Raayan review | ராமர், ராவணர் ரெபரென்ஸ்... அடங்காத அசுரனாக ஆர்ப்பரித்தாரா ராயன்?
ராயன்(2.5 / 5)
பாட்ஷா - புதுசமையல் - ராயன்
தாய் தந்தையை இழந்த, காத்தவராயன் (தனுஷ்) தன் சகோதரர்கள் முத்துவேல் ராயன், மாணிக்கவேல் ராயன் (சந்தீப், காளிதாஸ்) மற்றும் சகோதரி துர்கா (துஷாரா) உடன் பிழைப்பு தேடி சென்னை வருகிறார். வந்த இடத்தில் அவர்களுக்கு அடைக்களம் அளிக்கிறார் சேகர் (செல்வராகவன்). தன் குடும்பத்துக்காக உழைத்து மெல்ல மெல்ல ஒரு ஃபாஸ்ட்ஃபுட் கடை வைத்து நடத்துகிறார் ராயன்.
தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணம், தம்பிக்கு நல்ல படிப்பு, தறுதலையாக சுற்றும் மற்றுமொரு தம்பிக்கு பொறுப்பான ஒரு குடும்பம், இவை எல்லாம் அமைய வேண்டும் என உழைக்கிறார். இதனிடையே துரை (சரவணன்) - சேது (எஸ்.ஜே.சூர்யா) என்ற லோக்கல் தாதாக்கள் இடையே உள்ள பகை ராயன் குடும்பத்தின் நிம்மதியைக் குழைக்க வருகிறது. அதன் பின் நடக்கும் சிக்கல்கள், துரோகங்கள், பகை என்ன ஆகிறது?
ரவுடிசத்தை அழிக்க, இரு கும்பல் நடுவே பகையை கொம்பு சீவும் காவலதிகாரியின் (பிரகாஷ்ராஜ்) திட்டம் என்ன ஆனது? என்பதெல்லாம்தான் ராயன்.
ஒரு இயக்குநராக `பா பாண்டி’க்குப் பின் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்திருக்கிறார் தனுஷ். பழகிய `பாட்ஷா’வையே தன்னுடைய ஸ்டைலில் பரிமாறி இருக்கிறார். இரண்டு தம்பி , ஒரு தங்கை. அவர்களே வாழ்க்கை, என உழைக்கும் டிபிக்கல் ரஜினி சினிமாதான். 'ஆறிலிருந்து அறுபது வரை' முதல் 'பாட்ஷா' வரை ரஜினியே பல படங்களில் போட்டு துவைத்த உடை. ஆனாலும் அதை ஃபிரெஷ்ஷாக எடுத்து மாட்டியிருக்கிறார் தனுஷ். முதல்பாதி படம் வரை அதை கச்சிதமாகவும் கொடுத்திருக்கிறார்.
படம் தொடங்கி சில நிமிடங்களிலேயே எல்லா கதாப்பாத்திரங்களையும் அறிமுகம் செய்வதுடன், அவற்றின் குணாதீசியங்கள், நோக்கங்களையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறார். ஒரு காட்சியை வடிவமைத்திருப்பதும், அதை நேர்த்தியாக திரையில் கொண்டு வந்திருப்பதற்கும் தனி பாராட்டுகள். நடிப்பாக தனுஷ் இறுக்கமான முகத்துடன் முரட்டு ராயனாக கவனம் ஈர்க்கிறார். பேச்சிலேயே மிரட்டுவது, விளைவுகளை நினைத்து பதறுவது, துரோகத்தை எதிர்கொள்ள முடியாமல் கலங்குவது எனப் பல இடங்களில் தரம்.
படத்தில் உயர்ந்து நிற்கிறார் ரஹ்மான்
அடுத்தபடியாக கவனம் ஈர்ப்பது சந்தீப் கிஷன். எந்த பொறுப்பும் இல்லாமல், ஊர் வம்பை விலைக்கு வாங்கும் கதாபாத்திரம். கூடவே அந்தக் கதாப்பாத்திரத்தின் மன ஓட்டத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறார். அபர்ணா பாலமுரளிக்கு முதல் பாதியிலும், துஷாராவுக்கு இரண்டாம் பாதியிலும் அழுத்தமான காட்சிகள் உண்டு. அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள். விவேகம் பட விவேக் ஓபராய் ரோல் போல, ராயனில் செல்வராகவன். ஹீரோவுக்கு பில்டப் கொடுக்கும் கதாப்பாத்திரம் என்றாலும் நடிப்பில் குறை ஏதும் இல்லை. எஸ்.ஜே.சூர்யா வழக்கம் போல அசத்துகிறார்.
