நடிகர் விஜய் தன் 49வது பிறந்தநாளை ஜூன் 22ம் தேதி கொண்டாடவிருக்கிறார். இதனை முன்னிட்டு, விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படம் சம்பந்தமாக அடுத்தடுத்து வரும் அப்டேட்கள் ஒருபக்கம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது என்றால், பட்டினி தினத்தில் உணவு, தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது போன்ற நடவடிக்கைகளால், அரசியல் களத்தில் விஜய் இறங்கப்போகிறாரா என்பது குறித்த விவாதம் மறுபக்கம் அனல் பறக்கிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
‘விக்ரம்’ மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ‘லியோ’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘லியோ’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவிற்கு லோகேஷின் ஆஸ்தான நடிகரான கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே விக்ரம், கைதி படங்களைப் போல லியோவும் 'லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்' படத்தொடரின் ஒரு பாகம் தான் சொல்லப்படும் நிலையில் இந்தச் செய்தி அதை மேலும் உறுதி செய்திருக்கிறது.
அடுத்ததாக, ‘லியோ’ படத்திற்காக பாடல் ஒன்று பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த பாடலுக்காக கடந்த 10 நாட்களாக நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் ஒத்திகையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தினேஷ் மாஸ்டர் நடன இயக்கத்தில் உருவாகும் இந்த பாடலில், 500 நடனக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளதாகவும் தகவல் உலா வருகிறது.
உச்ச நட்சத்திரங்கள் ஆகட்டும், முன்னணி நடிகர்களாகட்டும், அறிமுகப் பாடல் என்பது முக்கியமான ஒன்றாக சினிமாவில் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘லியோ’ படத்தின் அறிமுகப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளாராம். ஏற்கெனவே, இந்த பாடலின் டிராக்கை அனிருத் பாடி பதிவு செய்துள்ள நிலையில், படத்தில் விஜய் குரலில் இடம்பெறும் வகையில் ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளதாம்.
நடிகர் விஜய்யின் படங்கள் என்றாலே, எப்போதும் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். அதுவும், லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணி என்பதால், இசை வெளியீட்டு விழா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில், ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தென் தமிழகத்தில் நடத்த விரும்புவதாகவும், குறிப்பாக, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நிகழ்ச்சியை நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
‘லியோ’ படம் வெளியீட்டுக்கு முன்பே ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் கல்லா கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, டிஜிட்டல் உரிமை மட்டும் ரூ. 120 கோடி, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ரூ.80 கோடி, இசை உரிமை ரூ.16 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெளிநாட்டு திரையரங்கு விநியோக உரிமை மட்டும் ரூ.60 கோடி என சொல்லப்படுகிறது. இதன்மூலம், ரஜினியின் ‘2.0’ படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தை முறியடித்து அதிக தொகைக்கு விற்பனையான தமிழ்ப் படம் என்ற சாதனையை ‘லியோ’ படைத்துள்ளதாம்.
விஜய்யின் 68-வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக, ஏற்கெனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ஒருபக்கம் ரசிகர்களை மகிழ்வித்தாலும், மறுபக்கம், ‘லியோ’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை இது குறைக்கும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 'லியோ படத்துக்கு அப்புறம் தான், அப்டேட் சொல்வேன்' என வெங்கட் பிரபுவே ஒரு பிரஸ் மீட்டில் பேசியிருந்தார். ஏனெனில், முன்னணி நடிகர் ஒருவரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது, அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்போது பட வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரம் முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வரை அனைத்துமே சற்று பாதிக்கும் என்பதால், அந்தப் படம் முடிந்தப் பின்னரே அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால், விஜய்-வெங்கட் பிரபு கூட்டணி படம் அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் சினிமாவைத் தாண்டி, தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திப்பது வழக்கம். சந்திப்பின்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட விஷயங்களை ஆலோசனை செய்வார். மேலும் விஜய் மக்கள் இயக்கம் மூலம், பல்வேறு நற்பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடுவார். அது எல்லா சமயங்களிலும் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னெடுப்பு விசயங்களாகவே பார்க்கப்படுகிறது. அப்படி சமீபத்தில் கவனம் பெற்ற சம்பவம்தான், கடந்த மாதம் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம், பொதுமக்களுக்கு உணவு வழங்கிய விவகாரமும்.
அதன் தொடர்ச்சியாகத்தான், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்ட விவகாரமும் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களை, அதாவது முதல் 3 இடங்களை பிடித்த மாணாக்கர்களை, வரும் ஜூன் 17-ம் தேதி நேரில் அழைத்து நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார் என்று விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்மூலம், அரசியலில் கால்பதிக்கும் திட்டத்தை முடிவு செய்தே விஜய் இவ்வாறு நடந்து வருவதாக அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
பிறந்தநாளன்று தன் அரசியல் நிலைப்பாட்டை அவர் அறிவிப்பாரென்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 'சுறா' படத்தில் The Leader ; 'தலைவா' படத்தில் Time To Lead என சினிமாவில் அரசியல் குறித்த தன் ஆர்வத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவார் விஜய். சர்கார் படம் அதன் உச்சம். ஆனால், இந்தப் படங்கள் போதிய வரவேற்பு பெறாமல் வந்த வேகத்தில் சென்றுவிட்டதால், அதற்குப் பின்னர் சத்தமில்லாமல் அடுத்த வேலைகளில் மும்முரமாகிவிடுவார் . அண்ணா ஹசாரேவைச் சந்தித்தது, இளைஞர் காங்கிரஸ் இணைய முயன்றது போன்ற கடந்த கால சம்பவங்களைப் புறந்தள்ளிவிட்டு, இந்த முறை சாதிப்பாரா விஜய் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.