விஜய்யின் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் வேலைகளுக்காக படக்குழு காஷ்மீரில் முகாமிட்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பூஜை நிகழ்ச்சியின் வீடியோக்கள் என அடுத்தடுத்து அப்டேட்டாக விட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ.
அதன்படி சஞ்சய் தத், த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ் என பல நட்சத்திர பட்டாளமே லோகேஷ் இயக்கத்திலான தளபதி 67ல் நடிக்கிறார்கள்.
இதனையடுத்து வெளியிடப்பட்ட பட பூஜையிலும் மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றிருந்தனர். இதனிடையே பிப்ரவரி 1, 2 , 3 ஆகிய தேதிகளில் படத்தின் அப்டேட்கள் ஒவ்வொன்றாக வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது தளபதி 67 படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை யார் பெற்றிருக்கிறார்கள் என்பதே அந்த அப்டேட். அதன்படி சன் டிவியும், நெட் ஃப்ளிக்ஸும் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த அப்டேட் ஏற்கனவே வெளியான தகவல் என்பதால் ரசிகர்களுக்கு சற்று சுணக்கத்தையே கொடுத்திருக்கிறது.
இதனை உறுதி செய்யும் விதமாக லோகேஷ் கனகராஜின் நண்பரான இயக்குநரும் வசனகர்த்தாவுமான ரத்ன குமாரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸை கிண்டலடித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் சாட்டிலைட் உரிமம் குறித்த அப்டேட்டை ரீட்வீட் செய்த ரத்ன குமார், “காஷ்மீரில் டவர் இல்லையா? அப்டேட்லாம் லேட்டா வருது. முக்கிய அப்டேட்ட விடுங்க அட்மின்” என பதிவிட்டு கிண்டலடிக்க, அடுத்த டிஜிட்டல் ரைட்ஸ் பற்றிய அறிவிப்பில் RRR படத்தின் வைரல் வசனமான “அண்ணா ஏதேதோ பேசுறியேனா” என்ற டெம்ப்ளேட்டையும் பகிர்ந்து நக்கலடித்திருக்கிறார்.
இதன் மூலம் தளபதி 67 படத்தின் முக்கியமான அப்டேட் என்னவாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் குழம்பிப் போய் அதீத ஆவலோடு காத்திருக்கிறார்கள். முன்னதாக, விக்ரம் படத்துக்கு ப்ரோமோ வீடியோ வெளியிட்டதை போல தளபதி 67க்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என தகவல் வந்தது. ஒருவேளை அதுவாக இருக்குமோ என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.