கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளமும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தப் படம் ‘2018’. இந்தப் படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், நரேன், ஆசீஃப் அலி, வினீத் சீனிவாசன், லால், அபர்ணா பாலமுரளி, கலையரசன், தன்வி ராம் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. நோபின் பாலி பின்னணி இசை அமைத்திருந்தார். கடந்த மே மாதம் 5 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மலையாள திரையுலகில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த முதல் படம் என்ற சாதனையையும் ‘2018’ படம் பெற்றது.
இந்நிலையில், ‘2018’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப், தனது அடுத்தப் படத்துக்காக லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி, கன்னட நடிகர் கிச்சா சுதீப், தமிழ் திரையுலகிலிருந்து நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஏற்கனவே, மூன்று நடிகர்களையும் தனித்தனியாக சந்தித்து இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப், கதை சொல்லியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ‘இந்தியா டூடே’ ஆங்கில செய்தி இணையதளத்துக்கு பேட்டியளித்திருந்த இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப், நிவின் பாலி மற்றும் விஜய் சேதுபதிக்கான ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்திருப்பதாகவும், அதை நிவினிடமும் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த இணையதளத்திற்கு தெரிவித்திருந்ததாவது, “நிவின் பாலியுடன் நான் கதை தொடர்பாக பேசி வருகிறேன். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ராஷ்மிகா மந்தனாவையும் கொண்டு வர விரும்புகிறேன். எனக்கு ராஷ்மிகா பிடிக்கும்; நான் அவரது வேலையின் தீவிர ரசிகன். இந்த புராஜெக்ட் இன்னும் விவாத கட்டத்தில் உள்ளது” என்று தெரிவித்திருந்தார். எனினும், நிவின் பாலி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகவுள்ள படத்தைத்தான் லைகாவுடன் இணைந்து எடுக்கவுள்ளரா, இல்லை வேறு எதுவும் படமா என்று தகவல் வெளியாகவில்லை.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.