“அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்து மக்கள்தான் சொல்ல வேண்டும்!”- விஷால்!
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், “ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் அவர்களை பராமரித்து வரும் கன்னியாஸ்திரிகளிடம் வாழ்த்து பெறுவது, கடவுள் நேரில் வந்து வாழ்த்துவது போன்ற ஒரு உணர்வை தருகிறது” என்றார்.
தொடர்ந்து அவரிடம் தேசிய விருது தேர்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு, “4 பேர் அமர்ந்து கொண்டு, விருதாளர்களை தேர்வு செய்வதிலெல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள், ரசிகர்கள் அளிக்கும் ஆதரவே மகத்தான விருது” என்றார்.
பின் விஜய் அரசியல் நகர்வு குறித்தும், சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பின்னுள்ள சர்ச்சை குறித்தும் பேசிய அவர், “நான் விஜய் ரசிகன். விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன். சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது அவருக்கு (ரஜினிகாந்த்) 45 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் இந்த வயதிலும் அவர் திரைத்துறையில் சாதனை படைத்து வருகிறார். மக்களை சந்தோசப்படுத்தி வருகிறார்” என்றார்.
பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அதை மக்கள்தான் சொல்ல வேண்டும். நான் தொடர்ந்து படப்பிடிப்பில் இருப்பதால் அதுபற்றி எனக்கு தெரியாது” என்றார்.