வாழ்க்கை வரலாற்றுக் கதைகள் சினிமாவாகி வரும் காலம் இது.
சமீபத்தில் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு ’சஞ்சு’ என்ற பெயரில் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. ரன்பீர் கபூர் நடித்துள்ள அந்தப் படம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ், தெலுங்கில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ’நடிகையர் திலகம்’ என்ற பெயரில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. அடுத்து, கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை கதை இந்தியில் தயாராகி வருகிறது. இதில் ரிச்சா சதா நடிக்கிறார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜ சேகர ரெட்டியின் வாழ்க்கை கதை படமாகியுள்ளது. இதில் மம்மூட்டி நடித்துள்ளார். முன்னாள் முதல்வர்கள் என்.டி.ராமாராவ், எம்.ஜி.அர் ஆகியோரின் வாழ்க்கைக் கதைகளும் படமாகி வருகின்றன. ஜெயலலிதாவின் வாழ்க்கையும் படமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை படமாக இருக்கிறது. மிதாலி ராஜ் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டவர். இப்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் இவர். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி யில் 6ஆயிரம் ரன்களை குவித்துள்ள இவரது வாழ்க்கை கதையை படமாக்க, வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு மிதாலி ராஜூம் அனுமதியளித்துள்ளார்.
இதை உறுதிப்படுத்திய மிதாலி, தனது வாழ்க்கை படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். தனது தனித்தன்மை குணங்கள் பிரியங்கா சோப்ராவுடன் ஒத்துப்போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மிதாலி ராஜ் கேரக்டரில் டாப்ஸி நடிக்க இருக்கிறார். இது தொடர்பாக வயாகாம் நிறுவனம் அவரிடம் பேசியுள்ளதாகத் தெரிகி றது.
இதுபற்றி டாப்ஸி கூறும்போது, ‘இந்தப் படம் பற்றி இப்போதே பேசுவது சரியாக இருக்காது. இன்னும் ஸ்கிரிப்ட் என்னிடம் வரவில்லை. கதை இப்போதுதான் உருவாகிக்கொண்டிருக்கிறது. அதில் நடிக்க என்னை அழைத்தால் மகிழ்வேன். விளையாட்டு வீராங்கனையின் கதையில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை’ என்று கூறியுள்ளார்.