிக்கும்” என்று முகத்தில் பெருமிதம் வழியச் சொல்வார் ரஜினி.
பெண்களை முற்போக்கு பார்வையிலும் அனுதாபத்துடனும் அணுகும் கேரக்ட்டர் கமலுடையது. (அருண்) தன்னுடைய வாழ்க்கையில் கெட்ட ஆண்களையே பார்த்து பார்த்து நொந்து போனவர் ஸ்ரீபிரியா. (மஞ்சு). தியாகு பாத்திரமோ இன்னொரு எதிர்முனையில் இயங்கும். ஸ்ரீபிரியாவை கமலுக்கு அறிமுகம் செய்து வைப்பது ரஜினிதான். கமல் எடுக்கும் டாக்குமெண்டரி படத்திற்கு உதவி செய்ய ஸ்ரீபிரியாவை அறிமுகப்படுத்துவார். பிறகு கமலை சந்திக்க நேரும் போதெல்லாம் “எப்படி மஞ்சு.. நல்லா உதவி பண்றாளா.. நல்லா.. ஒத்துழைக்கறாளா?’ என்று இரட்டை அர்த்தத்தில் ரஜினி கேட்பதைப் பார்த்து கமல் முகம் சுளிப்பார். என்றாலும் நண்பன் என்பதால் கோபித்துக் கொள்ள மாட்டார்.
“இந்த மஞ்சு இருக்காளே.. ரொம்ப குழப்பமான கேரக்ட்டர். ரொம்ப டேஞ்சர்மா.. எந்தப் பொண்ணுக்கும் ரெண்டு வெறி இருக்கக்கூடாது. தன் காலில நிக்கணும்ன்ற வீம்பு இருக்கக்கூடாது. பெண்கள் எப்போதுமே ஆண்களைச் சார்ந்தவங்கதான்” என்று மஞ்சுவை முன்னிறுத்தி தன் ஆணாதிக்க மனோபாவத்தை டிசைன் டிசைனாக வெளிப்படுத்துவார் ரஜினி. “இல்லப்பா.. அவங்க மனசுல ஒரு வேதனை இருக்கு” என்று கமல் அனுதாபத்துடன் சொன்னவுடன் “டேய். மச்சான்.. . நீ சின்னப் பையன்.. உலகம் தெரியாது” என்று சிகரெட்டை ஊதிக் கொண்டே ரஜினி சொல்லும் உபதேசங்கள் ஒவ்வொன்றும் அநியாயம் என்றாலும் பார்க்கவே ரகளையாக இருக்கும்.
தியாகுவாக ரஜினி ஏற்றிருப்பது எதிர்மறையான பாத்திரம்தான். ஆனால் அந்தக் கேரக்ட்டரையும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி செய்துவிடுவதுதான் ஒரு நடிகனின் அசாதாரணமான திறமை. எம்.ஆர்.ராதா, சத்யராஜ் என்று ஒரு சிலர்தான் வில்லன் பாத்திரத்தையும் பார்வையாளர்கள் ரசிக்கும்படியாக கையாண்டுள்ளார்கள். அவர்களுக்காகவே தனியான ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துள்ளார்கள். இந்த வரிசையில் ரஜினி முக்கியமானவர். அவருடைய வில்லன் நடிப்பிற்கு இன்று வரையிலும் வரவேற்பிருக்கிறது.
‘அவள் அப்படித்தான்’ படத்தில் ஒரு சுவாரசியமான சீன் இருக்கிறது. ஸ்ரீபிரியாவுடன் தனியாக இருக்கும் ஒரு சந்தர்ப்பம் அமையும் போது, ஸ்ரீபிரியாவும் ஒத்துழைப்பது போல் பாவனை செய்வதால் அவர் தோள் மீது கை போடுவார் ரஜினி. தன்னைப் பற்றி கமலிடம் பல்வேறு புறணி பேசுவதை அறிந்திருக்கும் ஸ்ரீபிரியா, ரஜினி அருகில் வந்தவுடன் ‘அவளுக்குத் தேவை ஒரு ஆம்பளை.. இப்படித்தானே நீ ஊர் பூரா சொல்லிக்கிட்டு திரியறே’ என்று முறைப்பாக சொன்னவுடன் ‘என்னடா.. இது கதை வேற மாதிரி போகுது’ என்று ரஜினி யோசித்துக் கொண்டே தயங்குவார். அதற்குள் ரஜினியின் கன்னத்தில் பளார் என்று அறையும் ஸ்ரீபிரியா, கோபத்தில் கத்த “நான் கம்பெனி எம்.டிம்மா.. கத்தி ஊரைக் கூட்டாதே” என்று பயத்தில் பம்மும் ரஜினியின் நடிப்பு காமெடியாக இருக்கும்.
