'எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இயக்குனர் பாரதிராஜாவாக இருக்க விரும்புகிறேன்' என்று பாரதிராஜா தெரிவித்தார்.
சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார், மீனாட்சி, கபடி வீராங்கனை ஜீவா உட்பட பலர் நடித்துள்ள படம், ’கென்னடி கிளப்’. ஆகஸ்ட் 15 இப்படம் வெளியாகும் இந்தப் படத்துக்கு இமான் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர்கள் அகத்தியன், எஸ்.டி.சபா, எழில், லெனின்பாரதி, ராம்பிரகாஷ் ராயப்பா, தயாரிப்பாள ர்கள் பி,எல்,தேனப்பன், கதிரேசன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில், சசிகுமார் பேசும்போது, ‘’ 'கென்னடி கிளப்' படத்தின் நாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள்தான். பயிற்சியாளர் செல்வமாக நான் நடித்திருக்கிறேன். பாரதிராஜாவுடன் நடிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரை சுசீந்திரன் அழகாக கையாண்டார். இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க முடிவு செய்திருக்கிறோம்’’ என்றார்.
இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, ‘’ இதற்கு முன்பு சுசீந்திரனுடன் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், இதில் ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன். இந்தப்படத்தில் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத கபடி வீராங்கனைகள் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள். அர்ப்பணிப்போடு நடித்திருந்த இந்தப் பெண்களுக்கு நன்றி கூற வேண்டும். சுசீந்திரன் மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்கு நல்லுச்சாமி கொடுத்து வைத்தவர். அம்பானி போல் வசதியாக வாழ விருப்பமில்லை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இயக்குநர் பாரதிராஜாவாகவே பிறக்க விரும்புகிறேன். இந்தப் படம் சினிமா அல்ல. தென் மண்ணின் வாழ்க்கை. நல்லுச்சாமியாகத்தான் இதில் நடித்திருக்கிறேன். சசிகுமாரை பார்க்கும்போது அவர் முகத்தில் குழந்தைத்தனம் இருக்கும். சிறு குழந்தைகளுக்கும் அவர் முகம் பிடிக்கும். அவருடன் நெருங்கி பழகும்போது தான் அவர் இன்னும் குழந்தையாக இருக்கிறார் என்று தெரிகிறது’’என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பாரதிராஜா கபடி வீராங்கனைகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.