சுஷாந்தின் முன்னாள் மேலாளர் அங்கிட் பல திடுக்கிடும் சந்தேகங்களை எழுப்பியுள்ளார்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அவரது தற்கொலை தொடர்பான வழக்கை போலீஸ் விசாரித்து வருகிறது. சுஷாந்தின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி ரியா, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக், அவரது மேலாளர் சாமுவேல் மிரான்டா, ஸ்ருதி மோடி ஆகிய 6 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டுதல், நம்பிக்கை மோசடி, திருட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. பல கோணங்களில் பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சுஷாந்தின் முன்னாள் மேலாளர் அங்கிட் பல திடுக்கிடும் சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு பேசிய அவர், சுஷாந்தின் ஊழியர்களாலே அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், சுஷாந்த் என்னை ஒரு சகோதரன் போல பார்த்துக்கொள்வார்.
அவர் மன உளைச்சலில் எல்லாம் இல்லை. எப்போதாவது இறந்த தன் தாயை நினைத்து கவிதை எழுதுவார். அழுவார். அவரைப்போல நேர்மறை எண்ணம் கொண்ட ஒருத்தர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நம்பவே முடியாது. அவர் அறையின் கதவுகள் எப்போது பூட்டப்படாது. அப்படி இருக்கையில் அவர் தற்கொலை செய்துகொண்ட அன்று அவர் அறை கதவு மூடப்பட்டுள்ளது. அடுத்த நாள் ஊழியர்கள் அந்த கதவை உடைக்காமல் ஏன் வேறொரு சாவிக்காக காத்திருந்தனர். இது கொலைதான் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறியுள்ள அவர், தனக்கு சில நாட்களாக கொலை மிரட்டல் வருவதாகவும், சுஷாந்த் போல தானும் கொல்லப்படுவேன் என மிரட்டல் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.