இந்த சீன் இத்தோடு முடிவதில்லை. மறுநாள் அலுவலகத்திற்கு ஸ்ரீபிரியா வரும் போது வார இதழில் வந்த ஒரு ஜோக்கைப் படித்து விட்டு சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருப்பார் ரஜினி. அது பெண்களை மலினப்படுத்தும் ஜோக்தான். ஸ்ரீபிரியா எந்தவொரு சலனமும் இல்லாமல் பார்க்க, சட்டென்று சிரிப்பை நிறுத்தும் ரஜினி “ஓ.. நீ நேத்து நடந்ததைப் பத்தி யோசிக்கிறியா.. தனியா இருக்கற பொண்ணு கிட்ட ஒரு ஆம்பளை எப்படி நடந்துப்பானா.. அப்படித்தான் நான் நடந்துக்கிட்டேன். சுயமரியாதையுள்ள உள்ள பொண்ணு.. தன்மானம் உள்ள பொண்ணு.. எப்படி நடந்துப்பாளோ.. அப்படித்தான் நீயும் நடந்துக்கிட்டே. ரெண்டுத்துக்கும் சரியாப் போச்சு.. லீவ் இட்’ என்று ஒன்றுமே நடக்காதது போல அந்தச் சம்பவத்தை உதறி விட்டு ரஜினி பேசும் நடிப்பு அருமையாக இருக்கும்.
தன்னை மிகவும் மதிப்புடன் நடத்தும் கமலை வார்த்தைகளால் குதறிக் கொண்டேயிருப்பார், ஸ்ரீபிரியா. ஆனால் பெண்கள் குறித்து தொடர்ந்து மலினமாகவே பேசும் ரஜினியை அவ்வளவாக கண்டுகொள்ளவே மாட்டார். Known devil என்பது போல ‘இவனைப் பத்திதான் தெரியுமே’ என்பது மாதிரிதான் ஸ்ரீபிரியாவின் அணுகுமுறை இருக்கும்.
‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் நாடகத்தில் நடித்த அனுபவத்தை ரஜினி பகிர்ந்து கொண்டார். துரியோதனன் பாத்திரத்தை மற்றவர்கள் வழக்கமான முறையில் கையாண்ட போது, இவர் மட்டும் வித்தியாசமாகவும் ஸ்டைலாகவும் மாற்றி நடித்த போது மக்கள் ரசித்து வரவேற்றதைக் குறிப்பிட்டிருப்பார். ரஜினியின் ஆரம்பக் கால படங்களைக் கவனித்தால் ‘தான் வித்தியாசமாக கவனிக்கப்பட்டே ஆக வேண்டும்’ என்பதற்காக ரஜினி பல அசைவுகளை செய்து கொண்டேயிருப்பதைப் பார்க்க முடியும்.
கைகளை வேகமாக பயன்படுத்துவது, தலை முடியைக் கலைத்துக் கோதுவது, படிக்கட்டில் சற்று சாய்வான கோணத்தில் இறங்குவது, பக்கத்தில் இருப்பவரின் சட்டையில் இருந்து தீக்குச்சியை கிழித்து நெருப்பு உண்டாக்குவது என்று பல விஷயங்களைச் செய்து கொண்டேயிருப்பார். இவற்றில் பல விஷயங்கள் கிம்மிக்ஸ்ஸாக கருதப்பட்டது. ரஜினியின் வேகமான தமிழ் உச்சரிப்பு ஆரம்பக் காலத்தில் கிண்டலடிக்கப்பட்டது. ஆனால் அதுவேதான் அவரது ஸ்டார் அந்தஸ்திற்கு ஆதாரமாக அமைந்தது. “என்னமோ வித்தியாசமா செய்யறாம்ப்பா.. இவன்.. நல்லாயிருக்கு’ என்று இளைஞர்களை எண்ண வைத்தார். அதுதான் ரஜினிகாந்த்தின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமான விஷயம்.
‘அவள் அப்படித்தான்’ தியாகு பாத்திரத்தில் இம்மாதிரியான கவனஈர்ப்பு தந்திரங்கள் கூட எதுவும் இருக்காது. ஆனால் ஒரு கேரக்ட்டருக்கு அவசியமான உடல்மொழியை, வசன உச்சரிப்பை, நடிப்பை எவ்வாறு நிகழ்த்துவது என்பதற்கு இந்தப் பாத்திரம் மிகச் சிறந்த உதாரணம்.
சிறந்த தமிழ் சினிமாக்களின் வரிசையை கறாராக பட்டியலிட்டால் அதில் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் உறுதியாக இடம்பெறும். அப்படியொரு உன்னதமான படம். அதில் கமல் மற்றும் ஸ்ரீபிரியாவின் நடிப்பு அருமையாக இருந்தாலும் தன்னுடைய ஏரியாவில் சொல்லியடித்த ‘தியாகு’ கேரக்ட்டர் எப்போதுமே மறக்க முடியாத முன்னுதாரணம்.
(அடுத்த கட்டுரையில் இன்னொரு சிறந்த துணை நடிகரைப் பற்றி பார்ப்போம்)