சின்ன ரோலில் வந்தாலும் வரலட்சுமி வரும் இடங்களில் க்ளாப்ஸ் பறக்கிறது.
இவர்கள் இல்லாமல் காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ், சரவணன், திலீபன் ஆகியோரும் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் கோணங்களும், பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சிகள் பிரம்மிப்பூட்டுகின்றன. இவர்களைத் தாண்டி உயர்ந்து நிற்பது ஏ ஆர் ரஹ்மானின் இசைதான். ஓ ராயா, வாட்டர் பாக்கெட், ராயன் ரம்பிள், அடங்காத அசுரன் என அத்தனையும் படத்தில் மிகக் கச்சிதமாக வந்திருக்கிறது. படத்தின் பின்னணி இசை தனி பலம். பல காட்சிகளை வலுவாக தூக்கி நிறுத்துவதே பின்னணி இசைதான். சந்தீப், அபர்ணா பாலமுரளி குத்தாட்டம் போடும் 'வாட்டர் பாக்கெட்'டில் தனித்து தெரிகிறது பாபா பாஸ்கரின் நடன வடிவமைப்பு.
ராமர், ராவணர் ரெபரென்ஸ்
நடிப்பாக, தொழில்நுட்ப ரீதியாக எல்லாவற்றையும் கச்சிதமாகக் கொடுத்திருந்தாலும், எழுத்தில் இன்னும் கொஞ்சம் நேர்த்தி இருந்திருக்கலாம், குறிப்பாக இரண்டாம் பாதியில். எதிர்பாராத பிரச்னையில் குடும்பம் சிக்குவது வரை பரபரவென நகரும் படம், இரண்டாம் பாதியில் திணறுகிறது.
குறிப்பாக இரண்டு கதாப்பாத்திரங்கள் செய்யும் ஒரு செயலுக்குப் பிறகு மிகவும் தடுமாறியபடியே நகர்கிறது. ஒரு கதாப்பாத்திரத்தின் மனமாற்றத்திற்கும் எந்த அழுத்தமான காரணமும் இல்லை. அதனாலேயே சும்மா நாமளும் அழுதுவைப்போம் என அழுதுவைக்கிறது அந்தக் கதாபத்திரம். நமக்கோ ஞே என இருக்கிறது.
முதல் பாதியில் அழுத்தமான காட்சிகளோடு கூட்ஸ் வண்டி வேகத்தில் செல்லும் திரைக்கதை. இரண்டாம் பாகத்தில் எந்த அழுத்தமும் இல்லாமல் புல்லட் டிரெய்ன் வேகத்தில் செல்கிறது. சட்டென சத்தம் போட்ட மொபைலை, சைலென்ட் செய்துவிட்டு மீண்டும் திரையை பார்ப்பதற்குள் ஆறு மாத குழந்தையைக் காட்டுகிறார்கள்.
'இவங்க எதுக்குடா கும்பலா போகி கொண்டாடிட்டு இருக்காங்க' என்பதாக படத்தில் பணியாற்றிய அனைவரும் போகி போகி என ஆடிப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். நமக்குத்தான் பொங்கலே இல்லையேடா என்று வேறு நம் மைண்டுவாய்ஸ் சத்தமாய் கேட்டுத் தொலைக்கிறது. ராமர், ராவணர் ரெபரென்ஸ், குறியீட்டு பஞ்ச் எல்லாம் இருக்கவே செய்கிறது. ஆனால், எதற்கு என்றுதான் தெரியவில்லை.
படத்தில் வன்முறைக்காட்சிகள் ஏராளம், ஏ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை மனதில் வைத்துக் கொள்ளவும். முதல் பாதியைப் போலவே இரண்டாம் பாதியும் அமைந்திருந்தால் 'அடங்காத அசுரன்' நிச்சயம் ஆர்ப்பரித்திருப்பான்.