திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!

திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
Published on

1938-ல் நடிகர்களுக்கென தனியாக ஒரு சங்கம் வேண்டும் என்கிற குரல் வலுக்கத் தொடங்கியது. அதற்கான ஓர் அமைப்புக் கூட்டமும் சென்னையில் இருக்கும் காங்கிரஸ் மாளிகையில் வைத்து அந்த ஆண்டின் டிசம்பர் மாதம் நடைபெற்றது. நடிகர்கள் தியாகராஜ பாகவதர், கே.பி.கேசவன், பி.எஸ்.வேலுநாயர் போன்றோர் முறையே செயலாளர், துணைத் தலைவர் மற்றும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நடிகர்களுக்கிடையே இருந்த ஒற்றுமையின்மை காரணமாக, ஆரம்பித்த ஆறே மாதங்களில் இந்த சங்கம் இழுத்து மூடப்பட்டது.

அதே 1938, அதே டிசம்பர் மாதத்தில்தான் தனித் தமிழ்நாடு திட்டம் பற்றி பேச ஜஸ்டிஸ் கட்சியினரால் மாகாணத் தமிழர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. மாநிலத்தில் காங்கிரஸ் காட்சியின் தலைவர் ராஜாஜியால் கட்டாய இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் ஒன்றும் நடந்தது. பெரியார் உள்பட 1200 பேர் சிறைக்கு சென்ற இந்தச் சம்பவத்திற்கு பிறகே இந்த மாகாண தமிழர் மாநாடு நிகழ்ந்தது. எப்போதெல்லாம் தமிழக அரசியலில் மிகப்பெரும் முன்னெடுப்புகள் நிகழ தொடங்குகிறதோ, அப்போதெல்லாம் தமிழ் சினிமாவிலும் ஏதேனும் முன்னெடுப்புகள் இருந்துகொண்டே இருப்பதை நீங்கள் இதன்மூலம் உணரலாம்.

"உங்கள் சக்தியின் கீழ் உள்ள உங்கள் தொழிலை நூறு சதவீதம் சுதேசிமயமாக்க எல்லா வகையிலும் செயல்படுங்கள். உங்கள் நடிகர், நடிகையருக்கு அணிவிக்கும் ஆடைகள், ஆபரணங்கள், அரங்க நிர்மாணங்கள், நீங்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள் - நாடு இப்போதைக்கு உற்பத்தி செய்ய முடியாத மெஷின்களை தவிர - மற்ற எல்லாவற்றிக்கும் உள்நாட்டு பொருட்களையே உபயோகியுங்கள்" என்றொரு கருத்தை இந்தியத் திரைப்பட தொழில் மாநாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி பேசினார். சுதேசி ஆடைகளை அணிவதும், சுதேசி பொருட்களையே உபயோகிக்க மக்களை ஊக்குவிப்பதும் காங்கிரஸின் கொள்கையாக இருந்தது. அதையே சினிமாவிலும் கடைபிடிக்கச் சொல்லி ஒரு திரைப்பட மாநாட்டிலேயே பேசியதெல்லாம் வரலாறு.

1939-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் மிக உக்கிரமாக தொடங்கியது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் இருந்தது. பிரிட்டிஷாருக்கு ஆதரவாக போரிட இந்தியர்களும் தேவைப்பட்டனர். இதற்கு எதிராக காங்கிரஸ் அனுப்பிய எல்லா மனுக்களையும் பிரிட்டிஷ் அரசு நிராகரித்தது. இதன் காரணமாக எல்லா மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் அரசு தனது மந்திரி சபைகளை ராஜினாமா செய்தது. அந்நேரத்தில் காங்கிரஸுக்கு ஆதரவான பல கருத்துக்களை கொண்டு வெளிவந்திருந்த கல்கியின் 'தியாக பூமி' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. பிரிட்டிஷாருடன் காங்கிரஸுக்கு ஏற்பட்ட இந்தக் கருத்து வேறுபாட்டின் காரணமாக 'தியாக பூமி' படத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதே 1939-ல் ஜஸ்டிஸ் கட்சியினரால் "தமிழ்நாடு தமிழருக்கே" என்கிற விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் முக்கியப் பேச்சாளராக அண்ணா இருந்தார்.

