தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் (80), வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் மணிகண்டன், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“நான் பேசுற மனநிலையிலயே இல்ல; கையெல்லாம் நடுங்குது. 10, 11 வருஷத்துக்கு முன்னாடி ஒரு குறும்படத்துக்காக டெல்லி கணேஷ் சாரை சந்திக்க இதே இடத்திற்கு நான் வந்தேன். அவ்வளவு சீனியர் நடிகர்... எந்த அனுபவும் இல்லாத என்னை சந்திக்க வேண்டிய அவசியமே இல்ல, ஆனாலும் சந்திச்சார்.
அவர் அன்றைக்கு வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தில் பாதிதான் என்னால் கொடுக்க முடிந்தது. ஒரு சீனியர் நடிகருக்கான எந்த வசதியும் என்னால் அப்போது அவருக்கு செய்து கொடுக்க முடியவில்லை. ஆனாலும் எனக்காக அவர் அந்தப் படத்தை நடித்துக் கொடுத்தார். நான் செய்த எல்லா தவறுகளையும் பொறுத்துக்கொண்டு, அவ்வளவு எனர்ஜியோடு வாய்ப்பு தேடும் ஒரு சாதாரண நடிகனைப் போல என்னோடு பழகினார்.
ரெண்டு மாதம் முன்புகூட எனக்கு ஃபோன் செய்தார். ஃபோனை நான் எடுத்தவுடன், ‘அடடா உனக்கு ஃபோன் பண்ணிட்டனா, வேற மணிகண்டனுக்கு ஃபோன் பண்ண நினைச்சேன். சரி சரி... ஃபோனை எடுத்தது எடுத்துட்ட, ஒரு 10 நிமிஷம் எங்கிட்ட பேசு’ என்றார். ஒரு சின்ன பையன்... இயக்குநருக்கான எந்த அனுபவமும் இல்லாத ஒரு பையன்... என்னிடமே அவ்வளவு ஃப்ரொஃபஷனலாக இருந்தார். அந்தளவுக்கு நடிப்புக்கலையை ரசித்திருந்தார்.
ஒருமுறை நாங்கள் ஒரு படத்தில் இணைந்திருந்தோம். அப்போது அவர் இறந்துவிட்டாரென வதந்தி வந்தது. பதற்றத்துடன் அவருக்கு அழைத்து, ‘எப்பிடியிருக்கீங்க சார்’ என்றேன். ‘கவலைப்படாத... உன் படத்தை முடிக்காம சாகமாட்டேன்’ என்றார்.
நிறைய சமயம் ரொம்ப எமோஷனலாகவும், நிறைய சமயம் அவ்வளவு நகைச்சுவை உணர்வோடும் பேசியிருக்கிறார் என்னோடு. அவர் வாழ்க்கையிலிருந்து நான் எடுத்துக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கு” என்றார்.