மேல் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்லவுள்ளநிலையில், செய்தியாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் பன்முகத் திறமை கொண்டவரான டி. ராஜேந்தர், உடல்நிலை குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம் என டி.ராஜேந்தரரின் மகனும், முன்னணி நடிகருமான சிம்பு அண்மையில் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சிகிச்சைக்காக முதலில் சிங்கப்பூர் செல்வதாக கூறப்பட்ட நிலையில், டி. ராஜேந்தர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் டி.ராஜேந்தர் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்யவும், அறுவை சிகிச்சையை விரைவாகச் செய்யவும், அவருக்கு முன்னதாகவே, அவரின் மகன் சிம்பு அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து இன்று இரவு 9.30 மணி விமானத்தில் அமெரிக்கா அழைத்து செல்லப்படுகிறார் டி. ராஜேந்தர். அமெரிக்கா செல்வதற்கு முன்பு விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மருத்துவமனையில் நான் இருந்த நேரத்தில் சரியான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. தன்னம்பிக்கையை மீறியது என் கடவுள் நம்பிக்கை தான். இறைவனை மீறி விதியை மீறி எதுவும் நடக்காது. பலர் செய்த பிரார்த்தனை ஆராதனையால் இன்று நான் நிற்கிறேன். அன்பிற்குரிய அண்ணன் முதல்வர் ஸ்டாலின் அய்யா அன்பைக் காட்டி தோளில் தட்டி நம்பிக்கை ஊட்டினார். என் மகன் சிலம்பரனுக்காக தான் உயர் சிகிச்சைக்கு செல்கிறேன்.
தனக்கு உடல் நிலை சரியில்லை என்றவுடன் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல சிம்பு ஏற்பாடு செய்தார். மேலும் கடந்த 12 நாட்களுக்கு மேலாக என்னுடனே இருக்கின்றார் சிம்பு. அவரது பட வேலைகளையும் விட்டுவிட்டு என் உடல் நிலை தான் முக்கியம் என்று என்னுடனே இருக்கின்றார். இப்படி ஒரு மகனை பெற்றது இந்த ஜென்மத்தில் செய்த பாக்கியம். படத்தில் ஒரு வல்லவன் என் மகன், வாழ்க்கையில் ஒரு நல்லவன். சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் கமல்ஹாசன், டி. ராஜேந்தரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.