1941-ஆம் ஆண்டு ஜப்பான், ஹிட்லர் மற்றும் முசோலினிக்கு ஆதரவாக உலகப் போரில் குதித்தது. இதனால் உலகெங்கும் படங்களின் வசூல் பாதித்தது. கச்சா ஃபிலிம் தட்டுப்பாடும் தொடங்கியது. எந்த நேரத்தில் அபாய சங்கு ஒலிக்குமோ என்கிற பயத்தில் சென்னை நகர மக்கள் வாழ்ந்தனர். 1942, பிப்ரவரி மாதத்தில் "அத்தியாவசியப் பணிகளில் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் சென்னை நகரை விட்டு வெளியேறி வேறு மாவட்டங்களுக்கு போய்விடவேண்டும்" என்று அரசாங்கம் அறிவித்தது. எப்போது வேண்டுமானாலும் சென்னை தாக்கப்படலாம் என்று மக்கள் கருதியதால், உடனே தப்பித்தோம், பிழைத்தோம் என சென்னையை விட்டு வெளியேறினார்கள். திரைப்படத் தொழில் முற்றிலுமாக முடங்கியது. தென்னிந்தியா சினிமா வர்த்தக சபை தனது அலுவலகத்தை தூக்கிக்கொண்டு கும்பகோணம் நகருக்கு இடம்பெயர்ந்தது.

ஜப்பான் உலகப் போரில் ஈடுபட்டதால் தமிழ் சினிமா படங்களின் சந்தையான பர்மா, மலேயா, இந்தோ-சீனா ஆகிய நாடுகளுக்கு தமிழ்ப்படங்கள் போவது தடைபட்டது. இதற்கிடையில், 1937-ல் தேர்தலுக்கு பிறகு ராஜாஜி தலைமையிலான அரசு சென்சார் போர்டில் நல்ல மாற்றங்களை கொண்டுவந்ததை ஏற்கெனவே படித்தோம். அது எல்லாமே 1939 வரைதான். காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்ததும் மீண்டும் சென்சார் போர்டு தனது கத்திரிக்கோலை அகலமாகத் திறந்துகொண்டு கோரமாக வாய்ப்பிளந்து கடிக்கத் தொடங்கியது. அதுமட்டுமின்றி, 1942-ல் யுத்த நிதி திரட்டித் தரும்படியும், யுத்த ஆதரவு பிரசாரப் படங்களை தயாரித்து தரும்படியும் பிரிட்டிஷ் அரசு பட முதலாளிகளை நிர்பந்திக்கத் தொடங்கியது.

அதுவரை தேசப்பற்று மிக்க மனிதர்களாய் தங்களை வெளிக்காட்டிக் கொண்டிருந்த சில தயாரிப்பாளர்கள் பிரிட்டிஷாரின் விருப்பப்படி யுத்த ஆதரவு பிரசார படங்களை தயாரித்துக் கொடுக்க தொடங்கினர். மிக முக்கியமாக தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் வேண்டுகோளையும் மீறி, யுத்த பிரசார நிதிக்காக இசைக் கச்சேரிகளையும், நாடகங்களையும் நடத்தத் தொடங்கினார். இதற்கு பதிலாக பிரிட்டிஷ் அரசு அவருக்கு திவான் பகதூர் பட்டம் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது. இது ஒருபுறமிருக்க, சென்னையை விட்டு வெளியேறிய லட்சக்கணக்கான மக்களோடு பல படத் தயாரிப்பாளர்களும் சேர்ந்தே காணாமல் போனார்கள்.

ஆனால், அதைவிட பெரிய இடியாக, 1943-ஆம் ஆண்டு தமிழ்த் திரைத்துறைக்கும், தமிழக அரசியலுக்கும் பெரும் பாலமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுள் மறக்கவே இயலாத மனிதராக வாழ்ந்த சத்தியமூர்த்தி காலமானார். இது உண்மையிலேயே தமிழ் சினிமாவிற்கும், தமிழக அரசியலுக்கும் ஒரு பெருந்துயரமாக அமைந்தது என்றால் மிகையில்லை. சத்தியமூர்த்தி இயல்பிலேயே கலையுள்ளம் படைத்தவர். பம்மல் சம்பந்த முதலியாரின் 'மனோகரா' நாடகத்தில் மனோகரனாக தோன்றி நடித்துப் பாராட்டு பெற்றவர். அவர் மறைவின் தாக்கம் பின்னர் காங்கிரஸை எங்ஙனம் பாதித்தது என்பதை பின்வரும் பகுதிகளில் விரிவாகவே காண்போம்.

