நடிகர் திலகத்தின் 97ஆவது பிறந்தநாள் இன்று: சிவாஜி மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தமிழ்த் திரையுலகில் தனி முத்திரை பதித்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்த நாளான இன்று அவரது நினைவுகளை திரும்பிப் பார்க்கலாம்.
சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்முகநூல்
Published on

தமிழ்த் திரையுலகின் அடையாளமாகவே வாழ்ந்து மறைந்த சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன், அவர் நடித்த படங்கள் மூலம் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தெள்ளத்தெளிவான உணர்ச்சிப்பூர்வமான தமிழ் உச்சரிப்பு, கணீர் குரல் வளம், சிறப்பான நடிப்பாற்றல் போன்றவற்றால் நடிப்புலகின் தவப்புதல்வராக வலம் வந்தார், நடிகர் திலகம்.

பராசக்தி’யில் அவர் ஏற்ற குணசேகரன் என்ற அருமையான வேடம் இன்றும் மனதில் நமக்கு நிழலாடுகிறது. குறிப்பாக நீதிமன்றக் கூண்டில் நின்று சிவாஜி பேசும் வசனங்கள். பிற்காலத்தில் சிவாஜியின் அனைத்து சாதனைகளுக்கும் அப்படமே சிறந்த தொடக்கம்.

தேசத் தலைவர்களின் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டவர் சிவாஜி கணேசன். கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் படங்கள் நம் மனதை விட்டு அகலாதவை.

பராசக்திக்கு பிறகு சிவாஜிகணேசன் - மு.கருணாநிதி கூட்டணியில் வெளியான மற்றொரு வெற்றிப்படம் மனோகரா. அதிலும் வசனங்களில் அனல் பறக்கும். புகழ்பெற்ற இயக்குநர் ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடித்த பாலும் பழமும், பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பாசமலர், பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், படிக்காத மேதை போன்ற "பா.." வரிசைப் படங்கள் அவரது புகழை உச்சத்திற்கு கொண்டுச் சென்றன. பீம்சிங் - சிவாஜி கூட்டணியில் வந்த படங்களை உறவுகளின் பாசத்தை உயிர்ப்புடன் சொல்லும் காவியங்கள் என்றுதான் சொல்வார்கள்.

சிவாஜி கணேசன் ஏற்காத வேடங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு பலதரப்பட்ட வேடங்களையும் பூண்டுள்ளார். பணக்காரன், ஏழை, படித்தவன், கல்வியறிவு அற்றவன், காவல் அதிகாரி, ஆருயிர் காதலன், திருடன், அன்பான கணவன், வழக்கறிஞர், மருத்துவர், நோயாளி, மாற்றுத்திறனாளி, தகப்பன், ராணுவ வீரன் என நீள்கிறது அவர் தரித்த வேடங்கள். தமிழ்த் திரையுலகின் வரலாற்றை சிவாஜி கணேசன் என்ற மாபெரும் கலைஞனை தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது.

சிவாஜி கணேசன்
உடல்நிலை சீரானதை அடுத்து, தனி அறைக்கு மாற்றப்பட்டார் ரஜினிகாந்த்!

இந்தவகையில் தனது நடிப்பாற்றலாலும், வசனங்களாலும் என்றும் அவருக்கான இடம் நிலைத்திருக்கும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, நடிகர்கள் பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு ஆகியோர் வரவேற்பு அளித்தனர். மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்குள்ள சிவாஜி கணேசனின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். அங்கு திரையிடப்பட்ட சிவாஜி கணேசனின் திரையுலக வரலாறை அவரது குடும்பத்தினருடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுகளித்தார். அப்போது கவிஞர் வைரமுத்துவும் உடனிருந்தார். அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் சிவாஜி கணேசனுக்கு மரியாதை செலுத்தினர்.

சிவாஜி கணேசன்
‘நம்ம பார்ட்டி ஓயாது’ - The GOAT OTT ரிலீஸ் தேதியை அறிவித்தது Netflix..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com