"சினிமாவிலே ராமர், கிருஷ்ணர் மற்றும் நாரதர் வேடங்களில் யாரோ ஒருவரைக் காணும்போது நான் வேதனை அடைகிறேன். இவை எல்லாம் கண்டனத்துக்குரியவை. திரைப்படங்களை உருவாக்கிய விதத்தில் இந்த தெய்வீக பாத்திரங்களின் உண்மைத்தன்மை சீரழிக்கப்பட்டிருக்கின்றன. இனக்கவர்ச்சியின் கொடுமைக்கும் இதில் இடமளிக்கப்பட்டிருக்கிறது. சினிமாவில் ராமரையும், கிருஷ்ணரையும், நாரதரையும் காண்பிக்கும் விதத்தை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. வெட்கப்படத்தக்க இந்த இழிந்த செயலை நான் ஒருபோதும் ஆதரிப்பதற்கில்லை" என்று ஓர் ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் தலைவர் ராஜாஜி கூறியுள்ளார்.

இதற்கு நேரெதிராக சி.என்.அண்ணாதுரை, காஞ்சிபுரத்தில் ஒரு நாடகக் குழுவை தொடங்கியிருந்தார். இந்தக் குழுவிற்கு 'திராவிட நடிகர் கழகம்' என்று பெயர் சூட்டினார்கள். அண்ணாதுரையின் முதல் நாடகமான 'சந்திரோதயம்' அரங்கேறியது. இதில் ஜமீன்தார் கதாபாத்திரத்தில் அண்ணாதுரையே நடித்தார். இப்படி ஒருபக்கம் காங்கிரஸ் தலைவர் ஒருவர் சினிமாவின் மீது வெறுப்பை உமிழ, இன்னொருபக்கம் அப்போது வளர்ந்து வர துவங்கியிருந்த திராவிடர் கழக உறுப்பினர்களே சொந்தமாக நாடகங்கள் எழுதி நடித்துக்கொண்டிருந்தனர். இந்த வித்தியாசமே வரப்போகும் மிகப்பெரும் அரசியல் மாற்றத்துக்கு கருவாக அமைந்தது.

1946-ல் ஜூபிடர் ஸ்டூடியோஸை சேர்ந்த சோமு அப்போது கதை வசனம் எழுதுவதில் பிரபலமாக இருந்த ஏ.எஸ்.ஏ. சாமியை அழைத்து ஒரு படத்திற்கு கதை, வசனம் எழுதி அதை இயக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்படியே கதையை உருவாக்கிய சாமி, படத்திற்கு 'ராஜகுமாரி' என்று பெயரிட்டார். முதலில் இக்கதையில் டி.ஆர்.ராஜகுமாரியும், பி.யு. சின்னப்பாவும் நடிக்கவேண்டும் என்று சோமு விரும்பினார். ஆனால், சாமியோ படத்தை குறைந்த செலவில் தயாரிக்கவேண்டும் என்று எண்ணியிருந்தார். அதனால் புதிதாக ஒருவரை நாயகனாக அறிமுகப்படுத்த அவர் விரும்பினார். அதன்படி சோமுவிடம், "நீங்கள் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தால் இப்போது சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் எம்.ஜி.ராமச்சந்திரனை இந்தப் படத்தில் கதாநாயகனாக போடலாம்" என்று யோசனை கூறினார். சோமுவும் ஒப்புக்கொண்டார். எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற நடிகர் இப்படித்தான் நாயகனாக உருவானார்.

இதற்கு முன்னர் இதே ஜூபிடர் ஸ்டுடியோவில் 'உதயணன் - வாசவதத்தா' படத்தின் படப்பிடின்போது இசையமைப்பாளர் சிதம்பரம் ஜெயராமன் தனது மைத்துனருக்கு வசனம் எழுதும் வாய்ப்பு தரவேண்டும் என்று சாமியிடம் கேட்டிருந்தார். அதை நினைவில் வைத்திருந்து 'ராஜகுமாரி' படத்திற்கு வசனம் எழுத அந்த மைத்துனரை அழைத்தார். அவர்தான் மு.கருணாநிதி. இவ்வாறாக எம்.ஜி.ராமச்சந்திரன் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு, வசனம் எழுத மு.கருணாநிதி வந்து சேர்ந்தார். திரைப்படம் உருவாகத் தொடங்கியது. அங்கே ஒரு சரித்திரமும் தனது பேனாவில் மை நிரப்பி நடக்கப்போகும் சம்பவங்களை எல்லாம் பதிவு செய்ய காத்திருந்தது.

(திரை இன்னும் விரியும்...)

- பால கணேசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com